எஞ்சினியரிங் பட்டப்படிப்பின் அவல நிலை!



*சர்ச்சை

டிமாண்ட் அண்ட் சப்ளை தியரி என்று பொருளாதாரத்தில் ஒரு பதம் உண்டு. ஒரு பொருளுக்கான தேவையைப் பொறுத்தே அந்தப் பொருளுக்கான மதிப்பு, விலை மாறுபடும். உதாரணமாக விவசாயத்தையே எடுத்துக் கொள்வோம். விவசாய விளைச்சல் அதிகமானால் குறிப்பிட்ட உணவுப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காது. இதை நாமே அனுபவப்பூர்வமாகப் பார்த்திருப்போம்.

தக்காளி சீசனில் தக்காளி விவசாயி, (சில ஆண்டுகளுக்கு முன்) ஒரு கிலோ ரூ.10 என்ற விகிதத்தில் கிராமத்தில் உள்ள வீடுகளில் கொடுத்துச் செல்வார். காசு அடுத்து வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று வலுக்கட்டாயமாக ஒவ்வொரு வீட்டிலும் கிலோ கணக்கில் கொடுத்து தன்னிடம் உள்ள தக்காளியைக் காலி செய்துவிடுவார். இதற்கு காரணம் அருகில் உள்ள நகரத்திற்கு தக்காளியை எடுத்துச் சென்று மொத்தவிலை கடையில் விற்றால், எடுத்து செல்வதற்கான வாகன வாடகை அந்த விவசாயிக்கு கூடுதல் செலவு. இதை தவிர்க்க அந்த விவசாயி மொத்த உற்பத்தியை கிராம மக்களிடம் வழங்கி குறைந்தபட்ச லாபம் பெற முயல்கிறார். எஞ்சினியரிங் படிப்பும் அப்படித்தான் ஆகிவிட்டது. எஞ்சினியரிங் கல்விக்கும், தக்காளி விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம்.

தக்காளி விவசாயிக்கு ஏற்பட்டது போன்ற நிலை தற்போது தமிழக தனியார் எஞ்சினியரிங் கல்வித்துறைக்கு நிகழ்ந்திருக்கிறது. தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழகத்தில் எஞ்சினியரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டன. பெரு முதலாளிகளை பொறுத்தவரை எஞ்சினியரிங் கல்லூரி திறப்பது, வருமானத்துக்கான ஒரு அட்சய பாத்திரம். இதனால் தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தெருவுக்கு ஒரு எஞ்சினியர் இருந்த நிலை மாறி, வீட்டிற்கு ஒரு எஞ்சினியர் என்ற நிலை உருவாகிவிட்டது. மேலும் எஞ்சினியரிங் படித்த பலர் வேலை இல்லாத நிலையில், எஞ்சினியரிங் சேர்வதை பலர் தவிர்த்தனர்.

வசதி படைத்தவர்கள் நீட் கோச்சிங் செல்கின்றனர். சிலர் கலை/அறிவியல் கல்லூரிகளிலேயே சேர்ந்துவிடுகின்றனர். சிலர் தொழில்சார்ந்த டெக்னீசியன் படிப்புகளைத் தேர்வு செய்கின்றனர். இதனால் எஞ்சினியரிங் கல்லூரிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லை. தக்காளி விவசாயிக்கும் எஞ்சினியரிங் கல்லூரி உரிமையாளர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. நஷ்டத்தை குறைக்க அல்லது தவிர்க்க கிராம மக்களுக்கு கிலோ தக்காளி ரூ.10க்கு கொடுத்து செல்வது போல், எதிர்பார்த்த லாபம் வரவில்லை என்பதால், உடனடியாக எஞ்சினியரிங் கல்லூரியை மூடிவிட்டோ விற்றுவிட்டோ செல்ல முடியாது. காரணம், அதில் செய்யப்பட்டுள்ள பல கோடி ரூபாய் முதலீடு, நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களின் வாழ்வாதாரம் அந்த கல்லூரி செயல்படுவதில்தான் உள்ளது.

எதிர்பார்த்த வருமானம் வரவில்லை என்றாலும், வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள கல்லூரிகள் பல்வேறு விதமான வழிகளையும் கையாண்டு வருகின்றன. அதில் ஒன்று கடந்த ஆண்டு நடந்த துணைக்கலந்தாய்வில் வெளிப்பட்டது. தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் பணியாற்றும் ஒருவர் 5 பேரை நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரியில் சேர்த்தால் மட்டுமே பணியைத் தொடர முடியும் என நிர்ப்பந்தித்தனர். இதனால் தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஊர்ஊராகச் சென்று ஆள் சேர்க்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். 2018ம் ஆண்டு பிளஸ்2 தேர்வில் தோல்வியடைந்து சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி துணைக் கலந்தாய்வு நடந்தது. இந்தக் கலந்தாய்வுக்கு கல்லூரி பஸ்களில் மாணவர்கள் வந்திருந்தனர். ஏற்கனவே நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவரை, அதே கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் கவுன்சலிங்கில் தேர்வு செய்யச் சொல்லி அழைத்துவந்துள்ளனர்.

அரசு ஒதுக்கீட்டில் சீட் கிடைத்துவிட்டால் நீங்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்று சொல்லிதான் சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு 494 கல்லூரிகளில் 1,72,148 இடங்களுக்கு மே 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை 1,33,166 பேர் மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பித்தனர். அதிலும் 1,4,418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். அதில் தகுதியுள்ள 1,3,150 பேர் கொண்ட பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூலை 3ம் தேதி முதல் 4 சுற்றுக்களாக இணையவழி நடந்தது. அதில் தரவரிசையில் முதல் 1,1,692 பேர் மட்டுமே கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கவுன்சலிங் தொடங்குவதற்கு முன்னரே 70,456 இடங்களில் சேர ஆளில்லை. தற்போது 3 சுற்றுகள் முடிந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் 296, அரசு உதவி பெறும் கல்லூரிகளில்-20, மத்திய அரசு எஞ்சினியரிங் கல்லூரியில் 1 இடம், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில்- 3,685 இடங்கள் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் 603, தனியார் எஞ்சினியரிங் கல்லூரிகளில் 1,16,834 இடங்கள் என மொத்தம் 1,21,439 இடங்கள் காலியாக உள்ளன.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாகயிருந்தது. நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணம் எஞ்சினியரிங் கல்வியை நோக்கி மக்களை திருப்பியது. ஆனால், கடந்த ஆண்டு 1 லட்சத்து 2 ஆயிரம் இடங்கள் எஞ்சினியரிங் கலந்தாய்வுக்கு பின் காலியாக இருந்தது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்து எஞ்சினியரிங் கல்லூரிகள் காற்றுவாங்குகின்றன. ஒரு மாணவர் கூட சேராத எஞ்சினியரிங் கல்லூரிகள் நிறைய உள்ளன. சில இடங்களில் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திலேயே கலை/அறிவியல் கல்லூரி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து தீர்வு காணவேண்டும். எஞ்சினியரிங் மட்டுமல்லாது கலை/அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கும் முன்னர், வருங்காலத்தில் அதனால் உண்டாகும் சாதக பாதகங்களை ஆராய்ந்து அனுமதி வழங்கவேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது.

-சுந்தர் பார்த்தசாரதி