தன்னம்பிக்கை பெட்டகம்!



வாசகர் கடிதம்

சமகாலப் பிரச்னைகளின் வீரியம் உணர்ந்து துறை சார்ந்த நிபுணர்களிடம் விவாதித்து தீர்வை நோக்கி நகரும் சர்ச்சைப் பகுதி கட்டுரைகள் எப்போதும்  முத்திரை பதிக்கும் ரகம். அவ்வகையில் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, அரசு வேலைகளுக்கு தகுதியற்ற படிப்புகள் மற்றும் +2 விடைத்தாள்  திருத்தத்தில் குளறுபடி பற்றியெல்லாம் விரிவாக அலசும் கட்டுரைகள், பிரச்னைகளின் தீவிரத்தையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய  நடவடிக்கைகளையும் விளக்குவது அற்புதம்.
-கே.ராஜன், நாகர்கோவில்.

 
ஐடி ஊழியராக தன் பயணத்தை ஆரம்பித்து இன்று நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவராக மாறியுள்ள நவீன் கிருஷ்ணாவின் வளர்ச்சி  சுயமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். வெறும் தொழில் முனைவு மட்டுமல்லாமல் பல தொழிலதிபர்களையும் இளைஞர்களையும் இணைத்து உருவாக்கிய ரௌத்ரா எனும் அமைப்பு அவரின் சமூக  அக்கறையைப் பறைசாற்றுகிறது.
-இரா.வடிவேலன், மானாமதுரை.
 
கல்வி-வேலை வழிகாட்டி இதழில் ‘வேதனையை சாதனையாக்கிய தன்னம்பிக்கை நாயகி!’ என்ற பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல்காதர்  எழுதியுள்ள கட்டுரை அருமை. தனக்கு நிகழ்ந்த அசம்பாவிதத்தால் உடைந்துபோகாமல் எழுந்து நின்று சாதனை படைத்த ரேச்சல் ரெபக்காவின் மன  உறுதி பாராட்டுதலுக்குரியது. தன்னம்பிக்கையின் பெட்டகமாக உள்ளது ‘புதிதாய்ப் பிறப்போம் சரித்திரம் படைப்போம்’ தொடர்.
-எம்.ஜெஸ்ஸி, வேளாங்கண்ணி.
 
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் சக்கரத்தை தலையில் சுற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமநாதபுர மாணவன் ஷேக் முகம்மது  ராஷித்தின் முயற்சிக்கு கிரேட் சல்யூட். மேலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு என நவீன டெக்னாலஜி குறித்த  இலவசப் பயிற்சி வழங்கும் சூரிய பிரபாவின் சேவைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். சாதிக்கும் இளைஞர்களை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு  காட்டும் கல்வி-வேலை வழிகாட்டியின் பணிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
-கா.வெண்ணிலா, ஈரோடு.