அரசுப்பள்ளிகளில் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணி!



வாய்ப்பு

2144 பேருக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு தமிழக அரசுப் பள்ளிகளில் ஆரம்பப் பள்ளி,  இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. அந்தவகையில் தற்போது  முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2,144 பேர் பணிவாய்ப்பு பெற உள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்  வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அப்போது  3375 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூலை, 2017-ல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
 
தமிழகம் முழுவதும் 601 மையங்களில் தேர்வை எழுதினர். தேர்வு அறைக்குள் 2 பேனாக்கள், தேர்வு அறை அனுமதிச்சீட்டு, அடையாள அட்டை  ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. செல்போன், டிஜிட்டல் கைக்கடிகாரம், கால்குலேட்டர், கைக்குட்டை ஆகிய  பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, தற்போது முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்


1. Tamil  319, 2. English  223, 3. Mathematics  279, 4. Physics  210, 5. Chemistry  356, 6.  Botany  154, 7. Zoology  144, 8. History  104, 9. Geography  11, 10. Economics  211, 11.  Commerce  99, 12. Political Science  14, 13. Physical Education  16, 14. Bio Chemistry  01, 15. Micro Biology  01, 16. Home Science  01, 17. Indian Culture  01.

கல்வித் தகுதி: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு  முதுகலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அத்துடன் பி.எட். படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும்.

அதே சமயம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு பி.பி.எட் இளங்கலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், அதிகபட்சமாக  எம்.பி.எட். முதுகலைப் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.7.2019 அன்று 57 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள், http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை  திறந்து, ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்பதால், கவனமாக விண்ணப்பிப்பது சிறந்தது. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.7.2019.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.500-ஐ கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். அதே சமயம் எஸ்.சி./எஸ்.டி.  பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.250-ஐ கட்டணமாக செலுத்தினால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன், ஆப்லைன் முறைகளில்  செலுத்தலாம்.

தேர்வு முறை: விண்ணப்பிப்பவர்களுக்கு கணினி சார்பான தேர்வுகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும். இதில்  தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், பணி நியமனம் செய்யப்படுவார்கள்.முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்விமுறைப் பிரிவில் 30  மதிப்பெண்ணுக்கும், பொது அறிவுப் பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் விவரமான தகவல்களை அறிந்து கொள்ள http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

-முத்து
படம்: ஏ.டி.தமிழ்வாணன்


கூடுதலாக உள்ள 16,000 ஆசிரியர்கள் இடம் மாற்றம்!

தமிழகத்தில் உள்ள, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான இடமாறுதல்  கவுன்சிலிங், ஜூலை 8-ல் நடக்கவுள்ளது. அதற்கு முன், அரசுப் பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அரசு  உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்கள் 2,008; பட்டதாரி ஆசிரியர்கள் 271 என 2,279 பேர் மாணவர் விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர்.  பள்ளிக் கல்வியில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள் 208; இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 13,623 என  மொத்தம் 13,831 பேர், மாணவர் விகிதத்தை விட கூடுதலாக உள்ளனர்.

தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளில் சேர்த்து, மொத்தமாக 16,110 ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.  இவர்களைப் போதிய மாணவர்கள் இருந்தும், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்குப் பணிநிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்ய வேண்டும் எனப் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.