மேல்நிலைக் கல்வியில் தனித்தனிப் பாடப்பிரிவு தேவையா?



சர்ச்சை

ஓர் அலசல்...

சமீப காலமாக நமது தமிழகத்தில் கல்வி குறித்து பல பிரச்னைகள் நிலவிவருகின்றன. அரசும் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகளை  வெளியிட்டுக்கொண்டே உள்ளது. அதற்கு தக்கபடி சமூகமும் தன்னை தகவமைத்துக்கொண்டே உள்ளது. இந்தியக் கல்வி ஏற்கனவே பல  ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியது. கல்வித் திட்டங்களில் மாற்றம் என்பது தேவைதான்.

ஆனால், அந்த மாற்றங்கள் சிந்தித்து உருவாக்கப்பட வேண்டியவை, ஒரு தவறு பல தலைமுறைகளைப் பாதிக்கும். சமீபத்தில் வெளியாகியுள்ள  எஞ்சினியரிங், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனிப் பாடப்பிரிவு என்ற அறிவிப்பு பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.  இதுகுறித்து அசத்தும் அரசுப் பள்ளி அமைப்பின் (A3) ஒருங்கிணைப்பாளரும் ஆசிரியையுமான உமா என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

‘‘கல்விக்கு இரு வகை உயிர்ப் பிணைப்புகள் தேவை. ஒன்று பரந்து விரிந்த உலக அறிவுடனானது, மற்றொன்று நம் மண்ணுடன் மக்களுடனான  பிணைப்பு. முதலில் ‘கல்வி’ குறித்த புரிதல் தமிழகத்தைப் பொறுத்தவரை, குழந்தைகளை வேலை வாய்ப்புக்குத் தயார் செய்யும் உருப்படிகளாகவே  பார்க்கும் புரிதலில் இருக்கின்றது பேராபத்து.

இந்த நிலையில் தற்போது 11, 12ஆம் வகுப்பில் பிரத்யேகமாக பொறியியல் துறை, மருத்துவத் துறை என பாடப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு 5  பாடங்களாகக் குறைத்து தேர்வுகள் நடத்தப்படுவதாக செய்திவருகிறது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனால், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராக எனக்குள்ள பயங்களும் சந்தேகங்களும் நிறைய இருக்கின்றன.

இப்போது நமக்கிருக்கும் கடும் தண்ணீர்ப் பிரச்னையின் ஒரு காரணம் என்னவெனில், நீர் மேலாண்மை குறித்து எவ்விதப் புரிதலும் இல்லாத சமூகத்தை  இந்தக் கல்வி அமைப்பு உருவாக்கியுள்ளது. இதேபோல சுற்றுச்சூழல் சார்ந்த புரிதல், நிலத்தின் முக்கியத்துவம், விவசாய பூமி குறித்த புரிதல் இப்படி  ஒவ்வொன்றாக கூறலாம்.

இதற்கெல்லாம் கல்வி அமைப்பை குறை கூறலாமா என்று கேட்கலாம்? ஆம் ... இந்த சமூகத்தின் நல்லது கெட்டது, வளர்ச்சி வீழ்ச்சி என  எல்லாவற்றையும் கல்வியோடு தொடர்புபடுத்தி பார்ப்பதுதான் முற்றிலும் சரி. குழந்தைகளாக நம் பள்ளிக்குள் வரும் மாணவர்களை 12 வருடப் பள்ளிக்  கல்வி வழியேதான் ஒரு சமூகத்தை நேசிக்கும் சிறந்த குடிமக்களாக மாற்ற இயலும்.

ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதோடு அவரவர் மனிதப் பண்புகளை உருமாற்றி இந்த சமூகத்தில் வாழத் தகுந்த மனிதனாக உருமாற்ற 9ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பருவமே ஏற்றது’’ என்கிறார் உமா. ‘‘வளரிளம் பருவம் அடையும் மாணவரது குறிப்பிட்ட இந்த வயதில்  பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்யக் கூறுவதே முறையான கல்வி அல்ல.

உலக நாடுகள் பலவற்றில் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்குள் மாணவரை முடக்கும் கல்விப் பிரிவுகள் இந்தப் பள்ளிப் பருவத்தில் இல்லை. ஒரு 10-ஆம்  வகுப்பு மாணவர் பெறும் பாட மதிப்பெண்களை வைத்து நாம் அவர்களை கணக்கில் நிபுணத்துவம் மிக்கவராக அல்லது அறிவியலில் நிபுணத்துவம்  மிக்கவராகக் கருத முடியாது.

மேலும், இன்று படிக்கும் படிப்பிற்கும் செய்யும் பணிக்கும் சம்பந்தமில்லாத சமூகச் சூழலே நிலவுகிறது. அப்படியிருக்க, நீ பொறியியல் துறை என்றால்  உயிரியல் படிக்காதே, மருத்துவத்துறை என்றால் கணக்கைப் புறந்தள்ளு என்றால் எந்தவிதத்தில் நியாயம்? அறிவியலும் கணக்கும் ஒன்றுடன் ஒன்று  இணைந்ததல்லவா? மேலும் பள்ளிகளில் நீட் என்று ஒரு பாடப் பிரிவுக்குழுவில் அடைந்தால் சேர்கின்ற எல்லா மாணவருக்குமே மருத்துவத்துறையில்  உயர்கல்வி படிக்க வாய்ப்புகள் கிடைத்துவிடும் என்று இந்த அரசால் உறுதியளிக்க முடியுமா? பிரத்யேகப் பாடப் பிரிவில் சேர்ந்து படிக்கும் எல்லா  மாணவருக்கும் வேலைவாய்ப்பை நல்கிட உத்தரவாதம் தர இயலுமா?’’ என்று கேள்வி எழுப்புகிறார் ஆசிரியை உமா.

மேலும் நிவர்த்தி செய்ய வேண்டிய குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி பட்டியலிட்டபோது, ‘‘தொழிற்கல்வியை சேர்த்தே வழங்கும் சில  அயல்நாடுகளின் கல்வி முறையில் அதற்கான புரிதலை செயல்பாடுகள் வழி வழங்கும் எதார்த்தம் இருக்கிறது. ஆனால், தமிழகக் கல்வியைப்  பொறுத்தவரை கல்லூரிக் காலம் முடியும் வரை பெரும்பாலும் வெறும் ஏட்டுக் கல்விதான்.

அதன் பிறகுதான் ஒவ்வொன்றாக சொந்த அனுபவங்களில் மாணவர்கள் கற்றுக்கொண்டுதான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இப்படியான  சூழலில் நீ மருத்துவம் போக இந்தப் பிரிவை எடு, பொறியியல் போக இந்தப் பிரிவை எடு என்பது முற்றிலும் தவறு. பாடச்சுமையை அதிகமாக்கிவிட்டு  அல்லது பாடங்களை சரியாகக் கற்பிக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தாமல் அங்கே ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு அதைச் சரிப்படுத்த  பாடங்களைக் குறைக்கிறோம் என்று இந்த ஆயுதத்தைக் கையில் எடுப்பது சரியல்ல.

முதலில் அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை வகுப்புக்கு ஒரு ஆசிரியராவது நியமிக்க வேண்டும்.  அப்போதுதான் தொடக்கப் பள்ளி முடிக்கும்போது குழந்தைகள் அந்த வயதுக்குரிய அடைவுத்திறனைப் பெற இயலும். அது இல்லாமலேயே ஓராசிரியர்  பள்ளிகளும் ஈராசிரியர் பள்ளிகளும் மலிந்துகிடக்கும் நம்மிடையே பயிலும் குழந்தைகள் பாடப்புத்தக அறிவைக்கூட முழுமையாக எட்டுவதில்லை.
அதிகபட்சமாக பல இடங்களில் ஆசிரியர்களின் முயற்சியால் மொழிப் பாடத்தில் வாசிப்புத் திறனும் கணக்கில் அடிப்படைத் திறன்களைப் பெறும்  சூழலும் உள்ளது. சற்று ஆர்வமுள்ள ஆசிரியர்களிடம் கற்கும் குழந்தைகள் அந்த ஆசிரியரின் சுய விருப்பு வெறுப்பு கலந்த சில பாடம் தாண்டிய  கற்றலுக்கு தன்னை உட்படுத்திக் கொள்கின்றனர்.

அங்கிருந்து வரும் குழந்தைகள் தங்களது நடுநிலைக் கல்வியையும் இதேபோலக் கடக்கின்றனர். ஆசிரியரை சரியாக நியமனம் செய்யாத பள்ளிகள்,  ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகள், நூலகம், தொழில்நுட்ப வகுப்பறை என எதையும் இருந்தும் பயன்படுத்தாத பள்ளிகள் என ஏராளம்  இருக்கின்றன. விளையாட்டுக் கல்வி, உளவியல் கல்வி என எதையும் பெற்றிராத குழந்தைகள் போன்ற சூழல்கள் மாற வேண்டும்.

முழுமையான ஆரோக்கியமான பள்ளிச் சூழலைத் தருவதோடு ஏற்கனவே நடைமுறையிலிருக்கும்  தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டை  ஆசிரியர்கள் பதிவேடுகள் கடந்து பரந்த பட்டறிவுடன் குழந்தைகளிடையே பயன்படுத்தி அவர்களது திறன்களை உண்மையாக வெளிக்கொணரும் திட்ட  நடைமுறை நம் தமிழகத்தில் வந்தால்...

இதுபோன்ற அறிவிப்புகள் எவ்வித அச்சத்தையும் தராது. ஆகவே தனித்தனிப் பாடங்களில் தேர்வு வைத்தாலும் அதற்காக பயப்படாத மனோபலத்தை  வளர்க்கும் கல்வியாகவும், குழந்தைகள் தனது சமூகத்தைப் புரிந்துகொள்வதற்குமான கல்வியே மிக அவசியம். ஆகவே கல்வியில் மாற்றங்கள் என்பது  ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் உருவாக துணையிருக்க வேண்டும்’’ என்றார் ஆசிரியை உமா.

- தோ.திருத்துவராஜ்