ஆங்கிலத்தில் பொன்னியின் செல்வன்! அசத்தும் தமிழக மாணவி!சாதனை

நவீன தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். தமிழ் நிலத்தின் மாபெரும் பேரரசான சோழ சாம்ராஜ்ஜியத்தின்  வரலாற்றை ஐந்து அத்தியாயங்களாகச் சித்தரிக்கும் இந்த புதினம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட இந்த புதினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் சென்னை லேடி ஆண்டாள்  மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி நிலா சரவணராஜா.


ஆங்கில மொழியில் பொன்னியின் செல்வன் புதினத்தை மொழிபெயர்க்கும் எண்ணம் தோன்றியது குறித்து நம்மிடம் மாணவி நிலா பகிர்ந்துகொண்ட  தகவல்களைப் பார்ப்போம். அப்பா ‘‘நிலா காமிக்ஸ்’’ எனும் பப்ளிகேஷனை அண்ணாநகரில் வைத்துள்ளார். அதனால் வீட்டில் எப்போதும்  வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

எனக்கு ஐந்து வயது ஆன பிறகே எங்கள் வீட்டில் டிவி கனெக்‌ஷன் கொடுக்கப்பட்டது. குழந்தையாக இருக்கும்போது அப்பா கதைகள் சொல்லுவார்.  புத்தகங்கள் படிக்க கொடுப்பார். அதனால் இரண்டு வயதிலிருந்தே என்னுடைய புத்தக வாசிப்பு தொடங்கியது. ஆரம்பத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில்  சிறு சிறு புத்தகங்கள் படிப்பேன். புத்தக வாசிப்பில் ஈடுபாடு அதிகமானது.

அப்பா தான் பொன்னியின் செல்வன் புதினத்தை எனக்கு படிக்க கொடுத்தார். வரலாறு சார்ந்த கதைகளையும் போர்கள் பற்றியும் படிப்பதில் எனக்கு  ஆர்வம் அதிகம். அருள்மொழிவர்மன் ராஜராஜனாக முடிசூடியது, சோழப் பேரரசை கவிழ்க்க நினைக்கும் நந்தினியின் ராஜதந்திரங்கள், பத்தாம்  நூற்றாண்டு மக்கள் என புதினத்தை படிக்க படிக்க பொன்னியின் செல்வன் காட்டும் உலகம் என்னை பிரமிக்கச் செய்தது.

தொடர்ந்து தினமும் படித்தேன். பொன்னியின் செல்வன் மீது தீராக் காதல் கொண்டேன்’’ என்று கூறும் நிலா ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே  ஆங்கில மொழியாக்க வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். ‘‘பொன்னியின் செல்வனை படிக்க படிக்க எழுத்தாளர் அமரர் கல்கியின் மீது பற்று  ஏறபட்டது. சரித்திரக் கதைகளைப் படிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டது.

தொடர்ந்து சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்றுப் புதினங்களை தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழ் கலாசாரத்தையும்,  பண்பாடு, மொழியின் சிறப்பை அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு அலுப்பூட்டாமல் கடத்துவதற்கு காமிக்ஸே சிறந்த வடிவம். ஆகவே, அப்பா, தமிழ்  மற்றும் ஆங்கிலத்தில் காமிக்ஸ் வடிவில் பொன்னியின் செல்வன் நாவலை வெளியிட விரும்புவதாகக் கூறினார்.

தமிழ்ப் பதிப்பிற்கு பிரச்னை இல்லை. ஆங்கிலப் பதிப்பிற்கு என்ன செய்யலாம்? என்று யோசிக்கும்போது, ‘‘அப்பா நான் பண்றேன்’’ என நான்  சொன்னதும், ‘‘சரி, நிலா நீயே பண்ணு’’ என அப்பாவும் சம்மதம் தெரிவித்தார். அவ்வாறு நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது முடிவு செய்து  ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.’’ என்று சொல்லும் நிலா பள்ளி முடிந்த பின் மற்றும் பள்ளி இல்லாத நாட்களில்  மொழிபெயர்ப்பு வேலைகளைச் செய்துள்ளார்.

‘‘அப்பா தமிழில் ரஃப் டிராஃப்ட் கொடுப்பார். அதைக் கொண்டு ஆங்கில ஆக்கத்திற்கு பொருந்தும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தேன்.  தினமும் ஸ்கூல் முடிந்த பிறகு மொழிபெயர்ப்பு வேலைகளை செய்வேன். முதலில் தமிழ் வர்ணனைகளுக்கு ஏற்ற ஆங்கிலச் சொற்களை  தேர்ந்தெடுப்பது சவாலாக இருந்தது.

உதாரணமாக, பல்லக்கு, அந்தப்புரம் போன்ற சில தமிழ் வார்த்தைகளுக்கு மாற்று ஆங்கில வார்த்தைகள் சரியாக அமையவில்லை. அவற்றை தேடித்  தேர்ந்தெடுத்து தொகுத்தோம். மொழிபெயர்ப்பின் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின் நாளடைவில் கொஞ்சம் எளிமையானது. இப்போது  இரண்டு அத்தியாயங்களை முழுவதுமாகவும், மூன்றாவது அத்தியாத்தில் பாதியையும் மொழி பெயர்த்துவிட்டேன்.

நிலா காமிக்ஸிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் வடிவிலான ஆங்கிலப் பொன்னியின் செல்வன் வெளியாகிவருகிறது. பத்தாம்,  பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வந்ததால் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது. இன்னும் இரண்டு வருடங்களில் ஐந்து அத்தியாயங்களையும்  மொழிபெயர்த்துவிடுவேன்.

மேலும் திருக்குறளைச் சின்ன கதைகள் மூலம் விளக்கி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளது’’ எனக் கூறும் நிலா  சரவணராஜாவிற்கு 2019ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது கிடைத்துள்ளது. இளம் வயதில் இவ்விருதிற்கு  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையும் பெற்றுள்ளார் நிலா. இளம் வயதில் விருது பெற்று பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து  வருகின்ற இவ்வேளையில் நாமும் பாராட்டலாமே!

- வெங்கட்