செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்!

10ம் வகுப்பு +2 CBSE தனித் தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10  மற்றும் 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

அதற்கான மாதிரிப் படிவங்கள், விவரங்களை சிபிஎஸ்இ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் திரும்ப எழுத வேண்டிய அவசியம் உள்ள  மாணவர்கள் 2019ம் ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விரும்பினால் 17.11.2018 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள்  23.11.2018 வரை அபராதமாக ரூ.500 கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள், 30.11.2018 வரை கூடுதல் அபராத கட்டணமாக ரூ.1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம்.  அதற்குப் பிறகும் கால நீட்டிப்பு 7.12.2018 வரை செய்யப்படும். அதற்கான அபராதகட்டணம் ரூ.2000 என்றும், இறுதி வாய்ப்பு 14.12.2018 வரை  நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள சிபிஎஸ்இ அதற்கு ரூ.5000 வரை அபராத கட்டணம் செலுத்த வேண்டிவரும் என்றும் தெரிவித்துள்ளது. பார்வைத் திறனற்ற மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.

முதுநிலை மேலாண்மைப் பட்டயப்படிப்பில் மாணவர் சேர்க்கை!

ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழங்கப்படும் படிப்பு: போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்)கல்வித் தகுதி: துறை சார்ந்த பிரிவில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜிமேட், கேட், எக்சாட் அல்லது சிமேட் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் ஆன்லைன் மூலம் மட்டும் பதிவு செய்ய முடியும். ஐ.எம்.டி கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.imthyderabad.edu.in மூலம் விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் முழுமையாக பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.
சேர்க்கை முறை: இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் தகுதித் தேர்வுகளில்பெற்றிருக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22.11.2018
நேர்முகத் தேர்வு: 2019ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும்
மேலும் விவரங்களுக்கு: www.imthyderabad.edu.in

தமிழக அரசில் உதவி ஜெயிலர் பணி வாய்ப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசின் பல துறைகளிலும் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை நடத்திவருகிறது. அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி. உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு 30 பேரைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய முழு விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.11.2018.

வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க அரிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைப்பது பலரும்  பின்பற்றும் ஒரு முக்கிய கடமையாக உள்ளது. அதன்படி பதிவு செய்தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில்புதிப்பிக்க வேண்டியிருக்கும். அப்படி 2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் அரசாணை வெளியான நாள் முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.