தரமான வாழ்வளிக்கும் தடய அறிவியல் படிப்புகள்!



உயர்கல்வி

தொழில்நுட்பப் புரட்சிக் காலமான இன்றைய அதிநவீன காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இந்த மாற்றங்களால் ஒரு பக்கம் வாழ்க்கை ஏற்றம் பெற்றாலும் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. பாகுபாடு இல்லாமல் அவை அனைத்துத்துறைகளிலும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும், நீதி பரிபாலனத்திற்கும், சமூக பாதுகாப்பிற்கும் இக்குற்றச் சம்பவங்களின் தடயங்கள் தான் மிகவும் அவசியம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தடயங்களைக் கண்டுபிடித்து அவற்றை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, குற்றவாளிகளை இனம் காட்டி நீதி வழங்க உதவும் அறிவியல் படிப்பே (Forensic Science) தடய அறிவியல்.

நான்காவது தொழிற்புரட்சியில் காலடியெடுத்து வைக்கும் இன்றைய நவீன உலகில் பெருகிவரும் டிஜிட்டல் குற்றங்களின் மத்தியில் தடய அறிவியல் படிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் முக்கியமான ஒன்றான நீதித் துறையுடன் தொடர்புடைய துறையாதலால் இத்துறையில் வளமான எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் எஞ்சினியரிங் ஆகிய துறைகளின் கூட்டுக் கலவையே தடய அறிவியல்துறை.

புலனாய்வு நடைபெறும் வேளையில் குற்றவாளியிடம் இருந்தோ அல்லது குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்தோ ஆதாரங்களை சேகரிப்பதும், அந்த ஆதாரங்களை ஆய்வகத்தில் பரிசோதித்து குற்றம் நடைபெற்ற விதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதே தடய அறிவியலாளரின் பணியாகும். ஒவ்வொரு குற்றமும் தனித்தன்மை வாய்ந்தது.

ஒவ்வொன்றும் அவற்றிற்கே உரிய சவால்களைக்கொண்டிருக்கும். அச்சாவல்களைத் திறம்பட கையாண்டு அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து உண்மைத்தன்மை மிக்க ஆதாரங்களை வழங்குவதே சிறந்த தடய அறிவியலாளரின் தகுதியாகக் கருதப்படுகிறது. எதிர்கொள்ளவியலாத சவால்களை சந்திக்க துணிவுள்ளவர்களும், குற்றங்கள் நடைபெற்ற விதத்தை கண்டறிவதில் வல்லமை உடையவர்களும், துப்பறியும் ஆர்வம் உள்ளவர்களும் இத்துறையைத் தேர்ந்தெடுக்க தகுதியுள்ளவர்களாவர்.

தடய அறிவியல் துறையானது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை முறையே Forensic Medicine, Laboratory Sciences, Field Science ஆகும். இம்மூன்றும் தனக்கே உரித்தான உட்பிரிவுகளை உடையது. Forensic Medicine ஆனது Forensic pathology, Psychiatry, Psycology மற்றும் Odontology ஆகிய துறைகளையும், Laboratory Sciences ஆனது Chemistry, Biology, Toxicology, Ballistics, Fingerprints ஆகிய துறைகளையும் மற்றும் Field Science ஆனது நார்கோட்டிக்ஸ் எனப்படும் போதைப் பொருள் சார்ந்த குற்றங்களின் கள ஆய்வையும் தன்னகத்தே கொண்டுள்ளது. Suspect Detection System, Brain Electrical Oscillation, Signature Profiling, Narco analysis, Polygraph Examination, Audio video Tape Authentication System, Hand writing analysis ஆகியவற்றை உள்ளடக்கி தடய அறிவியல் துறையில் பாடங்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் தடய அறிவியல் துறையின்கீழ் பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

தடயவியல் படிப்புகள்

Forensic Serology: கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் உடல் ரீதியிலான தாக்குதல்கள் ஆகிய குற்றங்களில் கண்டுபிடிக்கப்படும் உடல் ரீதியான தடயங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து சமர்பிப்பதே இத்துறையின் முக்கிய அம்சம்.Forensic Psychiatry: குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் மனிதர்களின் மனதை ஆராய்வதே இத்துறையின் சிறப்பம்சமாகும். குற்றவாளிகளின் மனநிலை தான் அவர்கள் செய்யும் குற்றச்சம்பவங்களில் எதிரொலிக்கிறது. ஆகையால்  குற்றவாளியின் மனநிலையை நியுரோ சயின்ஸ் எனும் நரம்புமண்டலம் சார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்தி குற்றச்சம்பவங்கள் நடந்த விதத்தைக் கணிப்பதை ப்போதிக்கிறது இத்துறை.

Forensic Engneering: சாலை விபத்துகள், தீ விபத்துகள் போன்ற மிகவிரிவான விசாரணை கோரும் விபத்துகளை ஆராய்ந்து விரிவான தரவுகளை வழங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது இத்துறை.

Forensic Architecture: பிணவறை, தடய அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் தடய ஆய்வகங்கள் ஆகியவை ஆராய்வதற்கு ஏதுவாக எவ்வாறு, எந்த வடிவமைப்பில் கட்டமைக்கப்படவேண்டும் என்பதை விளக்குவதே இத்துறை. தடய அறிவியல் மற்றும் கட்டமைப்பும் இணைந்ததே ஃபோரன்சிக் ஆர்கிடெக்சர் துறையாகும்.

Forensic Laboratory Analysis: ஆய்வகங்களில் டி.என்.ஏ. டெஸ்ட் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்வதை விரிவாக அலசுகிறது இத்துறை. மேலும் மரபணு ஆய்வு என்பது குற்றச்சம்பவங்களின் தகவல்களை உண்மைத்தன்மையோடு ஆராய எவ்வாறு உதவுகிறது என்பதையும் விளக்குகிறது இத்துறை.

Forensic Pathology: பிரேத பரிசோதனை மூலம் ஒருவர் இறந்த விதம், நேரம் மற்றும் காயங்களின் தன்மை ஆகியவற்றை ஆராய உதவுகிறது
இத்துறை.

Forensic Veternary Science: பிரேத பரிசோதனை அறிக்கைகளின் மூலம் விலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்பிற்கான காரணங்களை ஆராய்வதே இத்துறையின் முக்கிய அம்சமாகும்.

Forensic Toxicology: விஷம் மற்றும் கெமிக்கல் பயன்பாட்டால் ஏற்படும் இறப்புகளை, அவை மனித உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் போன்றகுற்றங்களை விரிவாக ஆராய்ந்து அறிக்கைகளை சமர்பிப்பதை போதிக்கிறது இத்துறை.

Wildlife Forensics: வனம் மற்றும் விலங்குகளை விரிவாக ஆராய்வதே  வைல்டுலைஃப் ஃபோரன்சிக் ஆகும். தோல், தந்தம் போன்ற விலையுயர்ந்த பொருட்களுக்காக கொல்லப்படும் வன விலங்குகளைப் பாதுகாப்பதே இத்துறையின் நோக்கமாகும். கொல்லப்பட்ட நேரம், குற்றம் நடந்த சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து குற்றம் நடந்த விதத்தை கணிக்கிறது இத்துறை.
 
Forensics Odontology: பாதிக்கப்பட்டவர்களின் பற்களின் வடிவமைப்பையும் முகவமைப்பையும் ஆராய்ந்து இறப்பு அல்லது காயத்தின் தன்மையை விளக்குகிறது இத்துறை.

Forensics Speech Sciense: வாய்ஸ் ரெக்கார்டிங் மூலம் குரல்களை தொழில்நுட்பத்தின் உதவியோடு ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதே இத்துறையாகும். மேலும் குரல் சார்ந்த இந்த ஆய்வானது நீதிமன்றத்தில் சிறந்த ஆதாரமாகவும் மற்றும் குற்றங்களின் தடயங்களைக் கண்டுபிடிக்கவும் ஸ்பீச் சயின்ஸ் துறை பயன்படுகிறது.

தடய அறிவியல் படிப்புக்கான கல்வித் தகுதி இந்தியாவில் உள்ள பல கலைக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஃபோரன்சிக் சயின்ஸ் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளை வழங்கிவருகின்றன. +2 தேர்ச்சியானது இளங்கலைப் படிப்பிற்கான கல்வித் தகுதியாகவும், இளங்கலையில் அறிவியில் துறையில் பட்டம் பெறுவது முதுகலை ஃபோரன்சிக் சயின்ஸின் கல்வித் தகுதியாகவும் கருதப்படுகிறது.  

சில பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு மூலமும், சில கல்விநிறுவனங்களில் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மேலும் மெடிக்கல் மற்றும் மருத்துவம் சார்ந்த இளங்கலை முடித்தவர்கள் Forensic Toxicology போன்ற தடய அறிவியலின் உட்பிரிவுகளில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

சில கல்வி நிறுவனங்கள் மற்றும் வழங்கப்படும் படிப்புகள்

*லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் நேஷனல் (LNJN) இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரிமினாலஜி அண்ட் ஃபோரன்சிக் சயின்ஸ், புதுடெல்லி.
*குருகோவிந்த் சிங் இந்திராபிரசாத் பல்கலைக்கழகம், புதுடெல்லி.
*குஜராத் ஃபோரன்சிக் சயின்ஸ் பல்கலைக்கழகம் (GFSU), அகமதாபாத்.
*பன்டல்காண்ட் யுனிவர்சிட்டி ஜான்ஸி ஒஸ்மானியா யுனிவர்சிட்டி, ஹைதராபாத்.  
*பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி.
*மஹரிஷி தயானந் யுனிவர்சிட்டி, ரோடக்.
*டாக்டர் ஹரி சிங் கவுர் யுனிவர்சிட்டி, சாகர்.
*குரு காசிதாஸ் விஷ்வ வித்யாலயா, பிலாஸ்பூர்.
*கர்நாடக் யுனிவர்சிட்டி, தர்வாத்.
*குருஷேத்ரா யுனிவர்சிட்டி, ஹரியானா.
*மும்பை யுனிவர்சிட்டி
*பாபாசாகிப் பீமாராவ் அம்பேத்கர் யுனிவர்சிட்டி, லக்னோ

 - போன்ற இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் தடய அறிவியல் சார்ந்த படிப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் குரு கோவிந்த் சிங் இந்திராபிரசாத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பான எம்.ஏ. கிரிமினாலஜி மற்றும் எம்.ஏ. ஃபோரன்சிக் சயின்ஸ் படிப்பும் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

ஒரு சிறந்த தடய அறிவியலாளருக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. எந்த காலகட்டத்திலும் தேவையுள்ள துறை இது. தொழில்நுட்ப குற்றங்களின் பெருக்கத்திற்கேற்ப தடய அறிவியலாளர்களின் தேவையும் அதிகமாகும். ஒரே குறிக்கோளோடு இத்துறையை தேர்ந்தெடுத்து படித்தால் வளமான எதிர்காலம் அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

வேலை வாய்ப்புகள், ஃபோரன்சிக் துறையின் குறிப்பிட்ட உட்பிரிவை தேர்ந்தெடுப்பது சார்ந்தும் அமைகிறது.மேலும் குற்ற விசாரணை, தீவிரவாத தாக்குதல்கள் சம்பந்தமான புலன் விசாரணை, பேரிடர் மேலாண்மை, ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆராய்தல், இணைய குற்றங்களின் விசாரணை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு போன்ற தளங்களில் தடய அறிவியலாளரின் பணிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

  -வெங்கட்.