சிறப்பு ஆசிரியர்கள் தேர்வில் தொடரும் குளறுபடிகள்!



சர்ச்சை

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 1,325 சிறப்பாசிரியர் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வை நடத்தியது.
எழுத்துத் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) 5 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தற்போது இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதித் தேர்வுப் பட்டியல்தான் வெளியாகிவிட்டதே அதற்கென்ன இப்போது என்றுதானே கேட்கிறீர்கள்? அதில்தான் பிரச்னையே உள்ளது.ஓவியம், தையல் சிறப்பாசிரியர் தேர்வுப் பட்டியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் எழுத்துத் தேர்வு மற்றும் பதிவுமூப்பு சேர்த்து அதிக மதிப்பெண் பெற்றிருந்த பலரின் பெயர் விடுபட்டு, அதற்குப் பதில் அவர்களைக்காட்டிலும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வு பட்டியலில் பொதுப்பிரிவிலோ அல்லது தமிழ்வழி ஒதுக்கீட்டிலோ இடம்பெறாமல் பாதிக்கப்பட்ட தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகி விளக்கம் கேட்டனர். அதற்குப் பதில் அளித்த ஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள், ‘‘அடிப்படைக் கல்வித்தகுதி மற்றும் டிடிசி தகுதியை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வைத்திருக்கிறீர்கள். ஆனால், டிடிசிக்கு முந்தைய தேர்வான ஹையர் கிரேடு (ஓவியம் அல்லது தையல்) தேர்வுக்கு அதுபோன்று தமிழ்வழிச் சான்று வைக்காததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்கள்” என்று பதில் அளித்தனர்.

ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசுத் தேர்வுத்துறை தமிழ்வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என்று அவர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஏற்கவில்லை. இதற்கிடையே, தமிழ்வழிச் சான்று பிரச்னை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர்வுத் துறையானது, தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பியது.

தொழில்நுட்பத் தேர்வை நடத்திய அரசுத் தேர்வுத்துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் தேர்வர்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். இப்பிரச்னை குறித்து, கலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், சிறப்பு ஆசிரியர் பாஸ்கரன் மற்றும் ஓவிய ஆசிரியர் பி.குமார் கூறும் கருத்துகளைப் பார்ப்போம்…

 எஸ்.ஏ. ராஜ்குமார், கலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர்ஓவியம், தையல், இசை, உடற்கல்வி பணி இடங்களுக்கு ஒரு பணி இடத்திற்கு இரண்டு பேர் என்ற முறையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அழைக்கப்பட்டனர். ஓவிய ஆசிரியர் பணி இடத்திற்கு ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும் அல்லது கும்பகோணம் கலைக் கல்லூரி டிப்ளமோ டிகிரி அல்லது சென்னை கவின்கலைக்கல்லூரி டிப்ளமோ அல்லது மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி என்றும் தகுதிகள் குறிப்பிடப்பட்டிருந்தது. தையல் ஆசிரியர் பணி இடத்திற்கு பொதுவாக ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும் எனவும் ஆசிரியர் தேர்வுவாரிய குறிப்பாணையில் கூறப்பட்டிருந்தது.

தமிழ்வழி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இட ஒதுக்கீட்டில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இடம்பெறவில்லை. அதற்கு மாறாக கும்பகோணம் கலைக்கல்லூரியில் தமிழ்வழி உள்ளதால் அவர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். ஓவிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் ஆசிரியர் பயிற்சியே முடிக்காத பலருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதே போல் தையல் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஒருவிதமான ஆசிரியர் பயிற்சி சான்றிதழும் அரசுத் தேர்வுத்துறை ஒருவிதமான ஆசிரியர் பயிற்சி சான்றிதழும் அரசுத் தேர்வுத்துறை ஒருவிதமான தொழிலாசிரியர் பயிற்சி சான்றிதழும் கொடுத்திருந்தது. எந்த சான்றிதழ் அடிப்படையில் தையல் ஆசிரியர் நியமனம் என அதிக மதிப்பெண் மட்டுமே கணக்கெடுத்து மாவட்டங்களில் உரிய முறையில் சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை என்று தேர்வர்கள் ஆசிரியர் தேர்வுவாரியத்தில் புகார் அளித்த வண்ணம் இருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்பாசிரியர்கள் நியமனம் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது என வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவசர அவசரமாக குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதிக மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் கடந்த 15ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகையிட்டனர்.  அப்போது தமிழ்வழிச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இதன் தொடர்ச்சியாக தேர்வுத்துறையால் நடத்தப்பட்ட அரசு தொழில்நுட்பத் தேர்வு தமிழ்வழியா? ஆங்கிலவழியா? என தனக்கு தெரியாது என தேர்வுத்துறை இயக்குநர் அறிக்கை வெளியிட்டார்.

தேர்வு எழுதும் மொழி என்று ஒரு காலம் வைத்து தேர்வு நடத்திவிட்டு தமிழ்வழிச் சான்றிதழ் தர மறுப்பு தெரிவிப்பதை வைத்து பார்க்கும்போது மெகா ஊழல் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் நடந்துள்ளது என தெளிவாக தெரிகிறது. இத்தகைய முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டிய கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் நீதிமன்றத்தில் வழக்குகளும் சிறப்பாசிரியர் நியமனத்தில் அதிகமாகிக்கொண்டேவருகிறது’’ என்றார்.

வி.பாஸ்கரன், சிறப்பு ஆசிரியர்  ஹையர் கிரேடு (HIGHER GRADEக்கு தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழ் வழங்குவதில்லை என்று அரசே அறிவித்துள்ளது. பிறகு எப்படி போலிச் சான்றுகள் உள்ளே நுழைந்தன? இதுதான் மர்மமாக இருக்கிறது. நான் உண்மையில் தமிழ் மொழியில்தான் தொழில்நுட்பத் தேர்வு  எழுதினேன்.

எனக்கு தமிழ்வழிக் கல்விச்சான்று இல்லை என்று சொல்லிவிட்டு எனது வாழ்க்கை வீணாகிப் போனதற்கு யார் காரணம்? அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு எனக்கு பணி மறுக்கப்பட்டது. குறைந்த அளவில் மதிப்பெண் எடுத்தவர்கள் பணிக்கு செல்லப்போகிறார்கள். அதிக மதிப்பெண் எடுத்த என்னைப் போன்றோர் நிலைமை கேள்விக்குறியாக மாறியுள்ளது.

 பி.குமார், ஓவிய ஆசிரியர், வேலூர் மாவட்டம்டிஆர்பி-ல் தமிழ்வழிக் கல்வியில் மேல்நிலை / கீழ்நிலை தேர்வில் தமிழ்வழிச் சான்று தர மறுக்கும் தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறை நடத்தும் தேர்விற்கு முக்கியத்துவம் அளிக்காமல் டிஆர்பி முயல்கிறது. தேர்வு அறிக்கையில் உள்ளதுபோல் செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படுகின்றது.

டிஆர்பி அரசு ஆணைகள் மறுக்கப்படுகின்றது. தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் பயிற்சி இல்லாமல் இருப்போருக்கு பணி வழங்க முயல்கின்றது. (இதற்கு மட்டும் அரசாணை உள்ளது என அறிவிப்பு).

தேர்வுக்கு பணம் செலுத்தும்போது ஒரு தகுதியும் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்ற பிறகு இவை தகுதியில்லை என அறிவிப்பது, அறிவிப்பில் அனைத்து சான்றும் கட்ஆஃப் தேதிக்கு முன்பு கண்டிப்பாக பெறப்பட்டிருக்க வேண்டும் என அறிவித்துவிட்டு தமிழ்வழிச் சான்று எப்போது பெறப்பட்டிருந்தாலும் சரி என மாற்றிக் கூறுவது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

பெயரில்  மட்டும் சிறப்பை வைத்துவிட்டு அவர்களின் நியமனம்  முதல் வருமானம் வரை பல குளறுபடிகளை அரசு செய்வது சிறப்பாசிரியர்களை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. தகுந்த தகுதிகள் இருந்தும் வாய்ப்புகளை வழங்காத அரசின் குளறுபடி திருத்திக்கொள்ளப்பட்டால் மட்டுமே சிறப்பு ஆசிரியர்களாகும் இவர்களின் கனவு நனவாகும்.

  - தோ.திருத்துவராஜ்