தேங்காய் நார்டோர் மேட் தயாரிப்பு!



சுயதொழில்

மாத வருமானம் ரூ.2.5லட்சம்!


இந்திய அளவில் அரசு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வில் கவனம் செலுத்தும் அதே வேளையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இயற்கையைப் பாதுகாக்க விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. இதன் விளைவாக நாடு முழுவதும் மக்களிடையே இயற்கை மற்றும் இயற்கை சார்ந்த பொருட்கள் மீதான ஈர்ப்பும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டுவருகிறது. அந்தவகையில் டோர் மேட்களைக்கூட இயற்கைப் பொருட்களால் ஆனதா? என்று தேடுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

டோர் மேட்டை இயற்கைப் பொருட்களால் தயாரிக்க வேண்டுமென்றால் அதற்கு உகந்தது தேங்காய் நார்தான். தேங்காய் நாரில் தயாரிக்கப்படும் கயிறு, கால்மிதியடி, பித் போன்ற பல பொருட்களுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்தத் தொழிலை செய்வதற்கு இங்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. 

தேங்காய் நாரிலிருந்து பெரும்பாலும் தயாரிக்கப்படும் பொருளான கயிறுகள் கட்டடங்களுக்குச் சாரம் கட்டவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், கிணறுகள் இல்லாத நிலை உருவானதாலும் இந்தத் தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது.

தற்போது தேங்காய்நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ், மேட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயார் செய்யப்படுவதால், இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஆகவே, தேங்காய் நாரில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக தயாரிக்கப்படும் மேட் குறித்து இப்போது பார்க்கலாம்.

கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்காய் நார் மேட் தயாரிப்பு தொழில் செய்து நல்ல வருவாய் ஈட்டி வரும் காங்கேயம் கயிறு குழும நிர்வாக இயக்குநர்   சரவணக்குமாரிடம் பேசியபோது இத்தொழில் குறித்த பல விவரங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘தேங்காய் நார் உற்பத்தித்தொழில் இன்று பல மாற்றங்கள் அடைந்து நல்ல வரவேற்புக்குரியதாக உள்ளது. பெரும்பாலும் இயந்திரங்கள் மூலமே தேங்காய் நார் பொருட்கள் தயாரிப்பு உள்ளதால் உற்பத்தி அதிகரித்துள்ளது. அதேசமயம் மேட் தயாரிப்பு இயந்திரத்தின் விலை பல லட்சம் ரூபாய் என்பதால், முதலீடு செய்வது கஷ்டம்.

ஆனால், குறைந்த விலையில் கைகளால் இயக்கக்கூடிய மேனுவல் இயந்திரத்திலும் மேட்களை தயார் செய்து விற்பனை செய்யலாம். ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் 115 கிலோ தேங்காய் நாரிலிருந்து ஒரு நாளில் 100 கிலோ கயிறு தயாரிக்க முடியும். அப்படி கயிறு தயாரிப்பவர்களிடமிருந்து இந்தக் கயிறை வாங்கிச் சென்று கைகளால் இயக்கக்கூடிய இயந்திரம் மூலம் நாம் மேட் தயாரிக்கலாம்’’ என்கிறார். இனி மேட் தயாரிப்பின் சிறப்பம்சங்கள் திட்ட மதிப்பீடு உற்பத்தித் திறன் மற்றும் லாபம் என சரவணக்குமாரின் சுயதொழிலுக்கான வழிகாட்டுதலைப் பார்ப்போம்…

சிறப்பம்சங்கள்  

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் டோர் மேட்களுக்கு மாற்றாக தேங்காய் நார் டோர் மேட்கள் அமையும்.  துணிகளால் தயாரிக்கப்படும் டோர் மேட்கள் சீக்கிரமே கிழிந்துவிடும். அதே சமயம் எளிதில் மக்கும் தன்மையுடையதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது. குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இதன் மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. வருங்காலங்களில் எல்லா பொருட்களும் உடல் நலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பயன்படுத்தப்படும் நிலையில் இதன் தேவை அதிகம்.

நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழில்.இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொடங்கலாம். இது ஒரு 100% இயற்கை தயாரிப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேட்களில் வசம்புக் கலவை சேர்த்தால் கால் வலி வராது. உற்பத்தியில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காதது.மத்திய கயிறு வாரியத்திலிருந்து மேட் தயாரிப்புக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதை சுயதொழிலாக தொடங்கும்பட்சத்தில் மானியமும் வழங்கப்படுகிறது.

திட்ட மதிப்பீடு: ரூ.2.75 லட்சம்
முதலீடு: (தேவையான இயந்திரங்கள்
மற்றும் மூலப்பொருட்கள் )
 இடம் - (சுமார் 1000 சதுர அடி போதுமானது) வாடகை
இயந்திரம்                 - ரூ.1.50 லட்சம்
மூலப்பொருள்         - ரூ.1,25,000
மூலப்பொருளான தேங்காய் நார் கயிறு ஒரு நாளைக்கு 100 கிலோ தேவைப்படும். ஒரு மாதத்திற்கு 25 வேலைநாட்கள் என எடுத்துக்கொண்டால் 2500 கிலோ தேவைப்படும். (ஒரு கிலோ தேங்காய் நார் கயிற்றின் விலை ரூ.50 என்றால், ஒரு மாதத்திற்கு 2500 கிலோXரூ.50 = ரூ.1,25,000 தேவைப்படும்.
மொத்தம் -  ரூ.2.75 லட்சம்.

தயாரிப்பு முறை!

மேனுவல் மெஷினில் மேட் தயாரிப்பதும் சுலபம்தான். கைகளால் இயக்கப்படும் ஓர் இயந்திரத்தில் 4 பேர் வேலை செய்யலாம். 2 பேர் பினிஷிங் வேலை செய்ய வேண்டும். கயிற்றை இயந்திரத்தின் ஒரு பகுதியில் கொடுத்தால் பின்னப்பட்டு மேட்டாக தயாராகி வெளியேவரும். இவ்வாறு 4 பேரும் சேர்ந்து ஒரு நாளில் 100 கிலோ கயிற்றில் 200 மேட்டுகள் தயார் செய்ய முடியும்.

தேவையான பணியாளர்கள்
மற்றும் ஊதியம்:
ஆபரேட்டர் (4) - ரூ.40,000
பணியாளர் (2)     - ரூ.18,000
மொத்தம்  (6)     - ரூ.58,000
 
 உற்பத்தித் திறன் மற்றும் விற்பனை வரவு

ஒரு மாதத்திற்கான மூலப்பொருளான 2500 கிலோவிலிருந்து தோராயமாக 5000 மேட்கள் தயார் செய்ய முடியும். சந்தையில் மொத்த விலைக்கு ஒரு மேட் ரூ.80 முதல் 90 என விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். நாம் ஒரு மேட்டின் விலை 90 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அப்படியானால் ரூபாய் 4,50,000 கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் மார்க்கெட்டிங் செய்வதைப் பொறுத்து நமது விற்பனை லாப வரம்பு அதிகமாகவும் வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது இத்தொழிலின் சிறப்பு.

நிர்வாகச் செலவுகள்:
இடம் வாடகை - ரூ.10,000 (நகரம், கிராமத்திற்கு மாற்றம் உண்டு)
 தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.
 இதர செலவு     -  ரூ.3,000
 மொத்தம்     - ரூ.13,000
 நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)
 மூலப்பொருட்கள்     - ரூ.1,25,000
 சம்பளம்     - ரூ.58,000
 நிர்வாகச் செலவுகள்     - ரூ.13,000
 மொத்த செலவு     - ரூ.1,96,000
  லாப விவரம்:
  விற்பனை மூலமான வரவு - ரூ.4,50,000
  மொத்த செலவு    -  ரூ.1,96,000
  நிகர லாபம்     - ரூ.2,54,000

 பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்தத் தொழில் கிடையாது என்பதோடு அங்கு மூலப்பொருட்கள் கிடைப்பது, அதிக செலவு போன்ற காரணங்களால் நமக்கு தொழில் போட்டி இருக்காது என்பது நமக்கிருக்கும் கூடுதல் பலம்.தென்னை மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும், அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ளவர்கள் இந்தத் தொழிலை உடனடியாகத் தொடங்கலாம்.

தற்போதைய இந்தத் தொழிலை தொடங்கினால் நல்ல வருமானம் கிடைப்பதற்கு அதிகமான வாய்ப்புள்ளது. இந்தத் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால் புதிய தொழில்முனைவோர்கள் தாராளமாகத் தொடங்கலாம்.

- தோ.திருத்துவராஜ்