தண்ணீரால் இயங்கும் மோட்டார் பைக்!



கண்டுபிடிப்பு

மதுரை மாணவனின் அரிய கண்டுபிடிப்பு!


மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்’ என்ற தேசிய அளவிலான தொழில்நுட்பதிறன் போட்டியை ஒவ்வொரு வருடமும் நடத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாநகரில் சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு (டை) கோவை கிளை சார்பில், ‘ஹேக்கத்தான்-2018’ எனும் நிகழ்ச்சி அண்மையில் நடத்தப்பட்டது.

தொழில்நுட்ப ஆர்வலர்களை ஓரிடத்தில் திரளச் செய்து, நகர்ப்புறத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண, மென்பொருள், செயலி போன்றவற்றை உருவாக்க தூண்டும் போட்டியே ஹேக்கத்தான்.

கோயம்புத்தூர் நகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்குண்டான  இப்போட்டியில் பல்வேறு மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பங்கேற்க தண்ணீர் மற்றும் சோலார் பேனலில் ஓடும் தனது கண்டுபிடிப்பான டூ வீலரை, மதுரை மேலூரிலிருந்து கோவைக்கு ஓட்டிச் சென்ற முருகன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தண்ணீரில் இயங்கும் டூ விலர் தயாரிக்கும் எண்ணம் எப்படி வந்தது? என்று முருகனிடம் கேட்டபோது, ‘‘மதுரை மாவட்டம் மேலூர் ரங்கசாமிபுரத்தில்தான் எங்கள் வீடு உள்ளது. மதுரை புதூரில் இயங்கும் அரசு ஐ.டி.ஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறேன். என் அப்பா ஜெயக்குமார் கூலித்தொழிலாளி.

சமீபத்தில் கனவு ஆசிரியர் விருது பெற்ற முகம்மது பிரேம் ரோஸ் சார்தான் நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கும் என் சக மாணவர்களுக்கும்  அறிவியலில் வழிகாட்டியாக செயல்பட்டார். ஆகையால் சிறுவயதிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளின் மேல் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதனால் எட்டாம் வகுப்பிலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டேன்.

வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில்தான் என் கவனம் செல்லும். அப்படி உருவானதுதான் தண்ணீரில் செல்லும் சைக்கிள் படகு, வீடார் கருவி, காது கேளாதவர்களுக்கான கருவி போன்றவை.

இக்கண்டுபிடிப்புகள் பள்ளி அளவில் எனக்கு பல பரிசுகளை வாங்கித் தந்தன. மேலும் ‘யங் சயின்டிஸ்ட் 2017-18’ போட்டியில் கலந்துகொண்டபோது எனது கண்டுபிடிப்பான விவசாயிகளுக்கு உதவும் எளிய முறையில் கடலை பிரிக்கும் இயந்திரம் முதல் பரிசை வென்றது.

அன்றாட பயன்பாட்டில் டூ வீலர் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், இப்போது உள்ள சூழலில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேயிருக்கிறது. இதன் விளைவால் என் போன்ற ஏழைக் குடும்பத்தை சேர்ந்த  அனைத்து எளிய மக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் இப்பிரச்னை என்னை மிகவும் பாதித்தது.

அதன் விளைவாக பெட்ரோலுக்கு முற்றிலும் மாறான ஒரு எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். என்னிடம் டூ விலர் இல்லாததால் இரண்டு வருடம் தண்ணீரை எப்படி மாற்று எரிபொருளாக பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்து ஆயத்தமானேன்.

ஆறுமாதத்திற்கு முன் என் அப்பா செகண்ட் ஹேண்ட் டூ விலர் ஒன்றை வாங்கி தந்தார். அந்த பைக்கையே சோதனைக் கருவியாக கொண்டு தண்ணீரில் இயங்கும் பைக்கை வடிவமைத்தேன்’’ எனக் கூறும் முருகன் தன் கண்டுபிடிப்பு வாகனம் செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.

‘‘தண்ணீரில் இயங்கும் வகையில் சோலார் பேனலுடன் இணைக்கப்பட்ட பேட்டரி, தண்ணீர் சேமிக்க கேன் என எனது பைக்கில் பல மாற்றங்கள் செய்தேன். ஸ்டார்ட் செய்ய மட்டும் சிறிது பெட்ரோல் தேவைப்படும். பின் பைக்கின் ஒரு புறம் வைத்துள்ள கேனில் ஒரு லிட்டர் தண்ணீருடன், 200 கிராம் சாதாரண உப்பு போட்டு கலக்க வேண்டும். பைக் ஸ்டார்ட் ஆனவுடன் பவர் சப்ளை தண்ணீருக்கு செல்லும். உப்பு கலந்த தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் தனித்தனியாக பிரியும்.

ஆக்ஸிஜன் வெளியேற, ஹைட்ரஜன் எஞ்சினுக்கு சென்று வாகனத்தை இயக்குகிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள பைக்குகளைப்போல் இதிலிருந்து எந்த நச்சுப் புகையும் வெளியேறாது. மணிக்கு 45 கி.மீ வேகத்தில் செல்லும். ஒரு லிட்டர் தண்ணீரில் 40 கி.மீ வரை ஓடும். அதன் பிறகு கழிவாக மாறிவிடும் அந்த தண்ணீரை மாற்றிவிட வேண்டும்.

விரைவில் சோலார் மற்றும் பேட்டரியை அகற்றிவிட்டு, பெட்ரோல் டேங்கில் தண்ணீரை ஊற்றி ஓட்டும் வகையில் மாற்றி அமைக்க உள்ளேன்’’ என்று ஆர்வமுடன் கூறும் முருகன் ‘‘தி நோபல் அறிவியல் மன்றம்’’ எனும் பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி அறிவியல் சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் சமூக சேவைகள் செய்துவருகிறார்.

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பசூழலில் இருந்தாலும் தான் கொண்ட அறிவியல் அறிவை மாணவர்களுக்கு பகிரவேண்டும் என்ற எண்ணத்தில் கல்லூரிக்கு சென்றுவந்த பிறகு கிடைக்கும் ஓய்வு நேரங்களிலெல்லாம் அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அறிவியல் உட்பிரிவுகளான இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் போன்ற பாடங்களை செயல்முறை விளக்கங்களோடு கற்பிக்கிறார். இதுவரை இவர் 36 பள்ளிகளுக்கு சென்று அறிவியல் பாடங்களை நடத்தி அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளார். மாணவ சமூகத்துக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்ட முருகனின் இந்த மேன்மையான எண்ணத்தை பாராட்டி வரவேற்போம்!   

  - வெங்கட்

  படங்கள்: ஜெயக்குமார்