தனியார் துறை வேலையில் கல்வி மட்டுமே பிரதானமல்ல..!



வழிகாட்டல்

வேலைக்கேற்ற படிப்பா? படிப்புக்கேற்ற வேலையா?

நிரந்தர வருமானமும் நிறைய சலுகைகளும் அரசுத் துறை வேலைகளில்தான் உள்ளது என்பதால் எல்லோருக்கும் அதன் மீதுதான் நாட்டம் அதிகம். ஆனாலும் தனியார் துறையில்தான் பல்வேறு விதமான பணி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. யார் யார் என்னென்ன படிப்பு, தகுதி வைத்திருந்தாலும் அதற்கேற்ப அவரவருக்கு பொருத்தமான வேலை நிச்சயம் தருவது தனியார் துறைதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அரசுப் பணியோ, பொதுத் துறை வேலையோ, சுயதொழில் செய்வதோ... எதுவாக இருந்தாலும் உடனடியாக நடந்துவிடுகிற காரியம் அல்ல. இவை நிறைவேற, சில மாதங்களோ சில ஆண்டுகளோ கூட ஆகலாம். அதுவரை என்ன செய்வது..? வீட்டில் சும்மா கிடப்பது என்பது  சற்றும் புத்திசாலித்தனமான முடிவு அல்ல.

பொதுவாக யாராக இருந்தாலும்… ‘இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம்’ என்று தீர்மானமாக சிந்தித்து, அதற்காக முழு மூச்சுடன் இருப்பவர்கள் கூட, வேறு எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில் ‘முடங்கிக் கிடப்பது’ கூடவே கூடாது. எந்த வேலையா இருந்தாலும், என்ன சம்பளம் கிடைச்சாலும், கிடைக்கிற வேலையை எடுத்துக்கணும். எல்லா இளைஞர்களுக்கும், எல்லா நேரத்துக்கும் பொருந்துகிற ஆலோசனை இது. தனது படிப்புக்கும், தகுதிக்கும் பொருந்தி வராத வேலையாக இருந்தாலும் பரவாயில்லை. ஏதேனும் ஒரு வேலையில் இருந்தே ஆக வேண்டும். அதில் இருந்துகொண்டே தனது இலக்கு நோக்கிப் பயணிக்கலாம்.

தனி நபர் தேடல் முயற்சியில் முதல் அடி அல்லது ஆரம்ப கட்டம் ‘வேலைக்குப் போவது’. அன்றாட வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுவது வேலைக்குப் போகிற பழக்கம்.நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்துக்கு எழுந்து, தன்னைத் தயார் செய்துகொண்டு, குறிப்பிட்ட நேர அட்டவணைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் ‘வேலைக்குப் போக வேண்டும்’.

இது மட்டுமல்ல; அலுவலகக் கலாசாரம் என்று ஒன்று இருக்கிறது. தன்னை விட உயர்நிலையில் இருக்கிறவர்களிடம் எப்படி நடந்துகொள்வது..? தன்னுடன் பணி புரிகிறவர்களுடன் எப்படிப் பழகுவது..? அலுவலகத்துக்கு உள்ளேயும் வெளியிலும் தகவல் பரிமாற்றம் செய்துகொள்வது எப்படி..? அலுவலகப் பொறுப்புகளை நிர்வகிப்பது எப்படி..? சிக்கல்களை சமாளிப்பது எப்படி..?

இப்படி எத்தனையோ ‘எப்படி?’கள் இருக்கின்றன. இது ஒவ்வொன்றையும் வேலைக்குப் போனால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இந்த ஒவ்வொன்றும், நம் தரத்தை உயர்த்துகிற படிக்கட்டுகள். இவற்றைக் கடந்து வரும்போது தன்னையும் அறியாமல், தானாக படிப்படியாக, பணித்திறன் நம்முள் வளர்ந்து வரும். இதனால்தான் பல சமயங்களில், ‘பணி அனுபவம்’ வேண்டும் என்று கேட்கிறார்கள்.

நேரடியாகப் பணி அனுபவம் இல்லையானாலும், ஏதேனும் ஓர் அலுவலகப் பணியோடு தொடர்பு இருந்தாலும் போதும். ஒரு நிறுவனத்துக்குள் அவரை நேரடியாக சேர்த்துக் கொள்வதற்கு யாருக்கும் தயக்கம் இருக்காது. இதனையே வேறு கோணத்தில், சற்றே எதிர்மறையாகப் பார்ப்போம்.

பட்டப்படிப்பு முடித்து ஏழெட்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் போகாத ஒருவர் வயது சுமார் 30 ஆகிறது. முதன் முறையாக, யாருடைய சிபாரிசிலோ, ஏதோ ஒரு வேலைக்குப் போகிறார் என்றால் என்னவாகும்..?

மிகப் பெரும்பாலான சமயங்களில் அவரால், மற்றவர்களுடன் இயல்பாக ஒன்றி வேலை செய்ய முடிவதில்லை. காரணம் ஒன்றல்ல… பல காரணங்கள் சொல்லலாம். வயது இடைவெளி, புதிய பணிச் சூழலுக்குத் தன்னை மாற்றிக் கொள்ள இயலாமை, பிறருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓட முடியாமை, தன்னை விட வயதில் இளையவரின் கீழ் பணி செய்ய மனம் ஒப்பாத நிலைமை, இத்தனை பிரச்னைகளுக்கும் அடியில் ஒளிந்திருப்பது - வேலைக்குப் போகாமல் இருந்த நீண்ட இடைவெளி காலம்தான்.

இதில், வருத்தம் தருகிற உண்மை ஒன்று இருக்கிறது. அப்போதே வேலை கிடைச்சுருந்தா போகாமலா இருப்பார்கள்..? என்று கேட்கத் தோன்றும். இங்குதான் ‘தனிநபர் தேடல்’ முக்கியம் ஆகிறது. வேலை தேடும் படலத்தில் ஒருவரின் கல்வியும் அவரின் பணித்திறனும் மட்டுமே பிரதானமல்ல. ஆர்வம், ஈடுபாடு, கடின உழைப்பு ஆகியனவும் கூட அவரின் தகுதிகள்தாம். இவற்றைக் கொண்டே, வேலை பெற முடியும். பெற்ற வேலையில் சாதனைகளைப் படைத்து உயர்வடைய முடியும்.

தனியார் துறை வேலை வாய்ப்புகள் என்றாலே, கனரகத் தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும்தாம் நமக்குத் தோன்றுகின்றன. அப்படி எதுவும் அவசியமில்லை. சிறிய கடையாகவோ, ஒரு நபர் நிறுவனமாகவோ இருக்கலாம். சில ஆயிரங்கள் முதல் போட்டு நடத்துகிற சுயதொழிலாக இருக்கலாம்; அதுவும் இல்லையா...? சம்பளம் இல்லாமல் ஸ்டைஃபண்ட் கொடுக்கும் வேலையாக, வெறுமனே பயிற்சியாகக் கூட இருக்கலாம். தவிர்த்துவிடாதீர்கள்.  தொடர்ந்து தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது - தனிநபர் தேடலில் முதல் தேவை.

அடுத்து வருவது - ‘புதுப்பித்துக்கொள்ளல்’. தனக்கு ஆர்வமுள்ள பணியில் என்ன நடைபெற்று வருகிறது என்பதை நாள்தோறும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு சிறந்த உதாரணம் புகைப்படக் கலை. தான் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞராக வர ஆசைப்படுகிறார் ஒருவர். தனக்கு வருமானம் இருக்கிறதோ இல்லையோ.... சந்தையில் புதிதாக என்ன ‘காமிரா‘ வந்துள்ளது..? அதன் விலை என்ன..? அதில் புதிதாக சேரக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்னென்ன..? எல்லாவற்றையும் தேடிப் பார்த்துத் தெரிந்துகொள்வார்.

இந்த ஆர்வம் இருந்தால் போதும். தனியார் துறையில் தனித்து நிற்கலாம்.
போட்டிகள் நிறைந்த உலகம் இது என்பது முற்றிலும் உண்மை. ஆனால், ஒன்று போனால் இன்னொன்று. அதுவும் போனால் வேறொன்று என, அடுத்தடுத்து வாய்ப்புகளை அள்ளித் தருகிற தனியார் துறை, வேறு என்னவெல்லாம் எதிர்பார்க்கிறது..? அதையும் அடுத்த இதழில் பார்ப்போம்…

(வளரும்)