செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

கற்றல் குறைபாடு மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்ற தடை!

டிஸ்லெக்சியா என்று சொல்லப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் விஷயத்தில், ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத்தை பள்ளிக் கல்வி அறிவித்துள்ளது. இந்தத் திட்டப்படி முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில், 1,088 ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில், சிறப்புப் பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான நிகழ்ச்சி சமீபத்தில் ராயப்பேட்டை, வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநர், அறிவொளி பேசுகையில், ‘‘மாணவர்களின் அடிப்படைத் திறனைப் புரிந்து, அதை வெளிக்கொணர வேண்டும். கற்றல் குறைபாடு இருந்தால்,அந்த மாணவர்களின் பெற்றோருக்கும், அதற்கான பயிற்சி தருவது முக்கியம்.

தனியார் பள்ளிகளில், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைக் கணக்கெடுத்ததில், ஒவ்வொரு பள்ளியிலும், குறைந்தபட்சம் 20% பேர் படிக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, ஆசிரியர்களோ, சம்பந்தப்பட்ட பள்ளிகளோ பயிற்சி தருவதில்லை.

மாறாக மதிப்பெண் குறைவாக வாங்கினால், அவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து கட்டாயமாக வெளியேற்ற முயற்சிக்கின்றனர். இனி எந்த பள்ளியும் கற்றல் குறைபாட்டுக்காக மாணவர்களை வெளியேற்றக் கூடாது. அவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் டிஸ்லெக்சியா மாணவர்களுக்கான ஆசிரியர்கள் கட்டாயம் இருக்கவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

3,000 அரசுப் பள்ளிகளில், ‘ஸ்மார்ட்’ வகுப்பு!

தமிழகப் பள்ளிப் கல்வியில், பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, அனைத்து அரசுப்
பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்பத்தில், வகுப்பறைகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ‘டேப்லெட்’ என்ற, கையடக்க கணினியுடன் பாடம் கற்றுத்தர திட்டமிடப்பட்டு, 3,000 பள்ளிகளுக்கு தலா, 10 வீதம், 30 ஆயிரம், ‘டேப்லெட்’ வாங்க ‘டெண்டர்’ விடப்பட்டது.

இந்நிலையில், டேப்லெட் வழங்குவதற்கு பதில், வகுப்பறைகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பை தொடங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, ‘எல்மோ’ என்ற நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளில் கணினியுடன் இணைந்த ஸ்மார்ட் வகுப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

 சென்னையில், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஒரு வகுப்பறையில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கேமராவுடன் இணைந்த ஸ்கேனர் கருவி, டிஜிட்டல் எழுது கருவி, வீடியோ ரெக்கார்டர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் உரையாடல்களை, ஒரு மாதம் வரை சேமித்து வைக்கும் வசதியுள்ள ஸ்மார்ட் கருவி போன்றவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது வீடியோ ரெக்கார்டர் மற்றும் புகைப்பட கேமராவை பயன்படுத்தலாம். ஆசிரியர் முன் கேமராவை திருப்பினால், அவர் பாடம் நடத்துவதை திரையில் பார்க்கலாம். அதேபோல, புத்தகத்தில் உள்ள சில வரிகளையோ, படங்களையோ மாணவர்களுக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால், கேமராவில் காட்டினால் அது, திரையில் பெரிதாக தெரியும்.

2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பள்ளிகளில், மாணவர்களுக்கு அதிக வீட்டுப் பாடம் கொடுப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், ‘2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரக்கூடாது’ என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு அனைத்து வகை பாடத்திட்ட பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, ‘சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும், 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரக்கூடாது’ என தமிழகப் பள்ளிக் கல்வி  இயக்குநர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்டத் தனியார் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் வழங்கக்கூடாது. புத்தகச் சுமை குறித்து, ஏற்கனவே சமச்சீர் கல்வித் திட்டம் அமலானபோது, தமிழகத்தில் சில விதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஒன்று மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 1.5 கிலோ; 3, 4ம் வகுப்புகளுக்கு 2 கிலோவுக்கு மேலான புத்தகப் பை எடை இருக்கக் கூடாது. 5ம் வகுப்புக்கு 2.2; 6ம் வகுப்புக்கு 3.25; 7ம் வகுப்புக்கு 3.35; 8ம் வகுப்புக்கு 3.75 கிலோ எடைக்கு மேல் புத்தகப் பை எடை இருக்கக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட்போன் மூலம் வருகைப்பதிவு!
 
பல அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரித்து காண்பிக்கும் நோக்கத்துடன், இல்லாத மாணவர்களை இருப்பதாக கணக்கு காண்பித்து, நலத்திட்ட நிதியை அமுக்கும் நிலை உள்ளது. இந்த தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி நடக்காது. பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர், ஆசிரியர்களுக்கு ஸ்மார்ட் போன் மூலம் வருகைப்பதிவு மேற்கொள்ளும் விதமாக, ‘Tn Attendance’ என்ற பிரத்யேக ‘ஆப்’ வந்துவிட்டது.

இதை ஆசிரியர்கள் பதிவிறக்கி, அந்தந்தப் பள்ளிக்கான பயனர் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்தால், மாணவர்களின் விவரங்கள் திரையில் தோன்றும்.தினசரி காலை, 9.30 மணியளவிலும், மதியம் உணவு இடைவேளைக்கு பின்பும், மாணவர்களின் வருகையை இதில் உள்ளீடு செய்ய வேண்டும்.

விடுப்பு எடுத்த மாணவர்களின் பெயருக்கு அருகில் மட்டும், ‘கிளிக்’ செய்தால், ‘ஆப்சென்ட்’ ஆகிவிடும். ஒருமுறை தகவல்களை உள்ளீடு செய்த பின், வருகைபுரிந்தவர்கள், பள்ளிக்கு வராதோர் குறித்த தகவல்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் என, தனித்தனியே திரையில் தோன்றும். இதை சமர்ப்பித்தவுடன், இயக்குநரகத்தில் உள்ள தொழில்நுட்பக் குழுவினர் பார்வையிடலாம்.

கோவை பள்ளிகளில், பரீட்சார்த்த முறையில், இம்மாதம் இறுதிவரை ஸ்மார்ட் போனில் அட்டெண்டென்ஸ் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தப் புதிய நடைமுறை வாயிலாக,வருகைப்பதிவு எடுப்பதால், பள்ளிக்கு வருவோர் குறித்த தகவல்களை எந்நேரத்திலும் அதிகாரிகளால் இருந்த இடத்தில் இருந்தபடி பார்வையிட முடியும். இதே நடைமுறை, ஆசிரியர்களுக்கும் உள்ளது. குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் குறித்த தகவல்களை, சி.இ.ஓ., முதல் அனைத்து அதிகாரிகளும் அறிந்து, ஆய்வு நடத்த முடியும்.