உத்வேகம் தரும் ஊக்கமருந்து!வாசகர் கடிதம்

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தின் மறுமதிப்பீட்டு முறைகேட்டை பற்றிய கட்டுரையானது கல்வியாளர்களின் கோணத்தில் ஆதி முதல் அந்தம் வரை அலசும் விதமாக இருந்தது. இதன் மூலம் உயர்கல்வித் துறையின் தரமும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகும் என பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலையில் இம்முறைகேட்டை அணுகியிருப்பது பாராட்டதக்கது.
  - ஜெ.ீநிதி, பெத்தநாயக்கன்பாளையம்.
 
கல்வித்துறையில் கலைஞரின் பங்களிப்புகள் குறித்த கட்டுரை அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டிய அவசியமான ஒன்று. ஏற்றத்தாழ்வு இல்லாத சமச்சீர் கல்வி முறை, கிராமப்புற மாணவர்களுக்கு உதவும் வகையில் உயர்கல்வியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது, மாவட்டந்தோறும் மருத்துவ கல்லூரிகள் நிறுவியது என அவரது ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியானது என்பதை உணர்த்துகிறது இக்கட்டுரை.
  - சா. வினோத்குமார், கல்லிடைக்குறிச்சி
 
எட்டு வயதில் மதுரை சிறுமி ஹரிணி மாரத்தானில் கின்னஸ் சாதனை படைத்தது பற்றி அவரின் தந்தையின் பேட்டி அருமை. எப்படி தன் மகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கினார் என்பதையும், தன் மகளின் சாதனையால் அவர் பெற்ற மகிழ்ச்சியையும் அழகாக பதிவு செய்திருந்தது அற்புதம். குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி இதழில் வளரும் தலைமுறைக்கு தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகள் இடம்பெறுவது பாராட்டுக்குரியது.
  - வி.நவநீதன், பெரியகுளம்.
 
நாளுக்கு நாள் அப்டேட்டாகி வரும் தொழில்நுட்ப உலகில் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் நவீனப்படுத்துவது அவசியமானது. அவ்வகையில் கணிதத்தை கணினி மூலம் கற்பிக்கும் குரோம்பேட்டை அரசுப் பள்ளியின் புதுமுயற்சி பாராட்டத்தக்கது. மேலும் பெண் தொழில்முனைவோருக்கான மத்திய அரசின் ஸ்டாண்ட் அப் கடன் திட்டங்கள் குறித்த கட்டுரை பெண்களுக்கு தன்னம்பிக்கையைத் தந்து சுயதொழில் செய்ய உத்வேகம் தரும் ஊக்கமருந்தாக இருந்தது.
  - ரெ. பிரகாஷ், நாகப்பட்டினம்.