எதிர்மறை எண்ணங்கள்... மனதில் படியும் அசுத்தப் படலங்கள்!உளவியல் தொடர் 50

உடல்... மனம்... ஈகோ!


கோபத்தில் நிதானமும், குழப்பத்தில் அமைதியும், துன்பத்தில் தைரியமும், தோல்வியில் பொறுமையும், வெற்றியில் தன்னடக்கமும் வாழ்க்கையை இனிதாக்கும் என்றொரு பொன்மொழியைப் படித்திருப்போம். அது வாழ்க்கையை இனிதாக்கும் வழிமுறை என்றாலும், உணர்ச்சிவசப்படும் நேரங்களில் அதை நினைவில் கொள்ளாமல் போவதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

எதிர்பாராமல் நடப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், நடந்தேறும் சம்பவங்களுக்கு எண்ணங்களின் எழுச்சியும் காரணமாகவே இருக்கிறது. அதைத்தான் சிலர் ‘திடீர்னு தோணுச்சு’ என்று குறிப்பிடுகிறார்கள். உன்னிப்பாகக் கவனித்தால், ‘திடீரென்று’ எழும் எண்ணங்கள்தான் மனிதர்களின் எதிர்மறை எண்ணங்களுக்கு ஒரு வழங்குமுறையாக (source) இருப்பது புரியும்.

‘உலகமே ஒரு நாடக மேடை, நாமெல்லாம் நடிகர்கள்’ என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டதுபோல், ஒவ்வொருவரும் அவரவர் அளவில் தங்கள் கதாபாத்திரத்தின் செயல்பாட்டைத் தங்களின் நேர்மறை எண்ணங்களாலும், எதிர்மறை எண்ணங்களாலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வெளிப்பாடுதான் கதாபாத்திரத்தின் ஆளுமையை வடிவமைக்கிறது. அதே நேரம், ஆளுமைச் சிதைவுக்கும் அவனுள் எழும் எதிர்மறை எண்ணங்கள்தான் எப்போதும் இன்னொரு மனிதனைப்போல் பேசிக்கொண்டேயிருக்கிறது.

மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாடு சூழ்நிலை சார்ந்தது என்றாலும், உணர்ச்சித்துடிப்புகள் எப்போதும் சில மணித்துளிகள் மட்டுமே நீடிக்கக்கூடியது. அந்தவகையில் அதை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் பலன் அடங்கியிருக்கிறது. எதிர்மறை எண்ணங்கள் உணர்ச்சிகளுடன் கலந்து நிற்கும் நேரத்தில் முதலில் எவ்விதமான முடிவையும் எடுக்காமல் இருக்க வேண்டும். அதோடு உடனடியாக நிதானமான மனநிலைக்கு மாறவும் முயற்சி செய்ய வேண்டும்.

எதிர்மறை எண்ணங்கள் சிந்தனை, யோசனை சார்ந்த வகையில்தான் இருக்கும் என்பதில்லை. சில வேளைகளில் மற்றவர் மீது உமிழும் அமில வார்த்தைகள், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, சுயவெறுப்பு, தீவிர மன அழுத்தம், ஊசலாடும் மனநிலை போன்ற வகையிலும் இருக்கும். அது ஒரு படலம் போல் மனதில் படிந்துகொள்ளும். அப்படலத்தின் அடர்த்தி சதவிகிதத்திற்கு ஏற்றவாறுதான் மனிதர்களின் உணர்ச்சி வெளிப்பாடு இருக்கிறது.

சிறு வயது முதல் படியும் எதிர்மறை எண்ணங்களின் படலத் தால்தான் குத்துவது, அடிப்பது, கத்துவது, வேதனைப்படுத்துவது, வேதனைப்படுத்திக்கொள்வது, மிதமிஞ்சிய வகையில் ஆர்வமாக இருப்பது, பேசாமல் இருப்பது போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த வெளிப்பாடுதான் மனிதர்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அஸ்திவாரமாக அமைகிறது.

உணர்ச்சி நிலைகளை நீட்டிக்காமல் முறையாகக் கையாண்டு சரிசெய்து கொள்ளவேண்டும். முந்தைய அத்தியாயங்களில் சொன்னதுபோல் எதிர்மறை எண்ணங்கள் ஏதோ ஒரு அதிர்ச்சி நிறைந்த (குறிப்பாக சிறுவயதில்) நிலையிலிருந்துதான் எட்டிப்பார்க்கிறது. இந்தப் புரிதலோடு அதைச் சரிசெய்ய, தனியே ஓர் இடத்தில் அமர்ந்து உணர்ச்சி அலைகளைக் கவனித்து, அவற்றுக்கு வார்த்தை வடிவம் தந்து பேசிப் பார்க்க வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலைகளில் சிறிய எதிர்மறை எண்ணம் எட்டிப் பார்க்கும்போது, ஈகோ அதனைக் கவனித்து, இனம் கண்டறிந்து ஒரு Anti Virus Software போல் செயல்புரிந்து virus பரப்பும் எதிர்மறை எண்ணங்களை இருந்த இடம் தெரியாமல் Delete செய்துவிடும். ஆனால், யதார்த்த வாழ்வில் அழுத்தங்களாலான உலகில், அலை அலையாய் எதிர்ப்படும் எதிர்மறை எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து கலவையாய் மாறி நிற்கும் சூழலில், அவற்றைச் சீர்செய்ய வல்லுநரின் சிகிச்சை முறைதான் சிறந்தது.

எதிர்மறை எண்ணங்களை உணர்ந்து எடைபோட்டு, அவற்றை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில் ஒரு தேர்ந்த வல்லுநரை அணுக சற்றும் தயங்கக்கூடாது. பொதுவாக நம் நாட்டில் மனநலம் குறித்து வல்லுநரை சந்திக்க பலரும் தயங்கும் சூழ்நிலைதான் இருந்து கொண்டிருக்கிறது.

உடலில் காயமோ, எலும்பு முறிவோ ஏற்படும்போது தயக்கமின்றி மருத்துவரை தேடிச் செல்வதைப்போலத்தான் மனதில் காயங்கள் ஏற்படும்போதும், மனமுறிவு ஏற்படும்போதும் நடந்துகொள்ள வேண்டும். மனவைத்தியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அவசியமான ஒன்றுதான். இந்தப் புரிதல்தான் மிக முக்கியம்.

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் மனமுறிவில் Golden Hour  செயல்பாட்டைத்தான் ஈகோ வழிமுறையாக சுட்டிக்காட்டுகிறது. அம்மாதிரியான நேரத்தில் ஈகோவின் குரலைக் கவனித்து நடந்துகொள்வது எப்போதும் சிறப்பான பயனைத் தரும். காரணம், ஈகோ காப்பாற்றுவது ஒவ்வொரு மனிதர்களின் விலை மதிப்பில்லாத உயிர். அதை உணராமல் எதிர்மறை எண்ணங்களாலான படலத்தின் கனம் கூடி, வலுப்பெற்று, அழுத்தம் அதிகரித்துப் போகும்போதுதான் சிலர் வாழ்க்கையில் அசாதாரண முடிவை (தற்கொலை) எடுத்துவிடுகிறார்கள்.

France நாட்டில் நான்சி என்ற பெண்மணி வசித்துவந்தார். பார்க்க மிகவும் அமைதியானவராக இருந்தார். அவருள் எதிர்மறை எண்ணங்கள் ஊற்றெடுத்துக்கொண்டேயிருந்தது. அவர் அதை சரிசெய்துகொள்ள ஒரு வல்லுநரை அணுகினார். Counciling முறையில், அவரைப் பரிசோதித்த வல்லுநர், அவருள் எழுந்த எதிர்மறை எண்ணங்களாலான குரலைக் கேட்டு அதிர்ந்துபோனார்.

குரு சிஷ்யன் கதை

பறக்க விடாத பை!

குருவும், சிஷ்யனும் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.  குரு முன்னால் நடக்க, சிஷ்யன் பின்னால் நடந்து வந்தான். அப்போது அவனது பால்ய நண்பன் ஒருவன் வந்து சிஷ்யனுடன் நடந்தபடி, “நீ எப்படி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்?’’ என்றான்.
 சிஷ்யன் கொஞ்சமாக வளரத் தொடங்கிய தன் தாடியைத் தடவியபடி, “என்கிட்ட எந்தப் பையும் இல்லை“ என்றான். அதற்கு நண்பன் “நீ சொல்வது புரியலையே!’’ என்றான் அவன்.

உடனே சிஷ்யன் “நண்பா ஒரு கதை சொல்கிறேன் கேளு. வனத்தில் ஒரு குருவி இருந்தது. அது எப்போதும் எதையாவது சேகரித்துக்கொண்டேயிருந்தது, தனக்குப் பின்னால் ஒரு சிறிய பையைக் கட்டிக்கொண்டு மனித இனத்தில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது. மனிதர்களுக்கு இடையே சண்டை நடந்தால் உடனே கோபத்தை சேகரித்தது, அதேபோல் ஏமாற்றத்தை, பொறாமையை, வஞ்சத்தை  என்று சேகரித்துக்கொண்டேயிருந்தது.

தனது சேகரிப்பினை எண்ணி குருவி  மகிழ்ந்துபோனது. ஆனால், அதுவரை லகுவாக வானில் சீறிப் பறந்த குருவிக்கு அப்போது பறப்பதற்கு சற்று கஷ்டமாயிருந்தது. சோர்ந்துபோய், ஒரு மரத்தில் உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், “என்ன குருவி சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே! உடம்புக்கு என்ன?” என்றது. “நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! ஆற்றல் போய்விட்டதைப் போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை” என்றது.

நாய், “அது சரி, நீ ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன?” என்றது. “விலை மதிப்பு இல்லாத ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. எல்லாம் வேறு வேறு ரூபத்தில் எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் சேகரித்திருக்கிறேன்” என்று பெருமையாகச் சொன்னது குருவி.

“அட முட்டாள் குருவியே, நீ சொன்னது போல் அவை விலைமதிப்பு இல்லாதவைதான். போகட்டும். முதலில் அந்தப் பைதான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது. அதைக் கவிழ்த்துக் கொட்டிப் பார்” என்றது நாய்.

ஒத்துக்கொண்ட குருவி, தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் அதனால் வானில் பறக்கமுடிந்தது. அதிசயித்துப்போன குருவி பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. அதன் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது. உடனே
ஒவ்வொரு உணர்ச்சிகளாகக் கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் பறக்க ஆரம்பித்தது.

உடனே நாய் சொன்னது, “கேள் குருவி! எதிர்மறை உணர்வுகளை ஒருபோதும் சேகரிக்கவே கூடாது. அவை மிகச்சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அது மிகுந்த பாரமானது. அதுமட்டுமல்ல, அவை உன் நேர்மறை சக்தியை உறிஞ்சிவிடும்’’ என்றது.

கதையை சொன்ன சிஷ்யன் திரும்பி நண்பனைப் பார்த்து, “சில மனிதர்களும் குருவியைப் போல் எதிர்மறை உணர்வுகளை சுமக்காமல் கழற்றிவிட்டால், அவர்களாலும் மகிழ்ச்சியாக விண்ணைத் தொடும் சாதனைகள் பல புரியலாம்” என்றான்.  முன்னால் சென்ற குரு திரும்பி சிஷ்யனிடம் வந்து, “மிகச் சரியாகச் சொன்னாய். உன் சிந்தனை சிறப்பானது’’ என்றார். சிஷ்யன் அவரை வணங்கி பின் தொடர்ந்தான்.

  -  தொடரும்.

ஸ்ரீநிவாஸ் பிரபு