விளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் அரசுப் பள்ளி!



சாதனை

பள்ளிகளில் பி.டி பீரியட் என்றாலே ஆசிரியர்களுக்கு சந்தோஷமாகவும், மாணவர்களுக்கு சோகமான நிகழ்வாகவும் ஆகிவிட்டது இப்போது. ஏனென்றால், பி.டி பீரியடுக்கு பதில் கணக்கு அல்லது மற்ற பாடங்கள்தான்  எடுப்பார்கள். மதிப்பெண்களை நோக்கி ஓடும் பந்தயக் குதிரைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்கள் மாணவர்கள்.

தனியார் பள்ளிகள் முதல் அரசுப் பள்ளிகள் வரை எல்லா பள்ளிகளும் இதே போக்கைதான் பின்பற்றுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் படிப்பை இரண்டாம் கட்டமாக வைத்துவிட்டு விளையாட்டை முன்னிருத்தி ரக்பி, தடகளம், ஃபுட்பால் போன்ற பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் தமிழ்நாட்டின் அணிகளுக்கு அதிக அளவில் விளையாட்டு வீரர்களை தயார் செய்து அனுப்பி வருகிறது காஞ்சிபுரம் மாவட்டம் துரைப்பாக்கத்தில் இயங்கிவரும் அரசு மேல்நிலைப் பள்ளி. தமிழ்நாட்டு பெண்கள் ரக்பி டீமில் இருக்கும் பன்னிரண்டு பேரில் ஒன்பது பேர் இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியின் விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்.

‘‘மூன்றரை வருடத்துக்கு முன்பு இங்கே நான் பகுதி நேர பி.டி. டீச்சராக சேர்ந்தேன். இங்கு சேர்ந்த புதிதில் மாணவர்களோடு சேர்ந்து கபடி விளையாடி பயிற்சிகள் கொடுத்தேன். ஆசிரியர் என்ற காரணத்தால் அவர்கள் முதலில் என்னுடன் நெருங்கி பழகவும், என்னுடைய கட்டளைகள் ஏற்று விளையாடவும் தயக்கம் காட்டினார்கள். அதேசமயம் மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டாதவர்களாகவும் மாணவிகள் அதீத ஆர்வம் கொண்டவர்களாகவும் விளங்கினர்.

 எங்கள் பள்ளி சாராத பிற அணிகளை இங்கு விளையாட விட்டு மாணவர்களைப் பார்க்கச் சொல்வேன். அப்படி ஒரு நாள் கோகோ விளையாடுவதை பார்த்துவிட்டு இசக்கி பவித்ரா எனும் மாணவி, ‘‘சார் நாமும் இந்த மாதிரி ஒரு கோகோ டீம் ஃபார்ம் பண்ணலாமானு’’ கேட்டதின் விளைவாக உருவானதுதான் இந்த அரசுப் பள்ளியின் முதல் கோகோ டீம்.

கோகோ விளையாட்டில் இருந்துதான் 100மீ, 200மீ, போன்ற தடகள போட்டிகளுக்கான அத்தலெட் வீரர்களை உருவாக்கினோம். இப்படி தொடர் பயிற்சிகளுக்கு மாணவிகளும் உற்சாகம் காட்டினார்கள். எங்கள் பள்ளியின் முதல் கோகோ டீம் பங்கு பெற்ற முதல் போட்டியில் தோல்வியைதான் தழுவினர்.

ஆனால், அதற்கு பிறகு நடந்த போட்டிகள் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து மூன்று வருடமாக எங்கள் பள்ளிதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோகோ விளையாட்டிலும் தடகளத்திலும் முதல் இடம்.’’ என அரசுப் பள்ளியின் விளையாட்டு துறை தொடங்கிய புள்ளியை விளக்கிய அரசுப் பள்ளி பி.டி. டீச்சர் முருகெழிலன் தாங்கள் குவித்த வெற்றிகளையும், மெடல்களையும் குறித்து விவரித்தார்.

‘‘2015-16 கல்வியாண்டில் நடைபெற்ற பள்ளிகளுக்கான மண்டல அளவிலான தடகளப் போட்டியில் எங்கள் மாணவிகள் 12 மெடல்கள் வென்றனர். தொடர்ந்து பள்ளிகளுக்கிடையேயான குறு வட்டம், மண்டலம், கல்வி மாவட்டம் அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்தி மெடல்களை வென்றோம்.

விருதுநகரில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் எங்கள் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்று மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். பின் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் எங்கள் மாணவிகள்தான் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன்மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பள்ளி என எங்கள் பள்ளி பெயர் பெற்றது.

சென்னையில் உள்ள நெல்லை நாடார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் எங்கள் மாணவிகள் 50 மெடல்களை குவித்தனர்’’ என்று முருகெழிலன் சொல்லி முடித்த வேளையில் பள்ளியின் அறிவியல் ஆசிரியரும், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் விளையாட்டு பிரியரான மாலவன் தொடர்ந்தார்.

‘‘பள்ளி நாட்களில் நான் பேஸ்கட் பால் பிளேயராக இருந்ததாலும் விளையாட்டு மீது இருந்த ஆர்வத்தாலும் முதலில் மைதானத்தின் இருபுறத்திலும் ஃபுட்பால் போஸ்ட்டை நட்டோம். வேற்று மனிதர்கள் உள்நுழையாதபடி கோட்டைச் சுவர் போல உயரம் ஏற்றி கட்டினோம். அதன் பிறகுதான் மாணவர்களை விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுத்த வேண்டும் என்ற சவாலான விஷயங்களை சந்திக்க நேர்ந்தது.

 முதலில் கோகோ அதிலிருந்து தடகளம், பின்னர் ஃபுட்பால், ரக்பி போன்ற விளையாட்டு பிரிவுகளை உருவாக்கி அப்பிரிவு சார்ந்த வல்லுநர்கள் மூலம் மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்தோம். உதாரணமாக, தடகளத்தில் ஆசியன் கோல்டு மெடலிஸ்ட்டான அதிவீரபாண்டியனை தடகளப் பயிற்சியாளராகவும், தேசிய ரக்பி பிளேயரான அருள் வெங்கடேஷை ரக்பிக்கு பயிற்சியாளராகவும் நியமித்து பயிற்சிகள் வழங்கினோம்.

கோகோ விளையாட்டில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் போன்ற மூன்று பிரிவுகளிலும் எங்கள் பள்ளிதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. செகந்தராபாத்தில் இவ்வாண்டு ஜனவரியில் நடைபெற்ற பெண்களுக்கான ஜூனியர் தேசிய ரக்பி போட்டியில் கலந்துகொண்டு முதன் முறையாக தமிழ்நாடு ரக்பி அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதே ஆண்டு பிப்ரவரியில் ஐதராபாத்தில் நடைபெற்ற சூப்பர் சீனியர்களுக்கான S.G.F.I. (School Games Fedaration of India) தேசிய ரக்பி போட்டியில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் வென்று ஆளுக்கு தலா ஒரு லட்சம் பரிசையும் வென்றது.

இந்த அணியில் இடம்பெற்ற பன்னிரண்டு மாணவிகளில் ஒன்பது பேர் எங்கள் பள்ளியின் சூப்பர் சீனியர் பிரிவு மாணவிகள். மேலும் அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவிருக்கும் ரக்பி உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் சார்பாக விளையாட தென்னிந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு மாணவி எங்கள் பள்ளியின் சூப்பர் சீனியர் பிரிவில் விளையாடி வரும் வி.அனிதா தான்‘‘ என்ற மாலவனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘பெற்றோர்களின் பொருளாதார தேவைகளுக்காக பள்ளி முடிந்து வேலைக்கு செல்லும் நிலையில் இருக்கும் எங்கள் மாணவர்கள் படிப்பில் திறன் மிக்கவர்களாகவும், அதிக மதிப்பெண் எடுப்பவர்களாகவும் இருக்கிறார்களோ இல்லையோ  ஆனால், அவர்களின் உடல் வலிமையும், திடமான மன வலிமையும் அளவிட முடியாதது. அதுதான் விளையாட்டை நோக்கி உந்தித்தள்ள உதவியது.

அதன் காரணத்தால் இப்போது 100 முதல் 120 மாணவர்கள் வரை அனுதினமும் வெவ்வேறு விளையாட்டு பிரிவின் கீழ் பயிற்சி எடுக்கின்றனர். நாங்கள் எதை எதிர்பார்த்து இம்முடிவை எடுத்தோமோ அதற்கான பலனும் தற்போது கிடைத்துள்ளது.’’ என்று பெருமிதத்தோடு தெரிவித்தார்.

- வெங்கட்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்