அலைகழிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்! தொடரும் பிரச்னைகள்!



சர்ச்சை

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இன்றைக்கு மூடும் நிலையில் உள்ளன. இதற்குக் காரணம் ஆங்கில வழிக் கல்வி மீது பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள ஈர்ப்பு, ஆரம்பக் கல்வி முதலே கணினிப் பயிற்சி தேவை என்ற எண்ணமும்தான் என்று சொல்லலாம். மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய கல்வி வேண்டுமென தனியார் பள்ளிகளை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

இப்போதைய அரசுப் பள்ளிகள் நிலையே வேறாக மாறிவருகிறது. தற்போது, அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளும், கணினிப் பாடங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், கணினி ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படவில்லை, என தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார் பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நலசங்க மாநில துணைச் செயலாளர் சை.புருஷோத்தமன்.

‘‘2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அப்போது ஆட்சி செய்த திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர்கல்வி கொண்டுவரப்படும் என்று அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்விமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.

முனைவர் எஸ்.முத்துக்குமரன் தலைமையிலான ஒருநபர் குழுவின் ஆய்வறிக்கையும், இதுதொடர்பாக ஆராய்வதற்கு கர்நாடகா, குஜராத், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வுசெய்து அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் சமச்சீர் பள்ளிக்கல்விமுறைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டது.

இதில் முக்கிய அம்சமாக கணினிஅறிவியல் பாடம் 6வது தனி பாடமாக அறிமுகப்படுத்தப்பட இருந்தது. இதன் மூலமாக கணினி பாடத்தை நடத்த அதிக அளவில் கணினி ஆசிரியர்கள் தேவைப்படுவர் என்பதால் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் அதிக அளவில் கணினி பட்டதாரிகள் சேர்ந்து ஆசிரியர் பட்டம் பெற்றனர். ஆனால், 2011 சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக அரசு சமச்சீர் பாடங்கள் தரமானதாக இல்லை என்றும் மறுஆய்வுக்குப்பின் அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தது.

இதனால் கணினி பாடம் அறிமுகப்படுத்தப்படவில்லை. எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தற்போதுவரை ஒரு புதிய பணியிடத்தில்கூட ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படவில்லை. தற்போது வந்துள்ள புதிய பாடத்தில் கணினிஅறிவியல் முக்கிய பாடமாக கொண்டுவர உள்ளதாகவும் அவற்றை நடத்த தேவையான கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறிவந்தனர்’’ என்கிறார்.

நிதர்சனமான உண்மைகளை விவரித்த அவர், ‘‘கணினி அறிவியல் தனிப் பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் கூறியுள்ளார்.

ஆனால், அனைத்தும் வெறும் வாய்வாக்குறுதிகள் மட்டுமே. புதியபாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் வெறும் நான்கு பக்கங்களே கணினி பற்றி தகவல் கொடுத்துவிட்டு கணினி அறிவியல் பாடம் தனி அலகாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இப்பாடத்தை அறிவியல் ஆசிரியர்களே நடத்துவார்கள் என்றும் அரசு கூறிவருகிறது.

இது எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாருங்கிற மாதிரி நாங்களும் கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்துவிட்டோம் என்று கூறுகின்றனர். ஆனால், அண்டைமாநிலங்களில் கணினி அறிவியல் தனிப் பாடமாகவும் அதற்கு தகுதியான கணினி ஆசிரியர்களை நியமித்து திறன்பட கற்பித்துவருகின்றன. இந்தியாவிலேயே பள்ளிக்கல்வி முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும் அனைத்து வகுப்புகளும் கணினிவழிக் கற்றல் என்றும் அரசு கூறிவருகின்றது.

கணினிவழி கற்றல் என்றால் அனைத்து பள்ளிகளிலும் தரமான கணினி வகுப்பறை மற்றும் கணினி பயிற்சிபெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும். புதிய பாடத்திட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் கணினிபாடம் 1.கணினி அறிவியல். 2.கணினி பயன்பாடு 3.கணினி தொழில்நுட்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. 6,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1880 பள்ளிகளில் மட்டுமே கணினிஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக பணியில் அமர்த்தபட்டுள்ளனர்.

மேலும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் இப்பாடங்களை அறிமுகம் செய்து 4000க்கு மேற்பட்ட புதிய பணியிடங்களை தோற்றுவித்து, இப்பாடங்களை திறன்பட கற்பிக்க தகுதியுடைய பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்தத்தக்க நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டுகிறோம்.

7, 8 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வெளிவர உள்ளன. இந்த வகுப்புகளுக்காவது கணினி பாடத்தை தனிப் பாடமாக கொண்டுவர வேண்டும். அறிவியலில் சேர்த்துள்ளது மாணவர்களுக்கு எந்த வகையிலும் கணினிகல்வி சென்றடையாது’’ என்று ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார் புருஷோத்தமன்.  

இறுதியாக அவர் சில உபாயங்களைக் கூறும்போது, ‘‘கணினி ஆய்வகங்களை மேம்படுத்தி தனியார் பயிற்றுநர்களை தவிர்த்து 53,000 மேற்பட்ட பி.எட் கணினி பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களைப் பணியில் அமர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் கல்வித்துறை திறன்பட செயல்படுகின்றது என்றால், 2014-15  கல்வியாண்டில் 56.55 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை 2018-19 கல்வியாண்டில் 46.60 லட்சமாக எவ்வாறு குறைந்தது? அறிவியலில் சேர்க்கவில்லை என்றாலும் வரும் வருடங்களில் தனிப் பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தனிப் பாடமாக கணினி அறிவியல் கொண்டுவந்து தேவையான கணினி ஆய்வகங்கள் மற்றும் கணினி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தாதவரை இச்சரிவு நீடிக்கும்’’ என்று ஆணித்தரமாக சொல்லி முடித்தார் புருஷோத்தமன்.

- தி.ஜெனிபா