நம்பிக்கை துளிர்விடும்!



வாசகர் கடிதம்

சைக்கிளை டூவீலராக மாற்றிய அரசுப் பள்ளி மாணவர், ரோபோட்டிக்கில் அசத்தும் மாணவன், மாவட்ட சுகாதார தூதுவரான விருதுநகர் மாணவி என சாதனை மாணவர்களின் செயல்பாடுகள் உச்சி முகர்ந்து மெச்சுவதாக உள்ளன. நடைமுறையில் 4ஜி டெக்னாலஜி காலத்தில் நம் மாணவர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான தமிழ் சமூகத்தை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.
  -கே.செழியன், வண்டலூர்.
 
வகுப்பறையில் கற்கும் ஒவ்வொரு பாடமும் மாணவர்கள் பெரியவர்களாகும்போது அவர்களின் வாழ்க்கையை செம்மையாக்க பயன்பட வேண்டும் என்பதை ‘மாணவர்களைப் பண்பட்ட மனிதர்கள் ஆக்குவோம்!’ என்ற கட்டுரை மூலம் உணர்த்தியது அற்புதம். சமூக சிந்தனையோடு இதுபோன்ற கட்டுரைகளை வழங்கிவரும் கல்வி-வேலை வழிகாட்டி இதழின் பணி சிறக்க வாழ்த்துகள்.
  -எம்.கண்ணன், கும்பகோணம்.
 
சுயதொழில் செய்ய வேண்டும், தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் பிசினஸ் கைடு போல வழிகாட்டுகிறது சுயதொழில் கட்டுரை. ‘வாழைமட்டை நாரில் மொபைல் பவுச் தயாரிக்கலாம்..!’ என்ற கட்டுரை திட்ட அறிக்கை முதல் லாபம் வரை புள்ளி விவரங்களோடு கொடுக்கப்பட்டது அருமை. வேலை தேடும் இளைஞர்கள் மனதில் நம்பிக்கையைத் துளிர்விடச் செய்யும் கல்வி-வேலை வழிகாட்டியின் சேவை பாராட்டுகளுக்குரியது.
  -இரா.ஷண்முகம், செங்கல்பட்டு.
 
ஓய்வில்லாமல் ஓடியே ஆகவேண்டும் என்ற இயந்திர வாழ்க்கையில் சிக்கி சுழலும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக ‘குழந்தை பருவத்து இயல்பை இழக்கும் பிள்ளைகள்’ எனும் கட்டுரை அமைந்திருந்தது. குழந்தைகளின் மழலை பருவத்தை அனுபவிக்க விடாமல் இயந்திரகதியான வாழ்க்கைக்கு தயார்படுத்தும் இன்னொரு மனித இயந்திரமாகவே கருதும் மனநிலையை சமூக ஆர்வலர், குழந்தை ஆர்வலர் என பல்வேறு கோணங்களில் கருத்துகளை உரக்க சொல்லியது சிறப்பு.
-ஆர்.சுப்புராஜ், மேலூர்.