ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகுங்க!



போட்டித் தேர்வு டிப்ஸ்

ஆசிரியர் பட்டதாரிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்த தகுதித் தேர்வு இதோ தாள் ஒன்று அக்டோபர் 6-ம் தேதியும், தாள் இரண்டு 7-ம் தேதியும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராகவோ அல்லது பட்டதாரி ஆசிரியராகவோ பணிபுரிய தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தாள் ஒன்று யார் எழுதலாம்?

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பும் இடைநிலை ஆசிரியர்கள், தாள் ஒன்றினை எழுதலாம்.கல்வித் தகுதி: +2 படிப்பிற்குப் பிறகு இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்கள் இத்தேர்வினை எழுதத் தகுதி படைத்தவர்கள்.வயது வரம்பு: இத்தேர்வுக்கென உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

அதாவது, 57 வயது வரை இத்தேர்வினை எழுதலாம். அதேபோலக் குறைந்தபட்ச வயது வரம்பும் இல்லை. (+2 படிப்பு, பிறகு இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப்படிப்பு முடிக்க வேண்டும், இதற்கே பத்தொன்பது வயது நிரம்பிவிடும். எனவே, பத்தொன்பது வயதைக் குறைந்தபட்ச வயதாக வைத்துக் கொள்ளலாம்)

தேர்வு எப்படி இருக்கும்?

தேர்வு நூற்றி ஐம்பது கொள்குறி வினாக்கள் அடங்கியதாக இருக்கும்.

கீழ்க்கண்ட ஐந்து பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

தமிழ்        - 30 வினாக்கள்
ஆங்கிலம்    - 30 வினாக்கள்
குழந்தை மேம்பாடும் கற்பித்தல்
முறைகளும்     - 30 வினாக்கள்
சூழ்நிலையியல்     - 30 வினாக்கள்
கணிதம்     - 30 வினாக்கள்
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் நூற்றைம்பது மதிப்பெண்கள். இத்தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்), சீர்மரபினர், பட்டியல் வகுப்பினர் ஆகியோர் 82 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. (இது தற்போதைய நிலை)தாள் இரண்டு யார் எழுதலாம்?

இத்தேர்வில் தாள் இரண்டை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்பும் பட்டதாரி ஆசிரியர்கள் எழுதலாம்.

கல்வித் தகுதி: பள்ளிப் பாடங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பயின்று இருக்க வேண்டும். அதாவது, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டமும், பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். மேற்சொன்ன படிப்புகளுக்கு இணையான பட்டப்படிப்பு படித்தவர்களும் எழுதலாம். (உதாரணமாக திருச்சி பாரதிதாசன் பல்
கலைக்கழகம் வழங்கும் பி.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் படிப்பு, பி.எஸ்சி., இயற்பியலுக்கு சமமானது என்று கருதப்படுகிறது)
இணையான படிப்பு குறித்த அரசாணைகளை டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத்தில் பார்க்கலாம்.

வயது வரம்பு: இரண்டாம் தாள் எழுதுபவர்களுக்கும் உச்ச வயது வரம்பு அல்லது குறைந்தபட்ச வயது வரம்பு இல்லை.
தேர்வு எப்படி இருக்கும்?

இரண்டாம் தாளைப் பொறுத்தவரையில் கலைப் பிரிவு ஆசிரியர்கள், அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் என்று இரண்டு பிரிவாக நடைபெறும். இரண்டு பிரிவினருக்கும் தமிழ், ஆங்கிலம், குழந்தைகள் மேம்பாடு மற்றும் வளர்ப்பு முறைகள் (சைக்காலஜி) ஆகிய மூன்று பாடங்களும் பொதுவானவை. கலைப் பிரிவு ஆசிரியர்கள் சமூக அறிவியல் பாடத்தையும், அறிவியல் பிரிவு ஆசிரியர்கள் அறிவியல் மற்றும் கணிதம் இணைந்த பாடத்தை ஆப்ஷனாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

விளக்கமாகப் பாடங்களைப் பற்றி அறிய பார்க்கவும் பெட்டிச் செய்தியை.  
தாள் -1    தாள் - 2 கலைப் பிரிவு    தாள் - 2
அறிவியல் பிரிவு                
தமிழ்    தமிழ்    தமிழ்                 
ஆங்கிலம்    ஆங்கிலம்    ஆங்கிலம்     
குழந்தை மேம்பாடும்  கற்பித்தல் முறைகளும்குழந்தை மேம்பாடும்  கற்பித்தல் முறைகளும்    குழந்தை மேம்பாடும்  கற்பித்தல் முறைகளும்       
கணிதம்    சமூக அறிவியல்    கணிதம் + அறிவியல்    
சூழ்நிலை யியல்        
    
தமிழ்    - 30 வினாக்கள்
ஆங்கிலம்    - 30 வினாக்கள்
குழந்தை மேம்பாடும் கற்பித்தல்
முறைகளும்     - 30 வினாக்கள்
சமூக அறிவியல் (அல்லது ) கணிதம் + அறிவியல்    - 60 வினாக்கள்
 - என்று 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்.
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் நூற்றைம்பது மதிப்பெண்கள்.

தேர்ச்சி முறை: மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள், பட்டியல் வகுப்பினர், சீடர்கள் ஆகியோர் 82 மதிப்பெண்கள் எடுத்தால் போதுமானது.
எப்படி படிக்க வேண்டும்?

இரண்டு தாள்களுக்கும் தமிழ்ப் பாடத்தைப் பொறுத்தவரை ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை முழுமையாகப் படித்துக்கொள்வது நலம். செய்யுள் பகுதிகள், ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்றவற்றில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆங்கிலப் பாடத்திற்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இலக்கணத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். புத்தகப் பயிற்சியில் இருந்தே பெரும்பாலான வினாக்கள் கேட்கப்படுகின்றன.

குழந்தைகள் மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் என்ற பாடத்திற்கு புத்தகக் கடைகளில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களும், பி.எட்., பாட நூல்களும் உதவியாக இருக்கும்.சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாடங்களுக்கு 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

கணிதப் பாடத்திற்குத் தயாராகும்போதும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களில் முழுமையாகத் தயாராக வேண்டும். இது மட்டுமல்லாமல் சூழ்நிலையியல் பாடத்திற்கு அரசு பாடநூல் வெளியிட்ட (பழைய ) புத்தகங்கள் பயன்படும். பி.எட். பாடப்பிரிவில் உள்ள சூழ்நிலையியல் பாடப்புத்தகம் ஓரளவிற்கு உதவும். 6 முதல் 10-ம் வகுப்பு வரை பாடங்களின் தொடர்ச்சி பன்னிரண்டாம் வகுப்பு வரை இருந்தால் அவற்றையும் படித்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக 6, 9, 11- ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் புதிய பாடங்களில் இருந்து வினா வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

கவனம் தேவை!ஆசிரியர் பணிக்கான வாய்ப்பு நிலவரம்!

தகுதித் தேர்வுக்குப் பிறகு ஆசிரியர்களைப் பணிக்குத் தேர்ந்தெடுக்க வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுகிறது. +2, டிகிரி மற்றும் (முதல் தாள் எழுதுபவருக்கு டி.டி.எட். இரண்டாம் தாள் எழுதுபவருக்கு பி.எட்.) ஆகிய படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்படுகிறது. இத்துடன் ‘டெட் ’ தேர்வில் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்ணையும் சேர்த்தே கணக்கிடுவார்கள். எனவே, நீங்கள் டெட் தேர்வில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான மதிப்பெண்கள் எடுக்கிறீர்களோ அது உங்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்பை உறுதி செய்யும்.

நீங்கள் தேர்ச்சி பெறுவது தகுதித் தேர்வில் மட்டுமே! தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே பணி வாய்ப்பை உறுதி செய்துவிடாது! ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவதால் தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கும் கூட இந்தத் தகுதித் தேர்வு அவசியம்.

குறிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினா-விடைகளைத் தேர்வு வரை தொடர்ந்து வெளியிடவுள்ளது குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி.






வாழ்த்துகள்!