தேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்!



அட்மிஷன்

என்.எல்.எஸ்.ஐ.யு. என அழைக்கப்படும் இந்தியாவின் புகழ்பெற்ற சட்டக்கல்வி நிறுவனமான National Law School of India University - NLSIU 1987ல் தொடங்கப்பட்டது. பெங்களூருவில் செயல்படும் இந்நிறுவனத்தின் படிப்புகள் மிகுந்த தரமுடையவை. பொதுவாக இதன் படிப்புகள் பெரும்பாலும் நேரடிப்படிப்புகள் என்றாலும் சில முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மட்டும் இது அஞ்சல் வழியில் தருகிறது.

இதன் எல்.எல்.பி., படிப்பானது நேரடிப் படிப்பாக மட்டுமே தரப்படுகிறது. மனித உரிமைகள், நுகர்வோர் உரிமைகள், வாணிபச் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் நெறிமுறையியல் போன்ற பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் தொலைநிலைக் கல்வி முறையில் தரப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பொதுக்கொள்கை குறித்த படிப்பின் அவசியத்தைக் கருத்தில்கொண்டு பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பும் (Master Programme in Public Policy - MPP)  வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: இரண்டாண்டு காலப் பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பு (Master Programme in Public Policy - MPP) (50 இடங்கள்), சேர்க்கைக்கு ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://mpp.nls.ac.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பக்கட்டணம் ரூ.1000ஐ செலுத்தி விண்ணப்பிக்கலாம். அல்லது இணையதளத்திலிருக்கும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து நிரப்பி, ரூ.1000-க்கு ‘Registrar, National Law School of India University‘ எனும் பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையினை இணைத்து ‘Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore - 560072‘ என்ற முக
வரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.4.2018.

திறனாய்வுத் தேர்வு: பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் 29.4.2018 அன்று ‘கொள்கைத் திறனாய்வுத் தேர்வு‘ (Public Policy Test) நடைபெறும். தேர்வுக்கான அனுமதி அட்டை 25.4.2018 அன்று இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு தேர்வானவர்களுக்கு 25.5.2018 மற்றும் 26.5.2018 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட 50 இடங்களில் எஸ்.சி.-15%, எஸ்.டி.- 7.5%, மாற்றுத்திறனாளிகள் -3%, மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு என்ற அடிப்படையில் தகுதியுடைய மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் 29.5.2018 அன்று வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை: தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 15.6.2018-ம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணத்தினைச் செலுத்தி, சேர்க்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். (பொதுப்பிரிவினர் ஆண்டுக்கு ரூ.2,18,700/, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.2,16,200/) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 1.7.2018 முதல் வகுப்புகள் தொடங்கும்.   மேலும் விரிவான தகவல்களை அறிய http://mpp.nls.ac.in என்ற இணையதளத்தினைப் பார்க்கவும்.

- முத்து