ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பில் மாதம் ரூ.1,86,000 சம்பாதிக்கலாம்!



சுயதொழில்

கட்டுமான பொருட்களில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிப்பது செங்கல். இது பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது. களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு செயற்கைக் கல் உருவாக்கப்படும். கட்டடங்கள், பாலங்கள், நடைபாதைகள் எனப் பலவற்றையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது. ஆனால், இன்றைய சூழலில் எல்லா கட்டுமான பொருட்களின் விலையுமே விண்ணை முட்டுவதாக உள்ளன. அவற்றில் மணலும் செங்கல்லும் பிரதானமாக உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.

இந்நிலையை மாற்றிட கட்டுமான துறையில் செங்கல்லுக்கு மாற்றாக ஹாலோ பிளாக் கற்கள் ஒருகட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. ஹாலோ பிளாக் கற்களுக்கு அடுத்தகட்டமாக வந்ததுதான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காமல் இருப்பதாலும், கட்டுமானத்துறையில் தற்போது ஃப்ளைஆஷ் பிரிக்ஸ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கட்டுமான துறையில் செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால், செங்கல்லுக்கு மாற்றான ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தேவையும் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆகவே, இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். இந்தக் கற்கள் ‘சிமென்ட் செங்கல்’, ‘ஃப்ளை ஆஷ் செங்கல்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்தக் கல் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான். மேலும் நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு மற்றும் ஜிப்சம் கொண்டு தயாரிக்கப்படுவதால் மிகவும் வலிமையானதாகவும் செங்கல்லைவிட நீடித்து உழைப்பதாகவும் சீக்கிரத்தில் உடையாததாகவும் இருப்பதால் கட்டட வேலைகளில் முழு நம்பிக்கையோடு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு அம்சங்கள்

*தற்போது மண்ணிலிருந்து செங்கல் தயாரிக்க அரசு பல்வேறு கட்டுப்பாடு களையும், தடைகளையும் விதித்துள்ளதால் இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பது எளிதானது.
*கட்டுமானத்திற்கு எளிதானது.
*வேலையாட்கள் குறைவு, இதில் வேஸ்டேஜ் குறைவு.
*நல்ல லாபம் தரக்கூடிய தொழில்.
*அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

திட்ட மதிப்பீடு: ரூ.25 லட்சம் (ரூ.5 லட்சம் நடைமுறை மூலதனம்)
  அரசு மானியம்: புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் 25 சதவிகிதமும்(NEEDS Scheme), பாரதப் பிரதமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (PMEGP Scheme) 25-35 சதவிகிதமும் கிடைக்கும். இது தொழில் தொடங்க மிகவும் உதவியாக இருக்கும்.

தயாரிப்பு முறை

ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் தயாரிப்பு முறை

மிகவும் எளிமையானது. நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புக்கல் 10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களைச் சரியான விகிதத்தில் சேர்க்கவேண்டும். மூலப்பொருட்களின் தரத்தினைப் பொறுத்து அவற்றின் சேர்க்கை விகிதம் மாறுபடும். 8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்தக் கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கற்கள் கிடைத்துவிடும். இந்தச் செங்கற்களை 48 மணிநேரம் வெயிலில் காயவைக்க வேண்டும். அதன்பிறகு செங்கற்கள் மீது தண்ணீர் ஊற்றவேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள்
கூடுதல் அடர்த்தியாகும். அதன்பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.

முதலீடு (ரூ.லட்சத்தில்)
நிலம்/கட்டடம்    :     வாடகை
இயந்திரங்கள்    :     ரூ.19 லட்சம்
உரிமையாளர்
பங்களிப்பு (5%)    :   ரூ.1.25 லட்சம்
மானியம் (25%)    :     ரூ.6.25 லட்சம்
வங்கிக் கடன்    :     ரூ.17.5 லட்சம்
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு
திட்டத்தின் கீழ் மானியங்களும் வங்கிக் கடன்களும் கிடைக்கும்.
உற்பத்தித்திறன்
வருடத்திற்கு 24 லட்சம் செங்கற்கள் (ஓராண்டுக்கு)
மூலப்பொருட்கள் செலவு: ரூ.5 லட்சம்

மூலப்பொருட்களுக்கான செலவு (ரூ.)

பொருள்    அலகு
(மெட்ரிக்
டன்)    விலை    மொத்தம்
நிலக்கரிச் சாம்பல்    400    550    2,20,000
ஜிப்சம்    50    690    34,500
சுண்ணாம்பு    80    2850    2,28,000
மணல்    35     500     17,500
மொத்தம்    5,00,000

 
இந்தியாவின் அனல்மின் நிலையங்களிலிருந்து ஆண்டுக்கு 90 மில்லியன் டன் சாம்பல் கிடைக்கிறது. பொதுவாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், மூலப்பொருளான நிலக்கரிச் சாம்பலுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம்.
தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து நிலக்கரிச் சாம்பல் எளிதாகக் கிடைக்கிறது.

தேவையான பணியாளர்கள் (ரூ.)
மேற்பார்வையாளர்
1 X 15,000    15,000
பணியாளர்கள் 22 X 12,500    2,75,000
இரவுக் காவலர் 1 x 10,000    10,000
விற்பனையாளர் 2 x 15,000    30,000
மொத்தம்    3,30,000

 நிர்வாகச் செலவுகள் (ரூ.)
வாடகை    30.000
மின்சாரம்    50,000
பொருட்கள் ஏற்ற
& இறக்க கூலி    20.000
அலுவலக நிர்வாகம்    10.000
இயந்திரப் பராமரிப்பு    20,000
மேலாண்மைச் செலவு    10,000
மொத்தம்    1,40,000

நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)
மூலப்பொருள்    5,00,000
சம்பளம்    3,30,000
நிர்வாகச் செலவுகள்    1,40,000
மொத்த செலவுகள்    9,70,000

விற்பனை வருவாய் (ரூ)

*ஃப்ளைஆஷ் செங்கல் ஒன்றின்
தோராய விலை -  ரூ.6
*24 லட்சம் செங்கற்கள் தயாரிப்பு
(ஓராண்டுக்கு)
*மாதத்திற்கு 2 லட்சம் செங்கல் உற்பத்தி என வைத்துக்கொள்வோம்.
2,00,000 x ரூ.6    12,00,000
கழிவு மூலமான வரவு    5,000
மொத்த வரவு     12,05,000
        
கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)

மூலதனக் கடன் திருப்பம் (60 மாதங்கள்)    17,50,000
மூலதன கடன் வட்டி (12.5%)    
10,93,750
நடைமுறை மூலதனக்
கடனுக்கான வட்டி
(குறுகிய கால)    

62,500
மொத்தம்:29,06,250
 
லாப விவரம் (ரூ.)
மொத்த வரவு
(1 மாதத்திற்கு):    
12,05,000
மொத்த செலவு
(1 மாதத்திற்கு)    
9,70,000
கடன் திருப்பம்
மற்றும் வட்டி செலவு
(1 மாதத்திற்கு)    
48,450
மாத நிகர லாபம்: 1,86,550

தொழில் தொடங்க சாதக சூழல்

 இந்தத் தொழிலுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நிலக்கரிச் சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்துவந்தது. ஆனால், இந்த நிலை தற்போது மாறி அனல்மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரிச் சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் உரிமையாளர் களுக்கு கண்டிப்பாகத் தரவேண்டும் என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. எனவே, இனி மூலப்பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்தத் தொழிலுக்குச் சாதகமாக இருக்கிறது.

தொழில் தொடங்க பாதகமான சூழல்

இயந்திரத்திலிருந்து செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப்படுத்த வேண்டும். இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்தத் தொழிலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால், பலத்த மழை எனில் கல்லை காயவைப்பது சிரமமாகி கொஞ்சம் தொய்வு ஏற்படும். இதைத் தவிர பெரிய சிக்கல் ஏதும் இல்லாததாலும் அரசின் மானியம் கிடைப்பதாலும் பிரகாசமான தொழில் என்பதில் சந்தேகம் இல்லை!!

சந்தை வாய்ப்பு

வழக்கமாக பயன்படுத்தப்பட்ட சாதாரண செங்கல்லுக்கு பதில் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் எனும் சிமென்ட் செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். எனவே, இதற்கான சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள்.
(திட்ட அறிக்கை: உதவி இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி, சென்னை - 600032)

- தோ.திருத்துவராஜ்