பாராட்டுகள் சுயமரியாதையை ஏற்படுத்தும்!



உளவியல் தொடர் 37

உடல்... மனம்... ஈகோ!


பிறரைப் போல் இருக்க முயல்வதன் மூலமாக, நம்மில் முக்கால் பாகத்தைக் குறைத்துக்கொள்கிறோம் - ஷேயன் ஹேர்
- ஈகோ மொழி

ஈகோவின் வெளிப்பாட்டிற்கு உள்ளீடான சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை (Value addition) ஏற்படுத்தும் வழிமுறைகளில் அடுத்த முறை… சாதிப்பது. சாதிப்பதுவெற்றி பெறும் ஒவ்வொரு முறையும் ஒரு பரவசம் உள்ளத்திற்குள் ஊடுருவுவதை வெற்றி பெறும் தருணத்தில் உணர்ந்திருக்கலாம்.

ஒருவர் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணிக்கொள்ள ‘வெற்றி‘தான் பெரிய அளவில் உதவி செய்கிறது. வெற்றியை அடைய அடைய சுயமதிப்பு உயர்ந்துகொண்டேயிருப்பதையும் உணரலாம். வெற்றி எப்போதும் சாதனையின் பரிசாகக் கிடைக்கக்கூடியது.  சாதனைகளை சாதித்தவண்ணம் இருப்பது சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும்.

இலக்குகளும், குறிக்கோள்களும் வாழ்க்கைக்கு எப்போதும் அவசியம்.  இலக்குகள் இல்லாமல், சாதனைகளை அடையவே முடியாது. மைல்கற்கள் இல்லாமல் பயணங்களின் தூரத்தை அளவிட முடியாததைப் போலத்தான் இலக்குகள் இல்லாமல் வெற்றியையும் அளவிட முடியாது. அதேபோல் செய்வதற்கு எந்தக் காரியமும் இல்லாத போது ஏற்படும் மனஉளைச்சல், செய்து முடிக்கப் பல காரியம் இருக்கும்போது ஏற்படும் உளைச்சலைவிட அதிகமானதாகவே இருக்கும்.

இலக்குகளும், குறிக்கோள்களும் நாமாக வகுத்துக்கொள்பவைதான் என்றாலும் இலக்குகளே இல்லையென்றால், தேங்கிய நீராக மாறிவிடுவோம். தேங்கிய நீர் அழுக்குகள் படிந்து பயன்படுத்த இயலாததாகிவிடும்.  ஓடிக்கொண்டேயிருக்கும்போதுதான் நீர் தூய்மை அடைகிறது. அதேபோல், இலக்குகளை நோக்கிய ஓட்டத்தில்தான் சுயமதிப்புகள் புதுப்பித்துக்கொள்கின்றன. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குச் சாதனையாளர்களாக இருப்பது நல்லது. சாதனைகளின் வரிசை உளரீதியாக, உடல்ரீதியாக என்று எப்படிப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், சாதனைகளாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும், நகர்த்த வேண்டும். நகரும் பொருட்கள்தான் வேகம் கொள்கின்றன, புத்துணர்ச்சி கொள்கின்றன, சந்தோஷம் கொள்கின்றன, இலக்குகளை அடைந்து சாதிக்கின்றன, மொத்தமாகச் சுயமதிப்பு கொள்கின்றன.உதவுவது இந்த உலகம் சுயநலக்காரர்களால் ஆனது.

நம்மால் அடுத்தவருக்கு எந்தவிதமான லாபமும் இல்லை என்பதை அடுத்தவர் உணரும் தருணத்தில், சிறிதும் தயங்காமல், கூச்சப்படாமல் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். யாரும் தேவையற்ற எதையும் எப்போதும் விரும்பி வைத்துக்கொள்வதே இல்லை. நிழலும், பழமும் தராத மரங்களை எவ்வித தயக்கமும் இல்லாமல் வெட்டி விறகாக்கிவிடுவார்கள்.

அதேபோலத்தான் மற்றவர் பார்வையில் ‘இவரால் பயனோ, பலனோ இல்லை‘ என்ற எண்ணம் ஏற்படும்போது, அவரது சுயமதிப்பு பூஜ்ஜியத்திற்கு வந்துவிடுகிறது. அதனால் அவருக்கு வரவேண்டிய மதிப்பும், மரியாதையும் வராமல் போய்விடும்.

ஈகோவின் வெளிப்பாட்டிற்கு உள்ளீடான சுயமதிப்பிற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்த, சகமனிதர்களுக்குப் பயன்படுபவராக, மதிப்பு மிக்கவராக இருக்க வேண்டியது அவசியம். அது லௌகீகம் சார்ந்து பண விஷயமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அடுத்தவர் வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வகையில் உதவிகரமாக இருந்தால் போதும். அந்த உதவியும் அனுசரணையும் அங்கீகரிக்கப்பட்டு ‘இவர் இருப்பது நமக்கு நல்லது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தினால் போதும், சுயமதிப்பும், மரியாதையும் தன்னால் உயரும்.

சகமனிதர்களுக்குப் பயனுள்ளவராக இருக்க, சிறுசிறு உதவிகளைச் செய்வது நல்லது. உதவி எந்தவித கணக்குகளும் இல்லாமல், இயல்பாக, பலனை எதிர்பார்க்காமல், குணத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். நெரிசலான சாலையைக் கடக்க வயதானவரைக் கைபிடித்து வழிகாட்டுகையில் அவர் நா தழுதழுக்க ‘ரொம்ப நன்றிபா’ என்று சொல்வது வெறும் நன்றி கலந்த வார்த்தைகள் இல்லை.

அதுதான் நிஜமான மரியாதை. அந்த மரியாதைக்காகத்தான் மனம் ஏங்கிக் கொண்டேயிருக்கிறது. அதுதான் ஈகோவின் பசியைப் பூர்த்தி செய்கிறது. அப்படியான பசியாறலைத்தான் ஒவ்வொரு வரிடமிருந்தும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்துக்கொண்டேயிருக்கிறது. அதைப் பெறும் ஒவ்வொரு முறையும், சுயமதிப்பை அடைந்தபடி இருக்கிறது.

உதவி என்பது செயல்பூர்வமானதாக, அன்பான வார்த்தைகளாக,  ஆறுதலான சொற்களாக, பணரீதியான பரிமாற்றமாக, உடல்பூர்வமானதாக என்று எந்த விதமான வடிவிலும் இருக்கலாம்.

சகமனிதர்களுக்கு உதவும் ஒவ்வொருமுறையும் நீங்கள் மதிப்பானவராக நடத்தப்படுவீர்கள். அது உங்கள் மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தி உங்களுக்குள் இருக்கும் உங்களையும், அடுத்தவருக்குள் இருக்கும் உங்களையும் உயர்வானவராக வெளிப்படுத்தும்.

பாராட்டுவது பாராட்டப்பட வேண்டும், பாராட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதருக்கும் இருந்துகொண்டே இருக்கக்கூடியது. ‘ஐ பாப்பா டிரெஸ் நல்லா இருக்கே?' என்ற பாராட்டை கேட்ட மாத்திரத்தில் மூன்று வயது குழந்தையின் முகம் பூரித்துப்போவது இதனால்தான்.

வயது வித்தியாசமின்றி ஒவ்வொருவருக்கும் பாராட்டைப் பெறும் ஆசை இருந்துகொண்டே இருப்பதோடு, வளர்ந்துகொண்டேயிருக்கிறது. வயது ஏறஏறப் பாராட்டைப்  பெறும் ஆசை உடலியல் சார்ந்த ஆசைகளுக்கு முக்கியத்துவம் தருவதாகிப் போவதுதான் விசித்திரம்.

ஒரு 60 வயதுக்காரர், ‘அருமை சார், தொடர்ந்து மூணாவது முறையா தலைவர் பதவில ஜெயிச்சுட்டீங்க‘ என்ற பாராட்டை விட, ‘அட இந்த டிரெஸ்ல நீங்க 5 வயசு குறைஞ்சவர் மாதிரி தெரியறீங்க சார்‘ என்ற பாராட்டைத்தான் அதிகம் ரசிப்பார்.

மகிழ்வார். உளமார திருப்தி அடைவார். மனம் பாராட்டிற்காக ஏங்கியவண்ணம் இருக்க முக்கியக் காரணம், ‘நான் அவனைவிட உயர்ந்தவன்' என்ற ஒப்பீடுகளால் ஏற்படும் எண்ணம்தான். அந்த எண்ணமே பாராட்டை பெற வேண்டும் என்ற ஏக்கமாக மாறுகிறது. பாராட்டைப் பெறும்போது திருப்தியடைகிறது. அந்தத் திருப்தியே சுயமதிப்பை உயர்த்திவைக்கிறது.

பாராட்டும் வார்த்தைகள் எப்போதும் நேராக இதயத்திற்குள் ஊடுருவக்கூடியவை. ஒருவரைப் பாராட்டும்போது, ஈகோவின் வழியாக நாம் நேரடியாக அவர் இதயத்திற்குள் நுழைகிறோம். எந்த அளவுக்கு உண்மையாக, உளப்பூர்வமாகப் பாராட்டுகிறோமோ அந்த அளவுக்கு அவர் ஈகோ திருப்தியுறும்.

நாம் முக்கியமானவர் என்று கருதத் தொடங்குவார். அதனால் மதிப்பும் மரியாதையும் உயரும்.பாராட்டவேண்டும் சரி…. எதைப் பாராட்டுவது? எப்படிப் பாராட்டுவது? என்று சில நேரங்களில் அடிப்படைக் கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கும். பாராட்டுவதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது.

குரு சிஷ்யன் கதை

தூங்க விடாத நாய்கள்!

குருவும் சிஷ்யனும் செல்வந்தர் ஒருவரின் அழைப்பிற்கிணங்க பக்கத்துக் கிராமத்துக்குப் போயிருந்தனர். செல்வந்தர் வீட்டில் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் சென்றனர். செல்வந்தர் வீட்டைச் சுற்றி நாய்கள் காவலுக்கு இருந்தன. இரவு முழுவதும் அவை ஓடி ஓடி குரைத்துக்கொண்டேயிருந்தன.குரு படுத்ததும் உறங்கிவிட்டார். நாய்களோ வெறித்தனமாகக் குரைத்துக்கொண்டேயிருந்தன. சிஷ்யன் நாய்களின் குரைப்பில் அவதியுற்று உறங்க முடியாமல் தவித்தபடி இருந்தான்.

திடீரென்று விழித்துப் பார்த்த குரு. சிஷ்யன் உறங்காமல் காதை பொத்திக்கொண்டு அமர்ந்திருப்பதை வியப்பாகப் பார்த்தார். சிஷ்யனும் குருவைப் பார்த்தான். “குருநாதா, எப்படி உங்களால் இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உறங்க முடிகிறது?'' என்றான். 

சூழலை உணர்ந்த குரு, “பார், இந்த நாய்களுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பாவம், இவைகளுக்கு மனிதர்கள் உறங்கும்போது குறைக்கக்கூடாது என்ற அறிவும் கிடையாது. அவை எப்படி அவைகளுக்குத் தெரிந்த குரைக்கும் வேலையைப் பார்த்தனவோ அதேபோல் நீயும் தூங்குகிற வேலையைப் பார்க்க வேண்டியதுதானே?’’ என்றார்.

“நாய்கள் இப்படி ஓயாமல் சத்தத்துடன் குரைத்தால், எப்படித் தூங்க முடியும்?’’ என்றான் சிஷ்யன் அலுப்புடன்.  உடனே குரு,“நீ,நாய்கள் குரைப்பதை எதிர்த்துப் போராடி இருக்கிறாய்.அதனால்தான் தூக்கம் வராமல் தவித்திருந்திருக்கிறாய். ஒருபோதும் அப்படிப் போராடக்கூடாது. பிரச்னை குரைப்புச் சத்தத்தில் இல்லை. உன் எதிர்ப்பு உணர்வில் இருக்கிறது.

நீ, சத்தத்துக்கு எதிராக நின்று, நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்கமுடியும் என்று நிபந்தனையோடு போராடியிருக்கிறாய். அதில் வெற்றி பெறாதபோது, வெறுப்படைந்திருக்கிறாய். நிபந்தனைகள் வெற்றி பெற்றால்தான் நிம்மதி கிடைக்கும் நிலை உருவாகியிருக்கிறது. அது ஒருபோதும் நடைமுறையில் சாத்தியமானதே இல்லை! யாராலும் இந்த உலகத்தை அவர்களுக்கு ஏற்றபடி நிபந்தனைகளால் மாற்றமுடியாது.

 சிஷ்யன் ‘‘குருவை ஆழமாகப் பார்த்தான்.’’“நாய்கள் குரைக்கின்றன. அதைத் தடுக்க முடியாது, ஏற்றுக்கொள். அவை எவ்வளவு சக்தியுடன் குரைக்கின்றன என்று பார். எதையும் இயல்பாக ஏற்கும் மனநிலையுடன் கவனி. குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம் போலத்தான் கேட்கும்!“ என்றார்.  சிஷ்யன் எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கி, நாய்கள் குரைப்பதைக் கவனிக்கத் தொடங்கினான். அவனுக்கும் உறக்கம் வருவது போல் இருந்தது.

- தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு