மாதம் ரூ.40,000 வருமானம் தரும் பாக்குமட்டை பாக்ஸ் தயாரிப்பு!



சுயதொழில்

இயந்திரகதியாகிப்போன மனித வாழ்க்கையால் உணவு உண்ணக் கூட நேரமில்லாமல் ஃபாஸ்ட் ஃபுட் காலம் ஆகிவிட்டது. நின்றுகொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டைக் கழுவுவதற்கு நேரமில்லாததால் தட்டின் மீது பிளாஸ்டிக், பாலிதீன் போன்ற பேப்பர்களை உபயோகித்துவிட்டு தூக்கி எறிகிறோம்.

அதில் உள்ள ரசாயனங்கள் சுற்றுச்சூழலைப் பாதிப்பதோடு நம் உடலுக்கும் கேடுவிளைவிப்பதாக உள்ளது. இதற்கு மாற்றாகப் பாக்குமட்டை தட்டுகளின் பயன்பாடும், தேவையும் அதிகரித்துவருகிறது. அதன் விளைவு, வீணாகக் குப்பையில் தூக்கி எறியப்பட்ட பொருள் இன்றைக்கு விலைமதிப்புக்குரிய பொருளாக மாறிவிட்டது.

கோயம்புத்தூர் பகுதியில்  கடந்த 20 ஆண்டுகளாக பாக்குமட்டை கொண்டு தட்டு, டப்பா, ஸ்பூன் போன்றவற்றை  தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடந்துவருகிறது. இத்தொழிலிலை கடந்த 2 வருடமாக  செய்துவரும் வெங்கடேஷிடம் பேசினோம்.

‘‘பாக்குமட்டை கொண்டு தட்டு, ஸ்பூன் போன்ற பொருட்கள்தான் தயாரித்து வந்தோம். உணவுப் பொருட்களை பார்சல் செய்து கொண்டு செல்லும் வகையில் தட்டு வடிவமைக்கப்படாமல் இருந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மூடியுடன் கூடிய லாக்கிங் தட்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கினோம்.

தற்போது பார்சல் செய்து கொண்டு செல்லும் வகையில் ஃபாயில்  கன்டெய்னர் போன்றே பாக்குமட்டை கன்டெய்னர் தயாரித்து வருகிறோம். இதற்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது’’ என்றவர், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் தயாரிப்புக்கான திட்ட விவரங்கள் குறித்து விளக்கினார்.

சிறப்பம்சங்கள்

*கெமிக்கல் இல்லாத பொருள்.
*சூடான மற்றும் குளிர்ந்த பொருட்களை வைப்பதற்கு ஏற்றது.
*ஆயுர்வேத குணங்கள் அடங்கியது.
*இலகுவாக மக்கும் தன்மை கொண்டதால் சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் ஏற்றது.
*அதிக சுகாதாரமானது. 100 சதவீதம் இயற்கையானது.
*மிக முக்கியமாக இந்தப் பொருட்களை தயாரிப்பதற்காக எந்த மரங்களையும் நாம் வெட்டுவதில்லை.

திட்ட அறிக்கை

*இடம் -  இயந்திரம் அமைக்க 10 x 10 அடி அறை போதுமானது.
*இயந்திரத்தின் அளவு அதிகப்பட்சமாக  (6x3) அடி.
உற்பத்திப் பொருளை சேமிக்க தனி இடம்.
*மூலப்பொருட்களை சேமிக்க தேவையான இடம்.
( அதிகப்பட்சமாக 400 சதுர அடி இடம் போதுமானது.)

இயந்திரத்தின் விலை

*தட்டு மற்றும் ஸ்பூன் தயாரிக்கும் இயந்திரம் ரூ.1,80,000 முதல் 2,00,000-ல் கிடைக்கிறது.
*பார்சல் கொண்டு செல்லும் டப்பா (மூடியுடன் கூடியது) தயாரிக்கும் இயந்திரம் ரூ.3,25,000 முதல் 3,50,000-ல் கிடைக்கிறது.
மின்சாரம்

3 ஃபேஸ் (Fhase) மின் இணைப்பு
*அதிகபட்சமாக 10 எச்பி வரை உபயோகிப்போருக்கு மானியம் கிடைக்கிறது (சிறு, குறு தொழில்முனைவர்.)
*சாதாரணமாக வியாபாரத்திற்காக தோராயமாக
மின்கட்டணம் ரூ. 8.05
*மானியம் கிடைக்கப்பெறுவதால் தோராயமாக மின்கட்டணம் ரூ. 4.50
*(L3A1) கனெக்‌ஷன் மின்வாரியத்தின் குறியீடு.

முதலீடு
இயந்திரம்                      ரூ.3,25,000
மூலப்பொருள் (1 மாதம்) ரூ.40,500
மின்சாரம் நிறுவுதல்          ரூ.15,000
மட்டை கழுவும் தொட்டி               ரூ.5,000
இதர செலவுகள்               ரூ.14,500
மொத்தம்                                ரூ.4,00,000

அரசு மானியம்
மத்திய அரசின் சிறு, குறு தொழில்முனைவோரின் முன்னேற்றத்தின் அடிப்படையில் (MSME) 25 சதவீதம் வரை மானியம் பெறலாம். மாவட்ட தொழில் மையத்தில் இதற்கான வழிமுறைகள் கிடைக்கப் பெறுகின்றன. தோராயமாக ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை (MSME இணையதள வழிகாட்டல்படி)
தயாரிப்புமுறை

பாக்குமரத் தோப்பில் கிடைக்கும் இந்த மட்டையை சேகரித்து நமது தொழிற்சாலைக்கு கொண்டு வருவதே இந்தத் தொழிலுக்கான மூலப்பொருள். மூலப்பொருட்கள் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளிலிருந்து மொத்தமாக சப்ளை செய்யப்படுகிறது. காலநிலையைப் பொறுத்து மூலப்பொருட்களின் விலை கூடவோ, குறையவோ செய்யலாம்.

பாக்கு மட்டையை நன்கு உலர்த்தி பின்பு நீரில் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் ஊறிய பிறகு ஒவ்வொரு மட்டையாக எடுத்து தூசு, மண் போகுமாறு நன்றாக கழுவி சுத்தப்படுத்தி அடுக்கி வைக்கவேண்டும்.சிறிது இடைவேளை (2 மணி நேரம்) விட்டு கழுவிய மட்டையை இயந்திரத்தில் வைத்து அழுத்தி எடுத்தால் அழகழகான பாக்கு மட்டையினால் செய்யப்பட்ட பொருட்கள் தயார். அப்படியே பேக்கிங் செய்து சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பலாம்.

தேவையான இயந்திரங்கள் பாக்கு மட்டை அடிக்கும் இயந்திரம்.

10 எச்பி மோட்டார்.
மட்டை கழுவும் தொட்டி.
மூலப்பொருட்கள்
பாக்கு மட்டை.
உற்பத்தி பொருளை அடைக்க அட்டைப்பெட்டிகள்.
தண்ணீர்.
செலவு விவரம்
மூலப்பொருள் - பாக்குமட்டை ( 1 மாதத்திற்கு) - ரூ.40,500
மின்சார செலவு  (1 மாதத்திற்கு)          -ரூ.4,000
வேலையாட்கள் 2 பேர் - 2x250  (1 மாதத்திற்கு) - ரூ.15,000
பேக்கிங் செலவு (1 மாதத்திற்கு)           -ரூ.3,000
இதர செலவுகள்                  - ரூ.2,500
மொத்தம்                - ரூ.65,000

வரவு விவரம்

ஒரு நாளைக்கு உற்பத்தி செய்யக்கூடிய பார்சல் டப்பாவின் தோராய சந்தை விலை.
500மி.லி அளவு     - ரூ.6.
1000 மி.லி. அளவு     - ரூ.8
ஒரு நாளைக்கு தோராயமாக 300 டப்பா தயாரிக்கலாம்.
500 மி.லி  300 x 6     = ரூ.1,800
1000 மி.லி. 300 x 8     = ரூ.2,400
மொத்தம்         = ரூ.4,200
வருமானம்
4,200 x 25         = ரூ.1,05,000
ஆக மொத்தம்     = ரூ.1,05,000
செலவுகள்         = ரூ.65,000
மாத லாபம்         = ரூ.40,000

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பாக்குமட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருளுக்கு இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் பெருமளவு வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏற்றுமதி தொழிலில் நல்லதொரு அந்நிய செலாவணியைப் பெற்றுத் தருகிறது. பெரும் வரவேற்புள்ள நல்லதொரு தொழில் என்பதால் நாமும் முயற்சிக்கலாமே...

- தோ.திருத்துவராஜ்