மாணவர்களின் மகத்தான கண்டுபிடிப்புகள்!



புதுமை

இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் மாநிலமாக திகழ்கிறது தமிழகம். ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் படிப்பு முடித்து வெளிவருவதாக தெரிவிக்கின்றன குறிப்புகள். இவர்களால் சமூகத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகள் எவ்வளவோ உருவாகி இருக்க வேண்டும்தான். ஆனால், அத்தி பூத்தாற்போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன.

ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என எத்தனையோ திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்கும் அரசும், மாணவர்களின் இந்த அரிய கண்டுபிடிப்புகளை ஏனோ கண்டுகொள்வதேயில்லை. அதனால்தானோ என்னவோ நம் மாணவர்களின் கண்டுபிடிப்புகளும் வணிகச் சந்தைக்கு வராமலேயே கல்லூரி வளாகத்தோடு அழிந்துபோய்விடுகின்றன.

இந்த அங்கலாய்ப்புகளைக் கடந்து வருடா வருடம் ‘குருஷேத்ரா’ எனப்படும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சிக்குச் சென்றோம். முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் இதில், இன்றைய சமூக தேவைகளுக்கேற்ற தொழில்நுட்பக் கருவிகளின் மாதிரி காட்சிகள் அனைத்தும் பவர்ஃபுல் இன்னோவேஷன் எனலாம். ஒவ்வொன்றும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியவை. தவிர, இதில் மூன்று கண்டுபிடிப்புகள் ஏற்கனவே மாநில, தேசிய, உலக அளவிலான கண்காட்சிகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பாராட்டுச் சான்றிதழும் பெற்றவை. கண்டுபிடிப்புகளிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்…

Life Saving Assistant: வீட்டில் உடல்நலக்குறைவாக இருப்பவரின் கையில் இந்த லைஃப் சேவிங் கருவியை மாட்டினால் போதும். நாடித்துடிப்பு, இதய செயல்பாடு, ரத்த அழுத்தம் போன்றவற்றை செல்போன் ஆப் மூலம் கண்காணித்து அந்த நபரின் உறவினருக்கு தகவல் சொல்லிவிடும் இந்தக் கருவி.

குறிப்பிட்ட நபர் மயக்கமடைந்தாலோ அவரின் நாடித்துடிப்பு குறைந்தாலோ அந்த நபரின் உறவினருக்குத் தகவல் சொல்வதோடு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி உதவி கோரும் தொழில்நுட்பத்தையும் செய்கிறது. இதை செயல்படுத்தி காட்டினர் வடிவமைத்த பயோ மெடிக்கல் மாணவர் குணராஜலு ரங்கநாதனும், மாணவி தெய்வானையும். இதன்மூலம் பலரின் இறப்புகள் தவிர்க்கப்படும் என நம்பிக்கையுடன் சொல்கின்றனர் இருவரும்.

Braile printer: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிக்க வேண்டும் என்றே பிரெய்லி எழுத்து முறை உருவாக்கப்பட்டது. அந்த எழுத்துக்கள் பதிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள மேடு பள்ளங்களைத் தொட்டுப் பார்த்தே படிப்பார்கள். ஆனால், கம்ப்யூட்டரில் எப்படி அவர்களால் படிக்க முடியும்? அதற்காகவே இந்தப் பிரெய்லி பிரின்டரை உருவாக்கி இருந்தனர் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் துறையைச் சேர்ந்த விக்ேனஷ்வரன், சோபன் உடன் மெக்கானிக்கல் மாணவர்கள் ராஜ் ஜெயந்தன் மற்றும் தர்மா.

இவர்கள் தொட்டு உணரும் தொழில்நுட்பத்தை அப்படியே இணையதளத்துடன் இணைத்து அதற்கான மென்பொருளையும் தயாரித்து இருந்தனர். இந்தப் பிரெய்லி பிரின்டரில் ஒருவர் கை வைக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்குமான சிறு குச்சிகள் மேலே எழுந்து குறிப்பிட்ட நபரின் கையில் படும்.

அப்போது அது எந்த எழுத்து என அவரால் புரிந்துகொள்ள முடியும். இவ்வாறு ஒவ்வொரு எழுத்தாக எழுத்து கூட்டி குறிப்பிட்ட நபர் ஒட்டுமொத்த பி.டி.எஃப் அல்லது வேர்டு ஃபைலை யாருடைய உதவியும் இல்லாமல் முழுமையாக படிக்கலாம். அவர் படிக்கும் வேகத்துக்கு ஏற்ப எழுத்துகளுக்கான குச்சி களை கைவிரலில் படும்படி வேகத்தை குறைக்கவோ, கூட்டவோ கூட செய்யலாம்.

Cardio care: மூச்சு நின்று மூர்ச்சையாகிப் போன ஒருவரின் நெஞ்சில் வேகமாக கைவைத்து அழுத்தி மீண்டும் உயிர் பிழைக்கச் செய்வதை எத்தனையோ சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால், இதை ஒரு கருவி செய்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு கண்டுபிடிப்புதான் இது. இதை பயோ மெடிக்கல் துறை மாணவிகள் அட்சயா, சுஷ்மிதா, ஏஞ்சலின், பாண்டி பிரியா ஆகியோர் இணைந்து உருவாக்கியிருந்தனர்.

சாதாரணமாக நமக்கு எத்தனை முறை அழுத்தினால் மூர்ச்சையானவர் பிழைப்பார் எனத் தெரியாது. ஆனால், இந்தக் கருவியிடம் தோராயமான வயதை அளித்தால், எத்தனை முறை அழுத்த வேண்டும் என்று அறி்ந்துகொண்டு வேலையைத் தொடங்கிவிடுகிறது. இதை ஒரு உடை வடிவில் தற்போது வடிவமைத்து வைத்திருந்தனர். ‘‘மால், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பீச் உள்ளிட்ட பொது இடங்களில் வைத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் சிகிச்சை அளிக்கலாம்’’ என்கின்றனர்.

 Traffic Monitoring System: ‘‘நம் நாடு அதிகம் இறக்குமதி செய்யும் பொருள் கச்சா எண்ணெய். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 76,79,70,000 லிட்டர் கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்திருக்கிறோம். 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி ஒவ்வோர் ஆண்டும் டிராபிக் சிக்னலில் நிற்பதன் மூலம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் மற்றும் டீசலை நாம் வீணாக்குகிறோம்.

இது ஒவ்வோர் ஆண்டும் 4 சதவீதம் வளர்ச்சி அடைந்துவருகிறது. இவ்வாறு வீணாகும் பெட்ரோல், டீசலை கட்டுப்படுத்த நாங்கள் கண்டுபிடித்துள்ள டிராபிக் மானிட்டரிங் சிஸ்டம் உதவும்’’ என்றனர் இந்தச் சிஸ்டத்தைக் கண்டறிந்த எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி ரோகினியும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் மாணவி பத்மகீதாவும்.

சாலையில் வந்து கொண்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிநவீன கேமரா படம்பிடித்து அதற்கேற்ப டிராபிக் சிக்னல்களைக் கட்டுப்படுத்தும் மென்பொருளை உருவாக்கி இருந்தார்கள்.

ஓராண்டுக்கு இந்த அதிநவீன கேமரா தரும் பதிவுகளின் மூலமும், வாகனங்களின் பெருக்கத்தை கணக்கிடுவதன் மூலமும் விழாக்காலம், வார நாட்கள், வார விடுமுறை நாள், வாகன நெருக்கடி காலங்களில் டிராபிக் சிக்னல் நேரத்தை மாற்றிக்கொள்ளலாம். இதன்மூலம் வீணாகும் பெட்ரோல், டீசல் பாதியாக குறையுமாம்.

இதனுடன், ஆற்று மணலுக்கு மாற்றான ‘எம்.சாண்ட்’ எனப்படும் செயற்கை மணல் தயாரிக்க பயன்படும் நீஸ் எனும் பாறை, நில மேற்பரப்பில் வெப்பநிலை ஆராயும் டி.ஆர்.டி.ஓ. லேண்ட் சர்பேஸ் டெம்பரேச்சர் மாடலிங், மாற்றுத்திறனாளிக்கான வீல்சேர் கம் பெட்டாக மாறும் ‘ஸ்மார்ட் வீல்சேர்’, புத்தகங்களை வகைப்படுத்தும் ‘லைப்ரரி சார்ட்டர்’ என மொத்தம் பதினோரு ‘நச்’ கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மாணவர்கள் தங்களிடம் உள்ள தொழில்நுட்ப அறிவு, சிந்தனையில் உருவான எண்ணங்கள் வழியே இந்தக் கருவிகளை உருவாக்கி இருந்தனர். இவர்களுக்கு உரிய நிதியுதவி அளித்து ஆராய்ச்சியாளர்கள் ஆக்கினால், நிச்சயம் உலகின் அதிக பேட்டன்ட்கள்(காப்புரிமை) உடைய வல்லரசாக இந்தியா மாறும்.

Humidity Condenser: இது காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி அதன்மூலம் தண்ணீர் உருவாக்கும் முறை. ‘‘மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காகத்தான் என்று பரவலாக பேசப்படும் நிலையில், இந்தக் கருவியின் மூலம் தண்ணீரை காற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியும்’’ என நம்பிக்கை தெரிவித்தனர் இதனை வடிவமைத்த உற்பத்தித் துறையைச் சேர்ந்த மாணவர்கள் பிரணவ், தேவராஜ், மணி, ஹாரீஸ் ராஜா ஆகிேயார்.

மேலும் அவர்கள், ‘‘12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே காற்றில் உள்ள நீர் திரவமாக மாறும். காலையில் குறிப்பிட்ட வெப்பநிலை இருப்பதால் தான் புல்வெளிகளில் பனித்துளிகள் நிற்கின்றன. அதை தொழில்நுட்பம் மூலம் செயற்கையாக ஒரு கலனில் உருவாக்கி குறிப்பிட்ட கருவிகள் வழியாக காற்றை செலுத்தி தண்ணீரை பிரிக்கிறோம்’’ என்கின்றனர் இவர்கள்.