பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திரைப்பட விழாவிழிப்புணர்வு

இயற்கையை நாம் அழித்துவிட்டதால், அது நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கிறது. வரலாறு காணாத வறட்சியும், வறட்சியைப் போக்க வரும் மழையைத் தேக்கிவைக்க நீர்நிலைகள் இல்லாமலும், பூமியில் இறங்க இடமின்றி தேங்கிய நீரில் கொள்ளை நோய்களைப் பரப்பும் கிருமிகளும் இன்று மனிதனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இயற்கை இன்னும் மோசமான தாக்குதலுக்கு உட்பட்டால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு, நோய் நொடி என மனிதன் அழிந்துபோக வாய்ப்புள்ளது.

வளர்ச்சி என்ற பெயரில் வறட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். தொழிற்சாலைகளின் புகை, வாகனப் போக்குவரத்துப் புகை, காடுகள் அழிப்பு, உணவுப் பொருட்களில் ரசாயனக் கலப்பு, நாம் வாழ மற்ற உயிரினங்களை அழிப்பது என நவீனத்துவத்தின் அழிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்துகொண்டிருக்கும் இயற்கைச் சீரழிவை இன்று தடுத்தால்கூட அதனை சரிசெய்ய இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் ஆகலாம். அந்த அளவுக்கு அழித்துவிட்டோம்.

இருப்பதையாவது காப்பாற்றவும், எதிர்கால உலகம் இளைஞர்களின் கைகளில் என்பதாலும், மாணவப் பருவத்திலேயே இயற்கை குறித்தும், அறிவியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகமெங்கும் அறிவியல் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் நடத்தப்படும் இத்திரைப்பட விழா குறித்து சென்னையில் உள்ள ஜெர்மன் கலாசாரத்துறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கீதா வேதராமன் விளக்கினார்.

“கல்வி மற்றும் அறிவியல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் 23 நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை அறிவியல் திரைப்பட விழா நடத்தப்பட்டுவருகிறது. 13வது நிகழ்வான இத்திரைப்பட விழா முதன்முறையாக இந்த ஆண்டு இந்தியாவிலும் நடத்தப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, புனே, மும்பை, சென்னை ஆகிய இடங்
களில் நடத்தப்படுகிறது.

சென்னையில் ஜெர்மன் கலாசாரத்துறை, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் மற்றும் என்விரோன்மென்டலிஸ்ட் ஃபவுண்டேஷன் ஆஃப் இண்டியா ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அறிவியல் கல்வியறிவை ஊக்குவிப்பதோடு சமகால விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து இத்திரைப்படங்கள் கல்வி நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன” என்று திைரப்பட விழாவின் அவசியத்தை விவரித்தார்.

“மாணவர்களுக்கு அறிவியல் ரீதியாகவும் விஞ்ஞான ரீதியிலான விஞ்ஞானங்களைப் பொழுதுபோக்காகவும் தெரிவித்தால் மாணவர்கள் மனதில் ஆழப் பதியும் என்பதற்காக இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவில் திரையிடுவதற்கு ஏற்ற 19 திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். 9 முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு 11 திரைப்படங்களும்் 12 வயது முதல் 16 வயது வரையிலானவர்களுக்கு 8 திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் திரைப்படங்கள் குறித்த விளக்கக் குறிப்பு அடங்கிய அட்டவணை  (self-explanatory sheets) ஆசிரியர்களுக்கு கொடுத்துவிடுவோம். இந்தத் திரைப்படங்கள் எதையும் நாங்கள் திரையிடுவது கிடையாது. நமக்காகக் கொடுக்கப்பட்டுள்ள 19 திரைப்படங்களின் லிஸ்ட்டை ஆசிரியர்களிடம் கொடுப்போம். அதில் எத்தனை படங்கள் வேண்டும் என அவர்கள் செலக்ட் செய்கிறார்களோ அத்தனை படங்களைக் கொடுப்போம்.
 
பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பிரின்சிபல் ஆகியோர் டி.வி.டி., பென்டிரைவ் போன்றவை மூலமாக பெற்றுச் சென்று பள்ளியில் இந்தத் திரைப்படங்களைத் திரையிட்டுக்காட்டி விளக்குவார்கள்.

இந்தப் படங்கள் டிசம்பர் 18ம் தேதி வரை மட்டுமே ஒளிபரப்பு செய்து காட்டும் வகையில் ஒரு ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும். இதில், விவசாயம், வர்த்தகம், போக்குவரத்து ஆகியவற்றில் நவீனம் என்ற பெயரில் மாற்றங்கள் செய்து இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று திரைப்படங்கள் வழங்கப்படும் வழிமுறையைப் பற்றி எடுத்துரைத்தார் கீதா.

மேலும் அவர், “நீண்ட காலமாக நாம் செயற்கைமுறை வாழ்வியலை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தை அன்ட்ரோபாசீன் (Anthropocene) என்கிறார்கள். அதாவது, இயற்கையை அழித்துவிட்டு நகரமயமாக்கல், இயல்பு வாழ்க்கையில் மாற்றம், இயந்திரத்தின் துணைகொண்டு வாழும் வாழ்க்கைமுறை.

தற்போது நாம் வாழும் செயற்கையோடு இயைந்த வாழ்க்கைக்கும் இதற்கு முன்பிருந்த இயற்கைமுறையோடு இயைந்த வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளை இத்திரைப்படங்கள் எடுத்துக் கூறுகின்றன.

இதுவரையில் இயற்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழித்து விட்டோம், இருக்கும் கொஞ்சநஞ்சம் இயற்கைவளத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படங்கள் மாணவர்கள் மத்தியில் கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இந்தத் திரைப்படங்களை இன்டர்நேஷனல் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளார்கள். கல்வி மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட படங்கள் என்பதால் மாணவர்களுக்கு மிகவும் அவசியமானவை. இந்தத் திரைப்படங்களைப் போட்டுப் பார்த்தால் மட்டும் போதாது என ஒவ்வொரு திரைப்படத்திலிருந்தும் ஆசிரியர்கள் மூலம்  மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆக்டிவிட்டீஸ் ஏற்பாடு செய்துள்ளோம்.

அதை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு செய்துதர முடியும்; மாணவர்களுக்கு இது பயிற்சியாகவும் இருக்கும்; நிறைய பயனுள்ள தகவல்களும் கிடைக்கும். மேலும் திரைப்படங்களைப் பார்த்து புரிந்துகொள்வதால் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று மாணவர்களிடையே எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அழகாக விளக்கினார் கீதா.

“சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என அனைத்துப் பள்ளிகளுக்கும் இத்திரைப்படங்களைக் கொடுத்து வருகிறோம். இன்னும் எத்தனை பள்ளிகள் வந்து கேட்டாலும் அத்தனை பள்ளிகளுக்கும் கொடுக்கத்தயாராக இருக்கிறோம். சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் இத்திரைப்படங்களைக் கேட்டு அழைப்பு வந்துகொண்டிருக்கிறது.சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்து கேட்டாலும் அந்தப்பள்ளிகளுக்குக் கொடுத்தனுப்புவோம்.

விருப்பமுள்ளவர்கள் CHE-Praktikant5@goethe.de or info@chennai.goethe.org என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 - 2833 1314/2343 என்ற தொலைபேசி, geetha.vedaraman@goethe.de இ-மெயில், www.goethe.de/chennai - இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம்” என்று இயற்கையைப் பாதுகாப்பதற்கான உத்வேகத்தோடு தனது விவரணையை நிறைவு செய்தார்.

- தோ.திருத்துவராஜ்