குழந்தைகளுக்கான நோபல்பரிசு பெறப்போகும் தமிழ் மாணவன்!சேவை

அனைத்து உயிர்களுக்கும் உணவு ஒன்றே அத்தியாவசியமானது. அவ்வுணவுக்காகத்தான் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் தன் வாழ்வில் அத்தனை போராட்டங்களையும் எதிர்கொள்கின்றன. இப்படி அதி அத்தியாவசியமான உணவு எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பு கொண்ட மனிதர்கள் பேராசையில் பணத்தைத் தேடி அலைகின்றனர்.

இதற்கு நேர்எதிராக சொத்து சுகத்தில் நம்பிக்கை இல்லாமல் தன் வாழ்நாள் அத்தனையும் உணவைத் தேடி அலையும் வாழ்க்கைச் சூழலைக் கொண்டவர்கள்தான் நரிக்குறவர்கள், பழங்குடிகள் என நாடோடி வாழ்க்கை வாழும் விளிம்புநிலை மனிதர்கள்.

நரிக்குறவர்கள் வயிற்றுப்பசிக்காக ஊசிமணி, பாசிமணிகளை விற்றும், பிறரை எதிர்பார்த்து நிற்கும் நிலையால் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் அதிக ஆர்வம்காட்டுவதில்லை. இவர்கள் பிள்ளைகளைத் தங்களோடு ஊசிமணிகளை விற்கத்தான் சிறுவயதிலிருந்தே தயார்ப்படுத்துவார்கள். பிராணிகள் வதை சட்டத்தால் அவர்கள் வேட்டையாடுவதும் கூட குறைந்துவிட்டதாகவே தெரிகிறது.

இப்படியான வாழ்க்கைச் சூழலைக் கொண்ட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 12 வயதான சக்தி என்பவர் தன் இனத்தைச் சார்ந்த 35 குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்து சர்வதேச குழந்தைகளுக்கான நோபல் விருதிற்குப் பரிந்துரைக்கபட்டுள்ளார். உண்மையிலேயே பெருமைப்படுத்தப்பட வேண்டிய விஷயம்தான் இது. அந்த மாணவன் தன் அனுபவத்தை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டதைப் பார்ப்போம்… 

“திருவண்ணாமலைதான் என் சொந்த ஊர். கூட பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பாடு கிடைக்கும்னு எங்களால உறுதியாச் சொல்ல முடியாது. ஊசி பாசிகளை விற்பதுதான் எங்கள் குடும்பத் தொழில்.

அப்பா, அம்மா, நாங்க அஞ்சு பேர் என எல்லோரும் சேர்ந்து விற்றால்தான்  ஒரு வேளையாவது எங்களால் சாப்பிட முடியும். அதனால நான்காம் வகுப்போட ஸ்கூலுக்கு போகாம எங்க குடும்பத்தோட சேர்ந்து ஊசிமணிகளை விற்கத் தொடங்கினேன். தொழிலுக்காக ஒவ்வொரு ஊரா அலைவோம். அப்படிதான் ஒருமுறை எங்க சமூக மக்களின் திருவிழாவுக்காக காஞ்சிபுரம் போனோம்.

காஞ்சிபுரத்தில் மகாலட்சுமி என்ற ஒரு மேடத்தைச் சந்தித்தேன். கல்வியின் அவசியத்தைப்பற்றி விளிம்பு நிலை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடும் hand in hand என்ற தன்னார்வ அமைப்பின் உறுப்பினர்தான் மகாலட்சுமி மேடம்.

அவங்களோட குழு எங்க குழந்தைகளைச் சந்திச்சு பள்ளிக்கூடம், கல்வியறிவு, சத்துணவு, உடை, இருப்பிடம், தூய்மை பற்றி விளக்கினாங்க. இப்படிதான் நான் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சேன்” என தொடர்ந்த மாணவன் சக்திக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த விருதானது அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுஃப்சாய் பெற்ற விருது என்பது குறிப்பிடத்தக்கது.

“மகாலட்சுமி மேடம் சொன்னதுக்குப் பிறகும் படிப்பின்மேல் எனக்கு ஆர்வம் வரல. பள்ளிக்கூடம் போகமாட்டேன்னுதான் அவங்ககிட்ட சொன்னேன். ஆனால், எப்படியோ என்னைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். திருவிழா அன்னைக்கு அங்க இருந்த எங்க சமூக மக்களிலேயே எங்க அப்பா மட்டும்தான் தன் மகனான என்னை பள்ளியில் சேர்க்க அனுமதித்தார்.

இப்படி ஒருவழியாக பூங்காவனத்தில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு சேர்ந்தேன். ஆரம்ப நாட்களில் பள்ளிக்கு செல்வதே எனக்குப் பிடிக்கவில்லை. எப்படியாவது அப்பா அம்மா கூட மறுபடியும் போயிடணும்னு தோணுச்சு. டீசென்டா டிரெஸ் போட்டு பள்ளிக்கூடம் போவதும், சாப்பாட்டுக்கு குறையில்லாததும், மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

பாதியில் படிப்பை நிறுத்தியதால் முதலில் படிக்க கஷ்டமாக இருந்தது. அதனால் டீச்சர்ஸ் எனக்கு தனியா பாடம் நடத்துனாங்க. நல்லா படிக்க ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் சக்தி, தன் தங்கைகளைப் பள்ளியில் சேர்த்து நரிக்குறவர் சமூகத்தில் பெண்களை கல்வி கற்க செய்து ஒரு சமூக மாற்றத்தையே நிகழ்த்தியிருக்கிறார்.

“லீவு நாட்களில் ஊருக்குப் போகும்போது நல்ல டிரெஸ் போட்டு இன் பண்ணி டீசென்டா போவேன். எங்க மக்களும் என்னை போன்ற பிள்ளைகளும் என்னை பார்த்து ஆச்சரியப்பட்டாங்க. இதுதான் சரியான நேரம்னு நெனச்சு கல்வியின் மகத்துவத்தை பத்தி அவங்களுக்கு எங்க மொழில சொல்ல ஆரம்பிச்சேன்.  கல்வியும், சாப்பாடும் மத்தவங்க நம்மள மதிக்கும்படியான துணிகள், பேசும்விதம், கல்வி கற்பதால் உருவாகும் மரியாதைன்னு நான் அனுபவிக்கும் அத்தனையையும் விளக்கினேன்.

இது எதுவுமே கிடைக்காமல்தானே என் மக்கள் இப்படி இருக்காங்க என்ற உண்மையை அவங்ககிட்ட சொன்னேன். நானும் படிச்சா உன்ன மாதிரி ஆயிருவேனாடா என எங்க பசங்க கேட்டாங்க. கண்டிப்பாடா எனச் சொல்லவும் விருப்பமுள்ளவர்கள் hand in hand என்ற தன்னார்வ அமைப்பு பள்ளிகளில் சேர்த்தார்கள்.

என் தங்ககைகளையும் பள்ளியில் சேர்த்தேன். இப்படியே எங்க மக்கள்ல இருந்து ஒரு முப்பத்தைந்து மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தேன். இப்போ அவங்களும் என்னோடு படிக்கிறாங்க” என்று பெருமிதத்தோடு கூறினார்.

தன் வருங்கால லட்சியத்தைப் பற்றி கூறும்போது, “இப்படி எங்க சமூகத்துல இருந்து 35 மாணவர்களை பள்ளியில் சேர்த்ததால் சர்வதேச குழந்தைகளுக்கான நோபல் பரிசுக்கு என் பெயரை பரிந்துரை செய்திருக்காங்க. உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 169 குழந்தைகளில் நானும் ஒருவனா இருக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது.

ஊசி பாசி வியாபாரம் பண்ற என் அப்பா, அவர் மகனான நான் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்து ரொம்ப பெருமைபட்டார். என் சமூக மக்களுக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது.

விளிம்புநிலை மக்களுக்கு கல்வியைப் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவங்களோட அறியாமையைக் கலையணும். அவர்களோட குழந்தைகளும் இது மாதிரியான விருதுகளை வாங்கணும். அதற்காக தொடர்ந்து செயல்படுவேன். இதுதான்  என்னோட வாழ்க்கை லட்சியம்” என்று முடித்த சக்தியின் கனவு நனவாக நாமும் வாழ்த்துவோம்.

- வெங்கட்