செய்தித் தொகுப்பு
பிளஸ் 1 செய்முறைத் தேர்வில் மாற்றம்!

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இறுதித் தேர்வுடன், செய்முறைத் தேர்வும் நடத்தும் வகையில், தேர்வு முறையில் மாற்றம் செய்வதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், எஞ்சினியரிங் படிக்க ஜே.இ.இ. என்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்தத் தேர்வுகளுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என, இரண்டு வகுப்புகளில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும். பிளஸ் 1 பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்தாததால், இந்த நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவது, மிகக் கடினமாக உள்ளது. எனவே, பிளஸ் 1, பிளஸ் 2 என, இரண்டு வகுப்புப் பாடங்களுக்கும், சம அளவு முக்கியத்துவம் தர முடிவு செய்யப்பட்டு, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணையில், செய்முறைத் தேர்வு, பிளஸ் 2 வகுப்பில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், பிளஸ் 2 பொதுத்தேர்வின்போது, பிளஸ் 1க்கும் சேர்த்து, செய்முறை வகுப்புகள் நடத்துவதில், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும்; மாணவர்களுக்கும் சுமை கூடும் என, கல்வியாளர்கள் மற்றும் பள்ளிகள் தரப்பில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புக்கு, அதே ஆண்டில், பொதுத் தேர்வுடன், செய்முறை தேர்வையும் இணைத்து நடத்த, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பான, திருத்திய அரசாணையை, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.இதன்படி, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வையொட்டி, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. அதற்கான தேதி, அரையாண்டுத் தேர்வுக்குப் பின் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த எம்.பில். படிக்க விண்ணப்பிக்கலாம்!

மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த எம்.பில்., பிஎச்.டி., மற்றும் நேரடி பிஎச்.டி. படிப்பில் 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்: வாழ்வாதார ஆய்வு, பொது சுகாதாரம், சுகாதார மேலாண்மை அமைப்பு, மேலாண்மை மற்றும் தொழிலாளர் ஆய்வுகள், சமூகப்பணி, பேரிடர் மேலாண்மை, பெண்கள் ஆய்வு, கல்வியியல், மேம்பாடு ஆய்வுகள், சமூக அறிவியல், ஊடகங்கள் மற்றும் கலாசார ஆய்வுகள்.

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலை அல்லது கல்லூரிகளில், விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்ற துறையில் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்கள் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வு முறை: ரிசர்ச் அப்டிடியூட் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.,) எனும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.1. 2018
மேலும் விவரங்களுக்கு: www.tiss.edu

ஜெஸ்ட் தேசிய தகுதித் தேர்வு அறிவிப்பு!

மத்திய கல்வி நிறுவனங்களில் பிஎச்.டி. படிப்பில் சேர்வதற்கான ‘ஜாய்ன்ட் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட்’என்ற தேசிய தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாடப்பிரிவுகள்: இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், நியூரோ சயின்ஸ் மற்றும் கம்ப்யூடேஷனல் பயாலஜி
கல்வித்தகுதி: எம்.எஸ்சி. - இயற்பியல், கணிதம்,
அப்ளைடு பிசிக்ஸ், அப்லைடு மேத்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், ஆப்டிகல் மற்றும் போட்டானிக்ஸ், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு நாள்: 18.2. 2018.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.12.2017
மேலும் விவரங்களுக்கு: www.jest.org.in

NET -தேர்வுக்கு புதுப் பாடத்திட்டம்

10 ஆண்டுகளுக்குப் பின் மாறுகிறதுகல்லுாரிகள், பல்கலைகள் பேராசிரியர் பணிக்கு, ஆராய்ச்சிப் படிப்புடன்கூடிய, முதுநிலைப் பட்டதாரிகள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக, தேசிய அளவில், ‘நெட்’ என்ற தகுதித் தேர்வை, யு.ஜி.சி. நடத்திவருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட இந்தத் தேர்வு, நடப்புக் கல்விஆண்டு முதல், ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட உள்ளது.தேர்வை, இரண்டு ஆண்டுகளாக, யு.ஜி.சி. சார்பில், மத்திய இடைநிலைக் கல்விவாரியமான, சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு 10 ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் பின்
பற்றப்படுகிறது.

பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறும் பேராசிரியர்கள் பலரால் கல்லுாரிகளில் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற பாடத்திட்டங்களைப் புரிந்து, பாடம் நடத்த முடியவில்லை. எனவே, இன்னும் திறமையான பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் வகையில், நெட் தேர்வு பாடத்திட்டத்தை, யு.ஜி.சி. மாற்ற உள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.