தேசிய விருது பெற்ற கீச்சாங்குப்பம் அரசுப் பள்ளி!



அங்கீகாரம்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சுனாமி என்பது அதிர்ச்சி தந்த புதிய அனுபவம் என்பது மட்டுமல்ல வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வு. 2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமியின் கோர தாண்டவம், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருந்த மனிதர்களையும் அவர்களின் உைடமைகளையும், வாழ்வாதாரத்தையும் விழுங்கியதை இன்றுவரை அம்மக்கள் மீட்டுக்கொண்டுள்ளனர்.

உணவு, உடை, இருப்பிடம் அனைத்தை யும் இழந்து தெருக்களிலும் பள்ளிகளிலும் கூட்டம் கூட்டமாகத் தஞ்சம் புகுந்து தங்கள் இருப்பைத் தக்கவைத்து எதிர்காலத்தை மாற்றும் கனவு களோடு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அந்தக் கனவு நிறைவேறும் தருணம் தற்போது துளிர்விட்டுள்ளது.

சுனாமியின்போது நாகப்பட்டினம்  மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் கீச்சாங்குப்பம் நடுநிலைப் பள்ளி கடுமையாகப் பாதிக்கபட்டு அதில் படித்துக் கொண்டிருந்த 80 குழந்தைகள் இறந்துபோனது மனதைச் சிதைக்கும் சம்பவமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

ஆனாலும் தன் சதை எரிந்த சாம்பலிலிருந்து மீண்டெழும் ஃபீனிக்ஸ் பறவைபோல் தற்போது ஸ்மார்ட்கிளாஸ், மாடித்தோட்டம், பாதுகாப்பான குடிநீர், மாணவர்களுக்குச் சுகாதாரக் கல்வி, பாதுகாப்பான முறையில் திட திரவக் கழிவுகளை அகற்றும் முறை எனத் தன்னை முற்றிலுமாக மறு உருவாக்கம் செய்துள்ளது. பள்ளியின் இத்தூய்மை நடவடிக்கைகள் கண்டு இந்திய அரசு இந்த அரசுப் பள்ளிக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியைப் பள்ளியின் தலைமையாசிரியர் பாலு நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“பள்ளி மாணவர்களின் உடல்நலம், மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் வெளிப்பாடு, சுத்தமான தண்ணீர், சுகாதாரமான சூழல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனைவருக்கும் கல்வி என்ற இயக்கத்தின் திட்டம் மூலமாக அரசுப் பள்ளியின் தூய்மை குறித்து ஆய்வுசெய்து விருது வழங்குவதற்காக ‘ஸ்வச் வித்யாலயா புரஷ்கார்’(Swach Vidyalaya Puraskar) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் சென்ற ஆண்டு இந்தியாவிலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலிருந்தும் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பள்ளியின் தூய்மை, மாணவர்களுக்குச் சுகாதாரக் கல்வி, கல்வி கற்க உகந்த பாசிட்டிவ் சூழல், தரமான சத்துணவு, மாணவ மாணவியருக்குத்  தனித் தனிக் கழிவறை வசதி போன்ற முறைகளில் வினாக்கள் கேட்கப்பட்டு பள்ளிகளின் தரநிலை உறுதி செய்யபட்டது.

இதன் அடிப்படையில் மாவட்ட மாநில அளவிலுள்ள தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி என மொத்தம் 172 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது.

அதில் தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கீச்சாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி எங்கள் மாவட்டத்தின் தூய்மையான பள்ளியெனத் தேசிய விருது பெற்றுள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது” எனப் பெருமிதத்தோடு பேசிய பாலு என்ற தனிஒருவரின் முயற்சியில் இதுவரை செயல்படுத்திய திட்டங்களையும், ஆற்றிய நற்பணிகளையும் சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு இந்திய அரசு இவருக்குத் தேசிய நல்லாசிரியர் விருது அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளது.

“சற்றும் எதிர்பாராமல் கண்முன்னே 80 குழந்தைகள் இறந்தது மனதில் அழியாத வடுவாக ஆழப் பதிந்துவிட்டது. ஒரு தலைமையாசிரியாக அந்நிகழ்வு என்னை உளவியல் ரீதியாகவும் மிகவும் பாதித்த சம்பவம் அது. அதிலிருந்து மீளவே பல நாட்கள் ஆனது. அடுத்து வரும் எதிர்காலச் சந்ததியினருக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்ற ஏக்கம் என் மனதைத் தின்றுகொண்டிருந்தது.

எஞ்சிய பிள்ளைகளுக்காவது தரமான கல்வி அளிக்க வேண்டும், வருங்காலத்தை அறிவான சந்ததியினரால் நிரப்பவேண்டும் என ஒரு  உந்துதல் அப்போது ஏற்பட்டது. உட்கட்டமைப்பு வசதி, ஆங்கில வழிக்கல்வி,  தேர்ந்தெடுத்த மாணவர்களுக்குத் தரமான கல்வி, யோகா, கராத்தே, அனைத்து வகுப்பு களிலும் ஸ்மார்ட்கிளாஸ் என ஒவ்வோர் ஆண்டும் புதுப் புதுத் திட்டங்கள் தீட்டி செயல்பட முடிவுசெய்தோம்.

நாங்கள் உத்வேகத்தோடு செயல்படத்தொடங்கினோம். ஆனால், அடுத்த இரண்டு வருட மாணவர் சேர்க்கை எதிர்பார்த்த அளவு இல்லை. அதனால் சில புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தினோம். அதன்பின் ஆசிரியர்கள் அனைவரும் கிராம மக்களைச் சந்தித்தோம். தனியார் பள்ளிகளில் அடிக்கும் கொள்ளையை அறிந்த அவர்கள் எங்களுக்குத் துணை நின்றார்கள். தற்போது 400 மாணவர்கள் எங்கள் பள்ளியில் படிக்கிறார்கள்.

அனைத்து வகுப்புகளிலும் ஸ்மார்ட்கிளாஸ் வசதி, தனித் தனி கழிவறை வசதி, கராத்தே, யோகா, தூய்மையான வளாகம் எனப் புதுமுகம் கொண்டு மிளிர்கிறது எங்கள் பள்ளி. மாணவர்களின்  கல்வித் தரமும் உயர்ந்துள்ளது.

எங்களின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையையும், பள்ளியின் தரத்தையும், மாணவர்களின் கல்வி அறிவையும் கண்டு எங்கள் பள்ளிக்குச் சென்ற ஆண்டு காமராஜர் விருதும், தலைமையாசிரியராகிய எனக்குத் தேசிய விருதும், மேலும் ஐ.எஸ்.ஓ எனப்படும் தரச்சான்றிதழும் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

மேலும் அவர், “மொழித்திறன், மாணவர்களின்  தனித்திறனை அறிந்து அதை மேம்படுத்துவதற்கான பயிற்சியை மாலைநேர வகுப்புகளில் வழங்குகிறோம். மொழி, இலக்கணம், கலை, இலக்கியம், இசை, அறிவியல்,கண்டுபிடிப்பு எனச் சகல துறைகளையும் மாணவர்கள் ஆர்வம்கொண்டு கற்று அவர்கள் எட்டாம் வகுப்பிலிருந்து வெளியேறும்போது கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்பை முடித்த மாணவன் அளவுக்கு அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்பதை  இந்த வருட இலக்காகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டுவருகிறோம். இந்த இலக்கை அடைவதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்” என உணர்வு பொங்க எதிர்காலத் திட்டத்தையும் தன்னம்பிக்கையோடு சொல்லி முடித்தார் பாலு.

- குரு