உங்கள் பிள்ளைகளை அறிவில் பணக்காரர் ஆக்குங்கள்!



ஆலோசனை

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரம், சமூகம் அனைத்தையும் தீர்மானிக்கக்கூடிய சக்தி கல்விதான். ஆரம்பக்கல்வி தொடங்கி, உயர்கல்வி வரை கல்வியைச் சரிசெய்துவிட்டாலே ஒரு நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக்கிவிடலாம். ஆனால், நடப்பது நேர் எதிராக இருக்கிறது! ஆரம்பக்கல்வி தொடங்கியே மக்கள் நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியிருக்கிற காட்சியை நாம் இன்று பார்க்கிறோம். இதன் எதிர்பாராத மோசமான விளைவுகளை நாம் இன்னும் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.

நாம் அன்றாடம்சந்திக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம் ஆரம்பக்கல்விக்கு மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி நகர்ந்திருப்பதுதான்.உயர்கல்வி படிக்க நாடு நகரங்களைக் கடந்து போவதால் தவறில்லை. நாடு நகரங்களை கடப்பது என்பதுதான் உயர்கல்விக்கான அடிப்படை அனுபவம். ஆனால், ஆரம்பக்கல்வியை அவரவர் இருப்பிடத்திற்கே கொண்டு செல்வதுதான் சரியானதாக இருக்கும்.

பாதுகாப்புச் சிக்கல்கள்

குழந்தைகள் பாதுகாப்புக் குறைபாட்டுக்கு கிராமப்புற கல்வி வளர்ச்சி அடையாமல் போனதும், கிராமப்புறங்களில் கல்வி வழங்குவதில் ஏற்பட்ட பின்னடைவும்தான் அடிப்படைக் காரணம். ஐம்பது வருடங்களுக்குத் தனியார் பள்ளிகள் பெருகாமல் இருந்தபோது குழந்தைகள் அந்தந்தக் கிராமங்களிலேயே கல்வி பயின்றனர்.

ஏழைகள் மட்டுமல்லாமல், ஓரளவு வசதி படைத்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் கூட தங்கள் குழந்தைகளை கிராமங்களிலேயே படிக்க வைத்தனர். அப்போது குழந்தைகள் தங்களைப் பாதுகாப்பாகவே உணர்ந்தனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பு குறித்த பயம் இன்றிப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். ஒன்றாம் வகுப்பு மாணவன்கூட தனியாகவே பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தான். இன்றைக்கு நிலைமை அப்படியே தலைகீழ்.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனைக்கூட பள்ளிக்குத் தனியாக அனுப்பமுடியவில்லை.கிராமங்கள் இன்று சுய சார்புடையதாய் மாறிவிட்டது. அல்லது மாறி வருகிறது.

இந்த சமயத்தில், கல்விக்காக நகர்ப்புறங்களை நோக்கிக் குழந்தைகள் நகர்வதால்தான், குழந்தைகள் காணாமல் போவது, கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பெற்றோர்களின் பார்வையிலிருந்து விலகி இருப்பதால், ஓர் அர்த்தம் இல்லாத சுதந்திர உணர்வு மாணவர்களுக்கு ஏற்படுகிறது. அவர்கள் வலியச் சென்று வீணான விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 உறவுகளுக்கான உரிமை மறுப்புகுடும்ப உறவு நிலைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல் குழந்தைகளின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவாலாகவே கருத
வேண்டியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு குழந்தையின் மீது அனைத்து உறவினர்களும் அதிக உரிமை வைத்திருந்தார்கள்.

ஒரு குழந்தை தவறு செய்தால் அந்தக் குழந்தையின் அத்தை, மாமி, சித்தப்பா, பெரியப்பா என்று எல்லோரும் கண்டிப்பார்கள். இவ்வாறு தங்கள் குழந்தைகளை உறவினர்கள் கண்டிப்பதைப் பெற்றோர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொண்டார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தை தன் பெற்றோருக்கு பயப்படுவதைவிட உறவினர்களுக்குத்தான் அதிகம் பயந்தது.

இன்று அந்த மனநிலை முழுவதுமாக மாறிவிட்டது. தன் குழந்தையை  வேறு எந்த உறவினர்களும் கண்டிப்பதைப் பெற்றோர் விரும்புவதில்லை. இதை “பொஸஸிவ்னெஸ்” என்று சொல்லமுடியாது. இது ஒரு விதமான அறியாமை. குடும்ப வாழ்க்கையின் சிதைவு குடும்ப வாழ்க்கை முறை சிதைந்து வருவதும், ஆரம்பக்கல்வி மேம்பாட்டுக்குத்தடையாகவே இருக்கிறது.

இன்றைய இளம் பெற்றோர்கள் பலவீனமான சிந்தனை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அனுபவம், முதிர்ச்சி, எதுவுமே இல்லாமல் சினிமா மற்றும் தொலைக்காட்சியின் தாக்கத் தினால் ஏற்பட்ட நுகர்வுக் கலாசாரத்திற்கு வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு அர்த்தமில்லாத வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

சமூகத்தின் பார்வையைத் தங்கள் மேல் ஈர்க்கச் செய்ய வேண்டும் என்ற பொருளற்ற ஆசையின் காரணமாகத் தங்கள் குழந்தைகளைக்கூட புறக்கணித்து வருகிற சம்பவங்களையும் நாம் பார்க்கிறோம்.பிரைவசி என்று சொல்லிக்கொண்டும், நவீன வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டும் இளம் பெற்றோர்கள் கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வந்து விடுகிறார்கள். கிராமப்புற வாழ்க்கையும் இல்லாமல் நகர்ப்புற வாழ்க்கையும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் திண்டாடுகிறார்கள்.

கிராமப்புறத்தின் வசதிகளை விட்டுவிட்டு, தாத்தா பாட்டிகளிடம் குழந்தைகள் வளரும் பொற்காலங்களைத் தவிர்த்து நகரங்களில் குடியேறும் இளம் பெற்றோர்களால் குழந்தைகளுக்கு எந்தவிதமான வழிகாட்டுதலையும் வழங்க முடிவதில்லை. கிரஷ் மற்றும் ஆயாக்களிடம் வளரும் குழந்தைகளுக்கு எந்தவிதமான புத்திசுவாதீன வளர்ச்சியும் இருக்காது என்பதை இந்த இளவயது பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தாத்தா, பாட்டிகள் குழந்தைகளுக்குச் சொல்லும் இரவு நேரக்கதைகள் எவ்வளவு பெரிய வாழ்க்கைப்பாடம்! அது இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு வாய்க்கவில்லையே! பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், தாத்தா, பாட்டியிடமும் குழந்தைகள் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கைக்கான ஆதாரக்கல்வி என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆடை நாகரிகத்தில்கூட பெற்றோர்கள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும் அறியாமை வருத்தத்திற்கு உரியது. பத்தாம் வகுப்பில் படிக்கும் மகனைப் பார்க்க வரும் தாய் லெகின்ஸ் பேண்ட்டும், ஸ்லீவ்லெஸ் டாப்ஸுமாக வருவது எந்த வகையில் சரி?

இந்த ஆடை நாகரிகம் என்பது ஆண்களுக்கும்தான். முழங்கால் தெரிகிற பெர்முடாஸுடன், கிரவுண்டில் விளையாடுகிற டீ-ஷர்ட்டை போட்டுக்கொண்டு தங்கள் குழந்தைகளுடன் தொலைதூரப் பயணம் மேற்கொள்வதெல்லாம் தவறாகப்படவில்லையா?

உங்கள் குழந்தை உங்களிடமிருந்துதான் நிறையக் கற்றுக்கொள்கிறது. உங்களைப் பார்த்துதான் உங்கள் குழந்தையும் உடை உடுத்தும். ஆடை நாகரிகம் என்பதும் ஒரு வகை கல்விதான்.நிறைவாக ஒரு செய்தியைக் கூறுவது மன நிறைவாக இருக்கும்.

கூட்டுக்குடும்பம், உறவினர்களின் ஆலோசனைகள், அனுபவமிக்கவர்களின் வழிகாட்டுதல்கள் இவைதான் குழந்தைகளுக்கு ஆதாரக்கல்வி. இதைத்தான் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களைப் பண்பில் உயர்ந்தவர்களாகவும், அறிவில் பணக்காரர்களாகவும் உயர்த்தும். வாழ்த்துகள்.

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்