புரிதல் இருந்தால் கருத்து மோதல் காணாமல் போகும்!



உளவியல் தொடர் 27

உடல்... மனம்... ஈகோ!

நான் உங்களுக்கு எதுவுமே சொல்லித்தர மாட்டேன். நீங்கள் உங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவி மட்டும் செய்கிறேன்
 - புரூஸ் லீ
  - ஈகோ மொழி

எல்லா காலகட்டத்திலும் சகமனிதன் மீதான ஈர்ப்பும், அக்கறையும்தான் மனிதர்களை இயக்கிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் அடுத்தவருக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் இறுதிவரை மேலோங்கியபடியே இருப்பதுகூட ஈகோவின் வெளிப்பாடுதான்.

ஈகோவை நிர்வாக ரீதியாக அணுகும்போது அதை ஒருபோதும் சண்டையைத் தீர்க்கும் செயலாகப் பார்க்கக்கூடாது. ஈகோ சார்ந்த நிர்வாகம் என்பது தனிமனிதன் மேற்கொள்ளும் சுயநிர்வாகம்தான். கடந்த அத்தியாயத்தில் பார்த்த அப்பா மகன் சச்சரவிலிருந்து வெளிப்படும் செய்தியும் அதுதான். ஈகோவைத் திறம்பட நிர்வகிக்கத் தவறினால் வாழ்க்கையில் (அப்பாவின் மரணம்) பேரிடரைச் சந்திக்கவே நேரிடும்.

சண்டைகளும் சச்சரவுகளும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இருந்து கொண்டேயிருக்கும்.கருத்து மோதல் என்பது வாழ்வின் ஒரு பகுதிபோல், தினசரி நடவடிக்கைகளின் ஓர் அங்கம்போல் இருந்துவருகிறது. அன்றாட வாழ்வில் எழும் கருத்து மோதல்களை உடனுக்குடன் சரிசெய்துவிட வேண்டும். அவற்றை வளரவிட்டு பிரச்னையாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

அதே சமயம் கருத்து மோதல்களை மொத்தமாக வாழக்கையிலிருந்து விலக்கிவைக்க நினைக்கக்கூடாது. அப்படி அதை விலக்கிவைக்கவும் முடியாது. மனிதர்களுடன் பழகி வாழும்போது கருத்து மோதல்கள் தோன்றிக் கொண்டேதானிருக்கும். சிலநேரங்களில் கருத்து மோதல்கள் எழுவது வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக ஆக்கிவிடுவதும் உண்டு. அதனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம்.

கருத்து மோதல்களைக் கையாளும் சூட்சுமங்கள்இரண்டு நபர்களின் வாக்குவாதத்திற்குள் கருத்து மோதல்கள் எழுவது இயற்கையானது. அதை அணுகும்முன், கருத்து மோதல் என்றால் என்ன என்ற அடிப்படையைப் புரிந்துகொள்வது அவசியம்.உலகில் ஒரே மாதிரி சிந்திக்கக்கூடிய இரண்டு நபர்கள் எங்குமே இல்லை. இருவருக்குமிடையில் சிறிய நகக்கண் அளவாவது வித்தியாசம் இருக்கும். இதிலிருந்துதான் கருத்து வேறுபாடுகள் எழுகின்றன.

பொதுவாக மனிதர்களுக்கு முகங்களில், வெளித்தோற்றத்தில், உடலமைப்பில் வேறுபாடுகள் இருப்பதைப்போலத்தான், மனதளவிலும் எண்ணங்களால், விருப்பு வெறுப்புகளால், மதிப்பீடுகளால் செயல்பாடுகளால் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரேமாதிரி கவனிப்பையும், வளர்ப்பு முறையையும் பெற்றோர்கள் தந்தாலும், ஒரே குடும்பத்தில் வளரும் குழந்தைகளின் குணங்கள் வேறுவேறாகவே இருக்கும்.

இரட்டைப் பிறவியர்கள் கூட ‘தனி மனிதர்’களாகத் தோற்றமளிக்க இதுதான் காரணம். எனவே, ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்க வேண்டும், அங்கிகரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறிதும் சாத்தியமில்லாத ஒன்று. அடிப்படையில் இரண்டு நபர்கள் ஒரே சிந்தனைகொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான கருத்துகளைக் கொண்டவர்களாக இருக்க முடியாது.

நகக்கண் இடைவெளியில் கருத்து வேறுபாடாக எழும் ஒரு சிறிய நெருப்புப்பொறி வார்த்தைகளால் வளர்ந்து கருத்து மோதலாக உருவெடுக்கிறது.
சூட்சுமம்-1


அப்பா - மகன் மோதல் கதையில் (கடந்த அத்தியாயம்) ‘மகனின் ஆசைகள் என்ன? அவனது விருப்பு வெறுப்புகள் என்ன? அவன் ஒரு தனி மனிதன், அவன் என்னைப்போலவே சிந்திக்க வேண்டும் என்பது என்ன அவசியம்…? என் மனம் வேறு, அவன் மனம் வேறு? மனிதர்களுக்குள் கருத்து மோதல் எழுவது இயற்கையானதுதானே?’ என்ற ரீதியில் அப்பா யோசித்திருந்தால் போதும், அந்தக் கருத்து மோதல் சூழ்நிலையினின்றும் மிக லாவகமாய் மீண்டிருக்கலாம். எப்போதும் கருத்து மோதல்களின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதை ஏற்கும் பக்குவத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ‘ஏற்றுக்கொள்ளுதல்‘தான் கருத்து மோதல்களை நிர்வகிக்கும் வழிமுறையின் முதல் படி.

சூட்சுமம் - 2

‘ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமை (Right) அவனுக்கே இருக்கிறது’. இதைச் சற்று உன்னிப்பாகப் பார்த்தால்,‘நாம் நம்மை எப்படி ஒரு தனி மனிதராக, உரிமை உள்ளவராக, சுதந்திரம் கொண்டவராக உணர்ந்து நடக்கிறோமோ அதேபோல, மற்றவருக்கும் அவருக்கான வாழ்வை, எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது…’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

‘இவன் என் மகன்… எனக்குப் பிறந்தவன்… அதனால் அவன் வாழ்வை வடிவமைக்கும் ‘உரிமை’ எனக்கே இருக்கிறது…’ என்று அப்பாவிற்குள் எழுந்த கருத்துதான் ‘கருத்து மோதல்’ பிறக்க காரணமாகவே அமைந்தது. நமக்கு உரிமையானவர் நாம் வகுத்த பாதையில் வரவில்லை என்பதற்காக அவர் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார் என்று எண்ணுவதில் அர்த்தமே இல்லைதானே?

சூட்சுமம் - 3

தனிப்பட்ட கோரிக்கைக்கு இல்லை/முடியாது என்று மறுக்க ஒவ்வொரு மனிதருக்கும் உரிமை இருக்கிறது.தன்னுடைய கோரிக்கைக்கு இல்லை/முடியாது என்று மறுக்க மகனுக்கு உரிமை இருக்கிறது என்பதை அப்பா புரிந்து கொண்டிருந்தார் என்றாலும் கருத்து மோதலைத் தவிர்த்திருக்கலாம்.

பல குடும்பங்களில் இந்த ‘இல்லை/முடியாது’ என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாததால்தான் கருத்து மோதல்கள் பெரிய அளவில் எழுந்து பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்கிறது.

இல்லை/முடியாது என்ற சொற்களைக் கேட்க யாரும் பிரியப்படமாட்டார்கள்தான். ஆனால், அதைக் கேட்டதும், சிலர் ஏதோ அவச் சொற்களைக் கேட்டதுபோல், அளவுக்கு அதிகமாகக் கோபப்படுவார்கள். ‘நான் சொல்லி நீ மறுப்பதா?’ என்று எழும் தனிமனித அகங்காரம்தான் கோபத்தைத் தூண்டுகிறது.

மகன் அவனுக்கான உரிமையை அந்த இடத்தில் உண்மையாக வெளிப்படுத்துகிறான் என்பதை அந்த நொடி உணர்ந்திருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் கருத்து மோதல்களாக மாறியிருக்காது.பொதுவாக ஒருவர் தனது கருத்துகளை  மற்றவர் மீது திணிக்கும்போதுதான் மற்றவர் ‘இல்லை/முடியாது’ என்று சொல்கிறார்கள். கருத்துத் திணிப்பை கைவிட்டாலே தேவையற்ற கருத்து மோதல்கள் உருவாகும் சந்தர்ப்பங்கள் குறைந்துவிடும்.

கருத்துத் திணிப்பு தவறு என்று அதை மொத்தமாய் ஒதுக்கவும் கூடாது. காரணம் சில நேரங்களில் கருத்துத் திணிப்புதான் பெரிய அளவில் பயனளிக்கும். எப்போது தெரியுமா…?

குரு சிஷ்யன் கதைஎதிரி யார்?

ஆற்றில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தார் குரு. அங்கு வந்த சிஷ்யன் “மனிதர்களுக்கு எதிரி எப்படி உருவாகிறான் குருவே?” என்றான்.குரு சிரித்துவிட்டு சொன்னார், “காட்டில் ஒரு பாம்பு இருந்தது. அதற்கு நீண்ட நாட்களாகத் தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களைக் கூட விழுங்கிவிடுவது பற்றிக் கேட்டிருந்ததால், தங்கள் இனம்தான் பலசாலி என்று நினைத்திருந்தது.

அதை சோதித்துப் பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.அப்போது ஒரு கீரி வரவே, அதைப் பார்த்த பாம்பு பயத்துடன் மறைந்துகொண்டது. அதோடு மட்டுமல்ல ‘கீரிதான் பலசாலி’ என்றும் நினைத்துக்கொண்டது. அப்போது ஒரு பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், ‘பூனைதான் பலசாலி’ என்று எண்ணியது. அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ‘பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி’ என்று நினைத்தது.

பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்துகொண்டிருந்த பச்சைப் பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான். நாய் அலறிக்கொண்டு ஓடியது. அதைப் பார்த்த பாம்பு, ‘நாயை விட மனிதன்தான் பலசாலி’ என்று எண்ணிக் கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது. மனிதன் அதைக் கண்டதும், ‘ஐயோ பாம்பு!’ என்று அலறிக்கொண்டு ஓடினான்.

அந்தக் காட்சியைக் கண்ட பாம்பு, ‘இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி’ என்று மீண்டும் எண்ணிக்கொண்டது. அப்போதுதான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, ‘அய்யோ...!’ என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு” என்று குட்டிக் கதையைச் சொன்னார் குரு.இந்தக் கதையைக் கேட்ட சிஷ்யன் சிரித்துவிட்டு, “இதில் யாரை மனிதன் எதிரியாக நினைப்பது?” என்றான்.

“இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் தான்தான் பெரியவன் என்ற அகந்தை வந்துவிடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு எதிரான பலசாலியை இயற்கை தானாகப் படைத்திருக்கிறது. அதை மனிதன்தான் எதிரி என்று பெயரிட்டு அழைக்கிறான்.

மனிதனுக்கு சகமனிதன் ஒருபோதும் எதிரி ஆகமாட்டான். மனிதனின்சட அகந்தையை அழிக்க அவனைவிட பலசாலி அவனது மனம்தான். உண்மையில் அதுதான் அவனுக்குள்ளிருக்கும் மிகப்பெரிய எதிர் பலசாலி“ என்றார் குரு.சிஷ்யன் விளக்கம் கிடைத்த திருப்தியோடு, “அருமையாகத் தெளிவுபடுத்தினீர்கள் குருவே” என்றான்.

- தொடரும்


ஸ்ரீநிவாஸ் பிரபு