சர்வதேச போட்டிகளில் சாதித்த இந்திய மாணவர்கள்!



சாதனை

ரிஃபாத் ஷாரூக் படிப்பில் அதிக கவனம் இல்லாத ரிஃபாத் ஷாருக்கிற்கு விஞ்ஞானத்தோடு விளையாடுவது என்பது பொழுதுபோக்கு. கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள ரிஃபாத் ஷாரூக் பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் சொற்பம்தான். ஆனால், இவர் உருவாக்கிய உலகின் மிகச் சிறிய செயற்கைக்கோளான கலாம் சாட்டானது நாசா விஞ்ஞானி களால் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

நாசா மற்றும் I doodle learning inc. நிறுவனமும் இணைந்து விண்வெளித் துறைக்கான ‘விண்வெளியில் கனசதுரங்கள்’என்ற தலைப்பில்  உலக மாணவர்களுக்கான ஒரு போட்டியைச் சமீபத்தில் நடத்தியது. இதில் 57 நாடுகளிலிருந்து சுமார் 87,000 படைப்புகள் இப்போட்டியில் பங்குபெற்றன. அதில் நான்கு செ.மீ பக்க அளவுள்ள 64 கிராம் எடைகொண்ட கனசதுர வடிவ கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கி ஷாருக் அப்போட்டியின் வெற்றியைத் தட்டிச்சென்றார்.

உலக அரங்கில் இந்தியச் செயற்கைக்கோளை உலகமே வியக்கும் நாசாவினால் ஏவச்செய்து உலகத்தையே அண்ணாந்து பார்க்கச் செய்தார் தமிழக மாணவரான ஷாருக். அவரின் இந்த சாதனை அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அரசியல் தலைவர்களாலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சாஹிதி பிங்கலி பெங்களூருவில் உள்ள இன்வெஞ்சர் அகாடமி மாணவியான சாஹிதி பிங்கலிக்கு ‘நமது ஏரிகள் நமது உரிமை’ என்ற தலைப்பில் பள்ளியில் ஒரு புராஜெக்ட் கொடுக்கப்பட்டது. இதற்காகத் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஏரியைக் கண்காணித்ததில் அதன் நீரானது மிகவும் மாசுபட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தார். அந்தத் தண்ணீரைத் தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்தவுடன் நீர் மாசுபடாமல் இருக்க ஏதாவது செய்யவேண்டும் என முடிவுசெய்தார்.

அதன் விளைவாக ‘நீர்நிலைகளைக் கண்காணிப்பதில் மக்களின் பங்கு’என்ற ஒரு ஆண்ட்ராய்டு ஆப்பை உருவாக்கினார் +2 மாணவியான சாஹிதி பிங்கலி.  இன்டெல்லும், எம்.ஐ.டி லிங்கன் லேப்பும் இணைந்து கலிஃபோர்னியாவின் லாஸ்ஏஞ்சல்ஸில் கடந்த மே மாதம் நடத்திய  சர்வதேச அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டியில் சுற்றுச்சூழல் குறித்த சாஹிதியின் ஆராய்ச்சி யானது தங்கப்பதக்கத்தை வென்றது.

மேலும் மக்கள் நலனையும், சுற்றுச்சூழலையும்  மனதில் வைத்து உருவாக்கிய  இந்த ஆப்பை தரவிறக்கம் செய்யும்போது உடன் வரும் சிம்பிள் அறிவியல் கிட் மூலம் நீர் மாசுபாட்டின் அளவைத் துல்லியமாகச்  சாதாரண மக்களும் நொடியில் கணக்கிடும் வகையில் உருவாக்கியதற்காகப் பால்வெளியில் உள்ள ஒரு கிரகத்திற்கு சாஹிதியின் பெயரைச் சூட்டப்போகிறார்கள். சர்வதேச அளவில் நடந்த இப்போட்டியில் தங்கம் வென்று இந்தியக் கொடியை அமெரிக்கா மண்ணில் பறக்க விட்டிருக்கிறார் சாஹிதி பிங்கலி.

- குரு