செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்!

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு!

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.  இந்தத் தடையைக் கடந்த மாதம் 12ம் தேதி உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு வெளியிடத் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தாமதமானது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறிய கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலவில்லை.

எனவே, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதிக்குள்ளாகவும், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 10-ம் தேதிக்குள்ளாகவும் நடத்தி முடிக்கும் வகையில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்த கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நீட்டித்து நடத்திக்கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது இதனையடுத்து ஜூலை 17-ல் கலந்தாய்வு தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

TNPSC-குரூப்-4 முதல் கலந்தாய்வு!

டி.என்.பி.எஸ்.சி. என்று சொல்லப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை உதவியாளர்,சர்வேயர் மற்றும் வரைவாளர் ஆகிய பணிகளுக்கு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 8 வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. டைப்பிஸ்ட் பணிக்கு ஆகஸ்ட்4-6ம் தேதிகளிலும், ஸ்டெனோ-டைபிஸ்ட் பணிகளுக்கு செப்டம்பர் 4-6 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்!

முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டம் படிக்கும் மிகச்சிறந்த மாணவர்களுக்கு காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. மாணவர்கள் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களாக இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: மாணவர்கள் சி.பி.எஸ்.இ., ஐ.எஸ்.சி.இ. அல்லது ஏதாவது ஒரு மாநில கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பிளஸ் டூ படித்தவராக இருக்க வேண்டும். 2017-18 கல்வியாண்டில் இளநிலைப் படிப்பில் சேர்பவராக இருக்கலாம். இளநிலைப் படிப்பை முடித்து, முதுநிலைப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணமும் வழங்கப்படும். மெரிட் ஸ்காலர்ஷிப், விளையாட்டுத் திறமை, தந்தை- தாயை இழந்தவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் info@buddy4study.com என்ற இணையதளத்துக்குச் சென்று ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். விண்ணப்பத்திற்குக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.7.2017

நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வு அறிவிப்பு!

பிரதிபா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேரியர் எஜுகேஷன்’நடத்தும் நேஷனல் ஸ்காலர்ஷிப் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்வித்தகுதி: எஸ்.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ., சி.பி.எஸ்.இ., போன்ற ஏதேனும் ஒரு கல்வி வாரியத்தின் கீழ் 5ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிக்கும் மாணவ, மாணவியர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: ஆன்லைனில் ‘அப்ஜெக்டிவ்’அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வில் பொதுஅறிவு, கணிதம் மற்றும் சமூக அறிவியலில் வினாக்கள் கேட்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புவோர் www.niceedu.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.9.2017.

IGNOUவில் படிக்க திருநங்கையருக்குக் கட்டணம் கிடையாது!

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலையின்(Indira Gandhi National Open University -IGNOU), ஜூலை மாத மாணவர் சேர்க்கைக்குக், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, ஜூலை 31 வரைஆன்லைன்’ மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், IGNOUவின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பட்டயப்படிப்பு முடிப்பவர்களைச் சுகாதார கல்வியாளர் பதவியில் நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, இந்தப் படிப்பிலும் மாணவர்கள் சேரலாம்.

அதேபோல் இக்னோ பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க திருநங்கையருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கையர் பாடக் கட்டணம் செலுத்தாமல், இக்னோ படிப்புகளில் சேரலாம். இப்படிப்புகளில் சேர விரும்புவோர் www.onlineadmission.ignou.ac.in என்ற இணைய
தளத்தில் விவரங்களைப் பெறலாம். மேலும், rcchennai@ignou.ac.in என்ற இ-மெயில் முகவரி மற்றும் 044 - 243127662979 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என IGNOUவின் சென்னை மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.