தமிழ் படி! அரசு அதிரடி



தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சட்டம் வந்துள்ளது. சட்டம் போட்டா தமிழ் வளர்க்க வேண்டும் என்கிறீர்களா? வேறு வழி இல்லை. இப்படியே விட்டால் தமிழ் மெல்ல பேச்சு மொழியாகிவிடும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் எழுதப்படிக்க தெரியாமல் போய்விடக்கூடும். இப்போதே பெரும்பாலான தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பது  உண்மை. 2006ல் தமிழை கட்டாயம் படிக்க வைக்க அப்போதைய தி.மு.க. அரசு முதல் முயற்சி செய்தது. உடனே தனியார் பள்ளி நிர்வாகங்கள் போர்க்கொடி உயர்த்தின. உண்மையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலமும், பெரும்பாலான பள்ளிகளில் இந்தியும் கட்டாயப் பாடமாக இருக்க, தமிழைத் தள்ளி வைப்பது வேதனையான விஷயமாக இருந்தது.

தொடர்ந்த முயற்சிகளின் விளைவாக தமிழக அரசு தமிழைக் கட்டாயப் பாடமாக்க சட்டம் கொண்டுவந்துள்ளது. அதில், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., சர்வதேச பள்ளிகள் என தமிழகத்திலுள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல தனியார் பள்ளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தச் சட்டம் அமல்படுத்தப்படக்கூடாது எனவும், இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுகின்றன.

ஆனாலும் வரும் கல்வியாண்டிலிருந்து (2015-2016) 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிப்படியாக கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி கட்டாயம் ஆக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அரசு, அதற்கான புத்தகங்களையும் தயாரித்து வருகிறது. முதல் கட்டமாக  1ம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்கள் அச்சடிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை, மதுரை வட்டார அலுவலகத்தில் விற்பனைக்குத் தயார் நிலையில் உள்ளன.

கட்டாயத் தமிழ் படிப்பு குறித்து கல்வியாளர் ‘பாடம்’ நாராயணன் அவர்களிடம் கேட்டபோது, ‘‘இது வரவேற்கத்தக்க சட்டம். மொழி சிறுபான்மையினரைத் தவிர, மற்ற எல்லா மாணவர்களும் தமிழ் மொழியைப் படிக்க வேண்டியது அவசியம். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் அம்மாநில மொழியை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். மலையாளம் படிக்கத் தெரியாவிட்டால் கேரளாவில் அரசு வேலை கிடைக்காது. அதே போல இங்கும் தமிழ் தெரியாதவர்களுக்கு அரசு வேலையை மறுக்கலாம்.

ஏனென்றால் நிர்வாகமொழி தமிழ். ஆட்சி மொழி தமிழ். அப்படியென்றால் மக்களிடம் பேசுவது, கோப்புகள் எழுதுவது எல்லாம் தமிழில்தான் இருக்க வேண்டும். அரசு வேலை வேண்டும், ஆனால் தமிழ் வேண்டாம் என்று சொல்வது சரியா? தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளும் செயல்படுத்த வேண்டும். அப்படி கற்பிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

- எம்.நாகமணி