ஹாட்ரிக் தனலட்சுமி!



மூன்று ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஜெயித்த கிராமத்துப் பெண்ணின் வெற்றிக் கதை

ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்னொரு கிராமத்தில் வாழ்க்கைப்பட்ட கிராமத்துப் பெண் இவர். இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகும் அத்தனை பேருக்கும் ஆச்சரிய முன்னுதாரணம். இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆகிய மூன்று ஆசிரியர் தகுதித் தேர்வுகளையும் ஒருசேர எழுதி வென்றிருக்கும் இவர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வின் பொதுப் பிரிவில், பெண்கள் வரிசையில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருக்கிறார்! இதில் விசேஷம் என்னவென்றால், தனலட்சுமி போட்டித் தேர்வுகளுக்காக கோச்சிங் சென்டர்களுக்கு அலைந்ததில்லை. ஸ்பெஷல் கிளாஸ்... இத்யாதி... இத்யாதி... எதுவும் இல்லை.

அப்புறம் எப்படி என்றால், ‘‘நம்பிக்கையோடு படிச்சா ஜெயிக்கலாம்ங்க’’ என்கிறார். ‘‘டீச்சர் ஆகணும்ங்கிறது என் கனவு. அதுக்காக கஷ்டப்பட்டுப் படிச்சேன். படிப்புக்காக ஓடிக்கிட்டே இருந்தேன். அந்த ஓட்டம்தான் என் கனவை நிஜமாக்கி இருக்கு’’ - தனலட்சுமியின் வார்த்தைகளில் சாதித்த சந்தோஷம். ‘‘எனக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராமம். அப்பா வீரண்ணன், அம்மா பிச்சையம்மாள், தம்பி, தங்கைன்னு சாதாரண விவசாயக் குடும்பம். என் கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தைகளோடு ஆண்டிபட்டி பக்கம் அரப்படி தேவன்பட்டி கிராமத்துல இருக்கேன். கணவர் இடைநிலை ஆசிரியர்.

எங்க சமூகத்துல காலாகாலத்துல கல்யாணம் முடிச்சு அனுப்பிடுவாங்க. பொம்பளைப் பிள்ளைகளை படிக்க வைக்க மாட்டாங்க. எதுக்கு படிப்புன்னு கேட்பாங்க. இந்த கேள்விதான் படிச்சா என்னங்கற வெறிய எனக்குள்ள விதைச்சுது. அப்ப எங்க ஊர்ல ஸ்கூல் கிடையாது. தினமும் 3 கி.மீ. தூரம் நடந்து போய் பக்கத்து ஊர்ல படிக்கணும்.

அதனாலயே பல பேர் படிக்கல. என்னோட அம்மாவும் அப்பாவும் அதிகம் படிக்காதவங்களா இருந்தாலும், என்னை நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சாங்க. என்னை முதல் வகுப்புல இருந்தே தேனிக்கு அனுப்பி படிக்க வைச்சாங்க. நானும் நல்லா படிச்சேன். டீச்சருங்க அன்பா, ஆர்வமா சொல்லிக் கொடுத்தாங்க. அவங்கள பார்த்தே வளர்ந்ததால எனக்கும் டீச்சர் வேலையில ஆசை வந்துச்சு.

+2 முடிச்சதும் டீச்சர் டிரெயினிங் படிக்கணும்னு அலைஞ்சேன். 900க்கு மேல மார்க் இருந்துச்சு. ஆனா, ஆயிரம் மார்க் இருந்தாதான் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில இடம் கிடைக்கும். வேற வழியில்லாம பெங்களூர் போய் படிச்சேன். ஒரு வருஷத்துல அந்தக் கல்லூரியில சில பிரச்னைகள் ஏற்பட்டு ஊருக்கு வந்துட்டேன்.

படிப்பைத் தொடர முடியலைங்கற என் வருத்தத்தை என் முகத்தைப் பார்த்தே புரிஞ்சிக்கிட்ட என் அப்பா, நிலங்களை வித்து, கடன் வாங்கி, 5 லட்சம் செலவு பண்ணி என்னை தூத்துக்குடியில இருக்கிற தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில சேர்த்து விட்டாங்க. ஒரு சில பிரச்னைகளால, அந்தப் பயிற்சி நிறுவனம் ஒரு வருஷம் கழிச்சுதான் எனக்கு சான்றிதழ்களைக் கொடுத்துச்சு. இதனால, ஒரு வருட சீனியாரிட்டி போச்சு. நமக்கு விதிச்சது இதுதான்னு மனசை தேத்திக்கிட்டேன்.

அப்புறம் கல்யாணமாகி இங்க வந்துட்டேன். என் கணவர் டிகிரி படிக்கச் சொன்னார். பி.ஏ. வரலாறு அஞ்சல் வழியில படிச்சேன். ‘வரலாறா படிக்கறே’ன்னு பாக்கறவங்கல்லாம் எகத்தாளமா கேப்பாங்க. அதுவும் படிப்புதானேன்னு எனக்கு மனசுக்குள்ள பொங்கும். அதை முடிச்சதும் ஒவ்வொரு வருஷமும் சீனியாரிட்டிபடி வேலை கிடைக்கும்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். பிறகு பி.எட். ரெகுலர் காலேஜ்ல சேர்ந்து படிச்சேன். இதுக்கிடையில குழந்தைகள் பிறந்து வளர்ந்துட்டாங்க.

அவங்களையும் கவனிச்சுக்கிட்டே கரஸ்ல எம்.ஏ., படிச்சேன். திடீர்னு சீனியாரிட்டிபடி வேலை தரும் சிஸ்டத்தைத் தூக்கிட்டு தகுதித் தேர்வு முறையைக் கொண்டு வந்துட்டாங்க. ஆடிப் போயிட்டேன். ஒரு படி ஏறும்போதெல்லாம் சதுரங்க பாம்பு வாயில மாட்டி புறப்பட்ட இடத்துக்கே கொண்டுவந்து நிறுத்தும் என் அதிர்ஷ்டம் என்னை உக்கிரமாக்குச்சு. ஆனாலும், மனம் தளரலை. எம்.ஏ. படிக்கும்போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வேலைக்குத் தேர்வு எழுதி 150க்கு 130 மார்க் எடுத்தேன். அது ஒரு நம்பிக்கையைக் கொடுத்துச்சு. நம்மாலும் இவ்வளவு மார்க் எடுக்க முடியும்னு தைரியமா அடுத்த ஓட்டத்துக்குத் தயாரானேன்.

குழந்தைகள் ஸ்கூல் போனதும் படிக்க ஆரம்பிப்பேன். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் படிப்பேன். 2012ல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு மட்டும் அப்ளை பண்ணி எழுதினேன். அதுல பாஸாகிட்டேன். எனக்கு தமிழ் மீடியத்துல படிச்சு வந்தவங்களுக்கான கோட்டாவுல வேலை கிடைக்கும்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, அதுவும் கைகூடி வரல. ஏதேதோ காரணங்களைச் சொல்லி இந்த கோட்டாவுல பாஸானவங்களுக்கு இன்னைக்கு வரைக்கும் பணி நியமன ஆணை வழங்கல.

ஆனால், நான் விடாம எழுதணும்னு முடிவு பண்ணினேன். ‘நமக்கு வேலை வேணும். அதுக்காக நாம உழைச்சா தப்பில்லையே’னு தீவிரமானேன். இந்த தடவை மூணு தேர்வுக்கும் அப்ளை பண்ணினேன். எழுதினேன். ஆனால் மூன்றிலும் வெற்றி கிடைக்கும்னு நினைக்கலை. நல்லா எழுதுவது மட்டும்தான் என் லட்சியமா இருந்துச்சு.

எழுதுனேன். ஜெயிச்சேன். முதுநிலை பட்டதாரி ஆசிரியராகி, நல்ல டீச்சர்னு பெயரெடுக்கணும். ‘வரலாறா படிக்கிறே’ன்னு எகத்தாளமா கேட்டவங்க பார்வையை மாத்தணும். ஹிஸ்டரி படிச்சு ஐ.ஏ.எஸ் ஆகி சமூகத்துல உயர்ந்து நிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள ரோல்மாடலா வைச்சு நிறைய மாணவர்களை உருவாக்கணும்’’ - கண்களில் லட்சியம் மின்ன பேசுகிறார் தனலட்சுமி.

பேராச்சி கண்ணன்
படங்கள்: பி.ராதாகிருஷ்ணன்