பல்கலைப் பார்வை!



ஆசியாவின் முதல் கால்நடை பல்கலைக்கழகம்!

சென்னை, மாதவரத்தில் இருக்கிறது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம். 200 ஏக்கர் பரப்பில் இருக்கும் இந்த பல்கலைக்கழகம் இப்போது 25ம் ஆண்டில் காலடி வைத்து வெள்ளி விழா கொண்டாட்டத்தில் திளைக்கிறது. இன்னொரு ஸ்பெஷல் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. ஆசியாவிலேயே கால்நடைகள் சம்பந்தமான கல்விக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இதுதான்!

ஆரம்பத்தில் சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியாக இருந்த இது, ஒரு நவீன வேளாண்மைப் பள்ளியாக செயல்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் 1876லிருந்து செயல்பட்ட இந்தப் பள்ளி, 1903ல் கல்லூரியாக வளர்ந்து, சென்னை வேப்பேரியில் செயல்படத் தொடங்கியது. 1974ல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற இக்கல்லூரி, 1976ல் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியானது. 1977ல் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்டது.

1985ல் இரண்டாவது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கல்லில் ஆரம்பிக்கப்பட்டது. இவை இணைக்கப்பட்டு, 20.9.1989 அன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமாக மாதவரத்தில் துவங்கப்பட்டது.  25 ஆண்டுகால சிறப்பான பணியின் பலனாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உயரிய விருதான ‘சர்தார் படேல் விருதை’ இந்தப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

கடந்த 2012-2013ல் புதிதாக இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் திருநெல்வேலி மற்றும் தஞ்சை - ஒரத்தநாட்டில் துவக்கப்பட்டன. உணவு மற்றும் பால் பதன தொழில்நுட்ப நிறுவனம், உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரியாக 10.4.2012 முதல் தரம் உயர்த்தப்பட்டது. ஓசூரில் பன்னாட்டுத் தரத்தில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி 18.7.2011 முதல் துவங்கப்பட்டது.

‘‘ஆறு கல்லூரிகளை இணைப்புக் கல்லூரிகளாகக் கொண்டு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதுவரை எட்டு துணைவேந்தர்கள் பதவி வகித்துள்ளனர்’’ என விவரங்களை அடுக்குகிறார் ஹரிகிருஷ்ணன். இவர் பல்கலை கழக பதிவாளர் ஆவார். துணைவேந்தர் நியமிக்கப்படாததால் அந்தப் பணியிலும் பொறுப்பேற்றுள்ளார். 

‘‘இந்தப் பல்கலைக்கழகம் (TANUVAS) கால்நடை மருத்துவக் கல்வி அளித்தல், கற்றலை மேம்படுத்தல், ஆய்வு மேற்கொள்ளல், அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் கால்நடை மருத்துவ அறிவியலின் பல்வேறு நுணுக்கங்களை ஊரக மக்களுக்கு விரிவுபடுத்தல் ஆகிய பணிகளைச் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

கால்நடை மருத்துவம், விலங்கின அறிவியல் மற்றும் உணவு அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான தரமான கல்வியை அளித்தல், கால்நடை மற்றும் கோழி உற்பத்தி, நலப் பாதுகாப்பு மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், கால்நடை மற்றும் கோழியின வளர்ச்சிக்கும்,

பாதுகாப்புக்கும் உரிய தொழில்நுட்பத் தகவல்களை கால்நடை பராமரிப்புத் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பண்ணை அதிபர்களுக்கும் விரிவாக்கக் கல்வி மூலம் பரப்புதல் போன்றவை நம் நோக்கம். உயர் கல்வி அலுவலர் பயிற்சி மையங்கள், உயர் ஆய்வு மையம் மற்றும் சிறப்பு உயர் ஆய்வு மையம், உயிர் தகவல் மையம், ஆராய்ச்சிப் பண்ணைகள் என பலவும் பல்வேறு இடங்களில் இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன’’ என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் ஹரிகிருஷ்ணன்.

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் உயர்கல்வி அலுவலர் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை உயிர்த்தொழில் நுட்பவியல் மற்றும் நோய் எதிர்ப்பியலில் உயர் ஆய்வு மையமும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் கால்நடை உயிர் தொழில்நுட்பவியல் உயர் ஆய்வு மையமும் செயல்பட்டு வருகிறது.

இங்கு மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் நிதியுதவியுடன் 1991ல் உயிர் தகவல் மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையத்தில் இணையம், நிக்நெட், மெட்லாஸ் மூலம் ஆன்லைனில் வேண்டிய தரவுகளைப் பெறுவதற்கான வன்பொருள் மற்றும் மென்பொருள், மிஙிவி வழங்கல், அதிக எண்ணிக்கையிலான கணினிகள் இவற்றோடு விசாட் மைக்ரோ எர்த் ஸ்டேஷன் உடனான தரவுத்தள அடிப்படையிலான குறுந்தகடுகள் சிஞிஸிளிவி வசதி கொண்ட ஆஃப்லைன் ஆகியவை உள்ளன.

கால்நடை, கோழியினம் மற்றும் மீன் பண்ணையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளில் இந்தப் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வருகிறது. ஆராய்ச்சிப் பண்ணைகள், கால்நடை இடுபொருட்கள், பல்வேறு கால்நடை உற்பத்தி மற்றும் பராமரிப்பில் உள்கட்டமைப்பு வசதி மற்றும் செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கிறது. வளாகத்தினுள் ஆராய்ச்சிப் பண்ணைகள் சில:

பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை, மாதவரம் பால்பண்ணை, சென்னை.
கோழியின ஆராய்ச்சி நிலையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை.
இப்பல்கலைக்கழகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளுடன் விலங்கினங்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்டறியவும் அதைத் தடுக்கவும் ஆய்வகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றது. அவை:பல்கலைக்கழக மைய ஆய்வகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை.

கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம், நாமக்கல்.
கோழியின் நோயறிதல் மற்றும் நோய் கண்காணிப்பு ஆய்வகம், நாமக்கல் கால்நடைத் தீவனம் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான மருந்துக் கண்காணிப்பு ஆய்வகம், சென்னை.

மனித மற்றும் விலங்கினத்திற்கிடையே பரவும் நோய்கள் ஆராய்ச்சிக் கூடம், மாதவரம் பால்பண்ணை, சென்னை.நுண்ணுயிரி தடுப்பூசி ஆராய்ச்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை.நச்சுயிரித் தடுப்பூசி ஆராய்ச்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை
பறவையின நோய் ஆய்வுக்கூடம், தலைவாசல், சேலம்.
மைய தீவன தொழில்நுட்பப் பிரிவு,
காட்டுப்பாக்கம், காஞ்சிபுரம்.

பல்கலைக்கழகம் தன்னுடைய இணைப்பு


விரிவாக்க மையங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் வேளாண் சமூகத்தினருக்கு வேண்டிய சேவைகளை அளித்து வருகிறது. 21 கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 உழவர் பயிற்சி மையங்கள், 3 வேளாண் ஆராய்ச்சி மையங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை மற்றும் நிலையங்கள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

இவை விஞ்ஞானிகளுக்கும் பயனாளிகளுக்கும் இடையே நிலையான தொடர்பை உண்டாக்கியுள்ளன.  மேலும், கால்நடை அறிவியல் தகவல் சேவை மையம் ஒன்றும் விரிவாக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் ஒளி/ஒலி பாடங்களை உருவாக்கி கால்நடை பண்ணைத் தொழில் தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

இப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்ககமும் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர் தியாகராஜன், ‘‘உயர்கல்வி தொடர முடியாதவர்கள் முதல் அடிப்படை கல்வியே பெறாதவர்கள் வரை அவரவருக்கும் ஏற்ற பல தரப்பட்டவர்களுக்கு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு என பலவும் இங்கு வழங்கப்படுகின்றன.

மகளிர், வேலைவாய்ப்பு அற்ற இளைஞர், தொழில்முனைவோர், கால்நடைத் தொடர்புத் துறை சார்ந்தவர் ஆகியோருக்குப் பொருத்தமான கற்றல் முறைகள் மற்றும் சாதனங்கள் மூலம் (அச்சு சாதனம், CD ROM/ குறுந்தகடு உரையாடல் வழிக் கலந்துரையாடல், இணையதளம்) சுய கற்றல் வாய்ப்புகளை உண்டாக்குதல் பொருட்டு 2011ல் இது தொடங்கப்பட்டது’’ என்றார்.

என்னென்ன படிக்கலாம்?

இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடைப் பராமரிப்பு பட்டம் - B.V.Sc.- A.H
கால அளவு நான்கரை ஆண்டு கால முழு நேரத்தையும் ஆறு மாத கால உள்ளிடைப் பயிற்சியையும் கொண்டது. இளநிலை உணவு தொழில் நுட்பப் பட்டம்  B.Tech FT கால அளவு மூன்றரை ஆண்டு முழு நேரமாகும்.

இளநிலை கோழியின உற்பத்தி தொழில்நுட்பப் பட்டம் - ஙி.ஜிமீநீலீ றிறிஜி கால அளவு மூன்றரை ஆண்டு முழு நேரமாகும்.
முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல்/உணவுத் தொழில்நுட்பப் பட்டம் - M.V.Sc./ M.Tech
கால அளவு இரண்டாண்டு முழு நேரமாகும்.

முனைவர் பட்டம் - கால்நடை மருத்துவம் - Ph.D.
கால அளவு மூன்றாண்டு முழு நேரமாகும்.
கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் புலங்களில் அளிக்கப்படும் பட்டங்கள் / பட்டயப் படிப்புகள்.
M.V.Sc. (முதுநிலை கால்நடை அறிவியல்) - 22 துறைகள்
Ph.D (கால்நடை மருத்துவம்) - 20 துறைகள்
M.Tech (முதுநிலை உணவுத் தொழில்நுட்பம்)
Ph.D. (உணவுத் தொழில்நுட்பம்)

முதுநிலை உயிர் புள்ளியியல் M.Sc. (BioStatistics)
முதுநிலை உயிர் தகவலியல் M.Sc. (BioInformatics)
முதுநிலை ஆய்வியல் நிறைஞர் - உயிர் தொழில்நுட்பம் M.Phil BioTechnology

முதுநிலை பட்டயம் - செல்லப்பிராணி மருத்துவம் P.G. Diploma in companion animal practice
முதுநிலை பட்டயம் - கால்நடை மருத்துவ நோயறி ஆய்வக முறைகள். P.G.Diploma in veterinary laboratory Diagnosis
முதுநிலை பட்டயம் - கால்நடை மற்றும் மீன் அறிவியல் தொழில் மேலாண்மை P.G.Diploma in management in animal - fisheries sciences

 எம்.நாகமணி
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்