இறப்புச் சான்றிதழ் பெறுவது எப்படி?



ஒவ்வொரு இறப்பையும் பதிவு செய்வது, ‘பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969’ன் படி, கட்டாயம். அப்படிப் பதிவு செய்ததன் அத்தாட்சிதான் இறப்புச் சான்றிதழ். அரசின் உதவிகள், நிதிகள், பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளைப் பெறுவதற்கு இறப்புச் சான்றிதழ் மிக அவசியம்.

 இதனால்தான், இந்தச் சான்றிதழ் பெறுவதிலும் முறைகேடுகள் அதிகம் நடக்கின்றன. போலியான சான்றிதழ் பெற்று அரசின் உதவி மற்றும் சலுகைகளைப் பெற முயற்சி நடப்பதால், விசாரணைக்குப் பிறகே இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. முறைப்படி இறப்புச் சான்றிதழ் பெற இதோ வழிமுறைகள்...

இறப்பை எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்?

ஒருவர் இறந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்கிறது சட்டம். காலம் தாழ்த்தினால், அபராதம் விதிக்கப்படும். அதுவும் ஒரு வருடம் வரைதான். அதற்கு மேலும் இறப்பைப் பதிவு செய்யவில்லை என்றால் கோர்ட்டுக்குச் சென்று, பதிவு செய்யாத காரணத்தை விளக்கி, அதன் பிறகே சான்றிதழ் பெற முடியும். ‘பதிவு செய்யப்படவில்லை’ என்பதற்கு ஆதாரம் தேவை. அதைக் கொண்டே கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

எனவே இதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி அலுவலகத்திலேயே ‘படிவம் 10’ என்பதை நிரப்பிக் கொடுத்து, அத்தாட்சி பெற வேண்டும். ஒருவர் எந்த ஏரியாவில் இறக்கிறாரோ அங்கேதான் இறப்புச் சான்றிதழ் பெற முடியும்.

எந்தெந்த இடங்களில் இறப்புச் சான்றிதழ் தேவை?


* விபத்து நிவாரண நிதி பெறுவதற்கு...

* இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் உயிரிழப்பில் நிவாரணம் பெறுவதற்கு...

* நலிந்தோர் குடும்ப துயர் துடைப்புத் திட்டம் வழியாக நிதி பெற குடும்பத் தலைவரின் இறப்புச் சான்றிதழ் தேவை.

* சாலை விபத்து நிவாரண நிதி பெறுவதற்கு...

* இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் வருவாய்த்துறை மூலம் அளிக்கப்படும் கருணைத் தொகை பெறுவதற்கு...

* வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு...

* ஓய்வூதியம் பெறுவதற்கு...

* கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற விதவை சான்றிதழ் அளிக்கும்போது கணவனின் இறப்புச் சான்றிதழ் தேவை.

* அனாதை இல்லத்தில் சேருவதற்கான ஆதரவற்றோர் சான்றிதழ் பெற, தாய்-தந்தையின் இறப்புச் சான்றிதழ் அவசியம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?


மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள்...

* ஒருவர் இறந்துவிட்டால், எரியூட்டும் இடத்திற்குச் சென்று அங்குள்ள எரியூட்டுபவரிடம் முதல் தகவலைத் தெரிவிக்க வேண்டும். அவர், சம்பந்தப்பட்டவரிடம் விண்ணப்பம் அளிப்பார். அதில், இறந்தவர் பெயர், வயது, முகவரி, பிறந்த இடம், இறந்த இடம், இறந்த தேதி, தந்தை/கணவர் பெயர் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அந்த எரியூட்டும் ஊழியர், அருகிலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இந்த விண்ணப்பத்தை அளித்துவிடுவார்.

அதன் பிறகு சான்றிதழை, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்திற்கு நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம். அல்லது ஆன்லைன் மூலமும் பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். ஆன்லைன் சான்றிதழின் உண்மைத்தன்மைக்கு அதன் பதிவு எண்ணே போதுமானது. சீல் அல்லது கையெழுத்து போன்றவை இடப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

* ஒருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டால், இறப்புச் சான்றிதழ் பெற அந்த மருத்துவமனையின் தகவல் அறிக்கை போதுமானது. சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு விண்ணப்பித்துவிடும். மண்டல அலுவலகத்தில் சான்றிதழ் பெறப் போகும்போது, மருத்துவமனை உங்களுக்கு அளித்த தகவல் அறிக்கையையும், மாநகராட்சிக்கு அளித்துள்ள அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்து சான்றிதழ் வழங்கப்படும்.

* விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் இறப்பு ஏற்பட்டால், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை எரியூட்டுபவரிடம் காட்டி, விண்ணப்பத்தைப் பெற்று, நிரப்பிக் கொடுத்தால், மண்டல அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

நகராட்சிப்பகுதியில் வசிப்பவர்கள்...

* ஒருவர் இறந்த பிறகு இந்தச் சான்றிதழைப் பெற அங்குள்ள நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதலில், நகராட்சியிலுள்ள தகவல் மையத்திற்குச் சென்று விஷயத்தைச் சொன்னால் அவர்களே உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

* ஒருவர் வீட்டில் இறந்திருந்தால், நகராட்சியிலுள்ள தகவல் மையத்திற்குச் சென்று அதற்கான படிவங்களைப் பெற வேண்டும். படிவம் 2 மற்றும் 4(ஏ) ஆகிய இரண்டு படிவங்கள். படிவம் 2 இறப்பைப் பதிவு செய்வது. படிவம் 4(ஏ) மருத்துவச் சான்றிதழ். உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தெரிந்த மருத்துவரிடம், இறந்ததற்கான ஒரு சான்றிதழ் பெற்று படிவங்கள் இரண்டையும் இணைத்து நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

* ஒருவர், மருத்துவமனையில் இறந்திருந்தால், அந்த மருத்துவமனையிலேயே படிவம் 2 மற்றும் படிவம் 4 ஆகிய இரண்டும் இருக்கும். இதில் படிவம் 4ல் மருத்துவர், இறந்தவருக்கு என்ன விதமான நோய்கள் இருந்தன? இறந்ததற்கான காரணம் ஆகியவற்றை குறிப்பிடுவார். இதனைப் பெற்று, சுகாதார ஆய்வாளரிடம் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

* விபத்து, தற்கொலை என்றால், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையோடு படிவம் 2 மற்றும் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

* இந்தப் படிவம் இரண்டும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

* ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சான்றிதழ் வேண்டுமெனில் ஒவ்வொரு பிரதிக்கும் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ளலாம்.

கிராமங்களில் வசிப்பவர்கள்...

* கிராமத்தில் உள்ளவர்களுக்கு முழுப் பொறுப்பும் அந்தக் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரே!

* அவரிடம் தெரிவித்து விண்ணப்பம் பெற்று துணை வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

எத்தனை நாட்களுக்குள் கிடைக்கும்?

ஏழு நாட்களில் இறப்புச் சான்றிதழ் உங்கள் கைக்கு வந்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள். துணை வட்டாட்சியருக்கு விண்ணப்பிப்பவர்கள் மக்கள் சாசனத்தின்படி 15 நாட்களுக்குள் சான்றிதழ் பெறலாம். இதில் குறைபாடு இருப்பின், மாவட்ட ஆட்சியரிடம் முறையிடலாம்.

பேராச்சி கண்ணன்