என் ஓவியங்கள் ரொம்ப ரொமான்டிக்!
ஸ்டார் ஹாபி பார்வதி நாயர்
மாடலிங்கில் இருந்து சினிமாவில் என்ட்ரி ஆனவர் பார்வதி நாயர். ‘என்னை அறிந்தால்’, ‘உத்தம வில்லன்’ என தமிழில் பார்வதியின் பாதிப்பு குறைவுதான் என்றாலும், கன்னடத்தில் பிஸி ஹீரோயின். அங்கே கிஷோருடன் நடித்த ‘வாஸ்கோடிகாமா’, பார்வதியின் லேட்டஸ்ட் ஹிட்.
‘‘நான் ஒரு ரொமான்டிக் ஓவியை. காதலைப் பற்றி வரையவே பிறந்தவள் என என்னை நான் நினைத்துக்கொள்வேன். அந்தக் காதலில் ஒரு அர்த்தம் இருக்கும். ஓவியங்களில் இருக்கும் ஒவ்வொரு நிறமும் வெவ்வேறுவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும். ஆரஞ்சும் மஞ்சளும் பளிச்சிட்டால், அந்த ஓவியத்தில் சந்தோஷம் நிரம்பி வழியும். ஆழமான உணர்வைச் சொல்லும் பெயின்டிங்னா, அதுல கண்டிப்பா கறுப்புக்கும் நீல நிறத்திற்கும் தனி இடம் உண்டு!’’ - பார்வதி நாயரின் லுக், ஆயிரம் ஓவியங்களுக்கு சமம்.
‘‘எங்க அம்மா நல்லா வரைவாங்க. வீட்டையே ஓவியங்களால அலங்கரிப்பாங்க. எங்க வீட்டு சோபா செட், சுவர்கள், டைனிங் டேபிள் என எல்லாத்திலும் அம்மாவோட கைவண்ணம் இருக்கும். அதனால சின்ன வயசுலயே எனக்கு பெயின்டிங்ல விரும்பம் வந்திடுச்சு. ஸ்கூல் படிக்கும்போது உலகின் நீளமான ஓவியம் வரைஞ்சு மாணவர்கள் செய்த கின்னஸ் சாதனையில நானும் பங்கெடுத்து சர்டிபிகேட் வாங்கியிருக்கேன். ஸ்கூல் லெவல் போட்டிகள்ல நிறைய பரிசுகள் வாங்கிக் குவிச்சிருக்கேன். காலேஜ்ல பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ்... கிளாஸ் போரிங்கா இருந்தா, பேப்பரும், பேனாவுமா எதையாவது கிறுக்க ஆரம்பிச்சிடுவேன்.
ஓவியம் பக்கமே இருந்த என்னோட கவனம், காலேஜ் படிக்கும்போதுதான் லேசா மாடலிங் பக்கம் திரும்பிச்சு. 2009ல ‘மிஸ் கர்நாடகா’ பட்டம். அதன் பிறகு படிப்பு பாதி, மாடலிங் பாதினு ஆகிப்போச்சு. சினிமாவுல என்ட்ரி ஆனதும், ஓவியத்தோட கவிதை எழுதுறதும் சேர்ந்துடுச்சு. நிறைய கவிதைகள் எழுதி வச்சிருக்கேன். என் ஓவியங்கள் எல்லாத்திலும் டார்க் கலர்ஸை பார்க்க முடியும். ஆயில் பெயின்டிங், அக்ரிலிக், அப்ஸ்ட்ராக்ட்னு வெரைட்டியா வரைய ஆரம்பிச்சேன். ரெண்டு நாள்ல ஒரு ஓவியத்தை முடிச்சிடணும்னு எல்லாம் டார்கெட் வச்சு, வேலையை முடிக்க முடியாது. ஆயில் பெயின்ட் பண்ணினா, அந்த பெயின்ட் காயுறதுக்கே டைம் எடுக்கும். அதன் பிறகு, தோணினப்ப எல்லாம் டிசைன்ஸ் மாத்துவேன். கற்பனைக்கு எல்லை ஏது?
ஓவியங்கள் தொடர்பா நான் எந்த ஒரு கோர்ஸும் படிச்சதில்லை. காட்டுப் பூ மாதிரி தானா முளைச்சது. அதனால என் ஓவியங்கள் எல்லாமே தனித்துவத்தோட இருக்கும். சிலது குழந்தைத்தனமா தெரியும்... சில ஓவியங்கள்ல பக்குவம் பளிச்சிடும். அடிக்கடி முகங்கள் வரைவேன். அந்த முகங்கள்லயும் சின்னதா ஒரு ரொமான்டிக் லுக் தெறிக்கும். அதான் என்னோட ப்ளஸ். படங்கள்ல பிஸியாகும்போது, ஓவியங்களுக்கு சின்னதா ஒரு பிரேக் விடுவேன். யோகா, தியானம் பண்றது எவ்வளவு யூஸ் ஃபுல்லான விஷயமோ, வரையறதும் அப்படி ஒரு விஷயம்தான்! டென்ஷனா இருக்கற நேரத்துல ஓவியம் வரையத் தொடங்கினா, அந்த ஓவியம் வரைஞ்சு முடிக்கறப்ப டென்ஷன் தூள் தூளாகிடும்.
வரையறது தவிர, கிராஃப்ட் அயிட்டங்கள் நிறைய பண்ணுவேன். ரொம்ப ரொம்ப நெருங்கிய நட்புகளுக்கு என் கையால பண்ணின ஸ்பெஷல் கிஃப்ட்ஸ் குடுப்பேன். என் திறமையை நிரூபிக்கணும்னு இதை நான் செஞ்சதில்லை. சும்மா ஆர்வம், அவ்வளவுதான்! ஆனா, யாருக்கும் என் பெயின்டிங்கை கிஃப்ட் கொடுத்ததில்லை. இதுவரை நான் வரைஞ்ச அப்ஸ்ட்ராக்ட் பெயின்டிங்ஸ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிட்டிருக்கேன். ஒவ்வொண்ணையும் ஃப்ரேம் போட்டு வைக்கணும். கலெக்ஷன்ஸ் சேர்ந்ததும், சின்னதா ஒரு ஆர்ட் எக்ஸிபிஷன் வைக்கலாம்னு ப்ளான். லேட்டஸ்ட்டா ஒரு 3 டி பெயின்டிங் பண்ணினேன். ஒரு புத்தர் சிலை மீது, வெளிச்சம் வீசும். அதைப் பார்த்து எங்க அம்மா ரொம்பவே பாராட்டினாங்க. ‘ரொமான்டிக்கா வரையிறீங்க? லவ் பண்ணியிருக்கீங்களா?’னு சில ஃப்ரெண்ட்ஸ் கேப்பாங்க. மனசு சந்தோஷமா இருந்தாலே, லவ் மூடு தானா வரும். அதுக்கு காதலிச்சிருக்கணும்னு அவசியமில்லையே! தமிழ்ல கேமராமேன் நட்டி சார் ஹீரோவா நடிக்கற ‘எங்கிட்ட மோதாதே’ல கமிட் ஆகி நடிச்சிட்டிருக்கேன். ஒரு மலையாளப் படமும் பண்ணிட்டிருக்கேன். ஸோ, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூருனு அடிக்கடி ட்ராவல். இந்தப் பயணங்கள்ல நிறைய கத்துக்க முடியுது. அது என் ஓவியத்துக்கும் கவிதைக்கும் ரொம்பவே உதவுது. ஆனா, ஷூட்டிங்ல நோ ஹாபி. அங்கே நடிப்புல மட்டும்தான் கவனம் செலுத்துவேன். என்னோட ஆர்ட் எக்ஸிபிஷனை எங்கே பண்ணலாம்னு இன்னும் முடிவு பண்ணல. சென்னையில இருந்தா, கண்டிப்பா நீங்களும் வந்து பாராட்டலாம் பாஸ்!’’
"டென்ஷனா இருக்கற நேரத்துல ஓவியம் வரையத் தொடங்கினா, அந்த ஓவியம் வரைஞ்சு முடிக்கறப்ப டென்ஷன் தூள் தூளாகிடும்..."
- மை.பாரதிராஜா
|