ஐந்தும் மூன்றும் ஒன்பது



48 மர்மத் தொடர்

இந்திரா சௌந்தர்ராஜன் / ஓவியம்: ஸ்யாம்

‘‘அருவி சப்தம் நாங்கள் நடக்க நடக்க இன்னும் பெரிதாகக் கேட்கத் தொடங்கியது. ஜோசப் துளியும் பயமின்றி நடந்தார். அவர் வேகமாக நடப்பதால் நானும் நடந்தேன். நான் என் வாழ்நாளில் அதற்குமுன் பார்த்திராத விதம் விதமான தாவரங்கள் என் மேலே உரசின. சில தாவரங்களிடம் ஒரு விதமான பச்சை வாசனை! எனக்கு இந்தப் பயணம் புதிராகவும் குழப்பமாகவும் இருந்தது.

‘ஜோசப்... நாம் இப்படி எங்கே போகிறோம்? எனக்கென்னவோ நாம் முட்டாள்தனமாக நடப்பது போலத் தோன்றுகிறது’ என்று நடந்தபடியே பேசினேன்.

‘பேசாமல் வாருங்கள் கணபதி சுப்ரமணியன். என்னை உறுதியாக நம்புங்கள். நான் இந்த நாயை நம்புகிறேன்’ என்றார் அவர். நல்லவேளையாக சில நிமிடங்களில் அடர்வான தாவரங்களிடமிருந்து மீண்டு, சற்று தட்டையான ஒரு நிலப்பரப்பை அடைந்து நின்றோம். அப்பால் அருவி நீரின் கும்மாளமான ஓட்டம். மாலைப்பாறைகள் இடையே ஒரு வழியை உருவாக்கிக்கொண்டு அருவி நீர் ஓடிக்கொண்டிருந்தது. மிகத் தூய்மையான நீர். எல்லாவிதமான மினரல்களும் உள்ள நீர். ஒரு குரூரமான பணக்காரனோ... இல்லை, மோசமான அரசியல்வாதியோ இந்த அருவி நீரைப் பார்த்தால் அப்படியே பாட்டிலில் அடைத்து லட்சக்கணக்கில் விற்று காசாக்கி விடுவார்கள் என்கிற ஒரு எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அப்படி ஒரு எண்ணம் தோன்றியது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நகரத்தில் வாழும் என் வாழ்வு எனக்குள் ஏற்படுத்திய ஒரு தாக்கம் இது என்றே எனக்குத் தோன்றியது. அந்த அருவி நீரில் ஒரு சித்தர் சிலை போல நின்று குளித்துக் கொண்டிருந்தார். ஜோசப் அவரை எனக்குக் காட்டினார். அவரைப் பார்க்கவும் எனக்குள் ஒரு பிரமிப்பு. எங்களுக்கு வழிகாட்டிய நாய், அருகில் ஒரு பாறைமேல் ஏறிக்கொண்டு ‘வள் வள் வள்’ என்று ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல மூன்று முறை மட்டும் கத்தி விட்டு மௌனமாக நின்றது. அதன் எதிரொலியாக, கண்ணை மூடிக்கொண்டு குளித்தபடி இருந்த சித்தர் கண் திறந்தார். ஜோசப்பையும் என்னையும் பார்த்தார்.

ஜோசப் பணிவாக, ‘நமஸ்காரம் சாமி’ என்றார். சித்தரிடம் பதிலுக்கு எந்த உணர்வும் இல்லை. மிக ஆழமாக வெறித்தார். பிறகு அருவி நீரோட்டத்தை விட்டு விலகி தன் போக்கில் எங்கோ போகத்  தொடங்கினார். ஜோசப் அவரைப் பின் தொடர்ந்தார். ஜாடை காட்டி என்னை பின் தொடரச் சொன்னார். அவர் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றது எனக்கு ஆச்சரியமே!

‘சித்தர்கள் என்றாலே புரியாத புதிராக, குழப்பமாகத்தான் இருக்க வேண்டுமா’ என்கிற கேள்வியோடு நான் ஜோசப்பை ஒட்டியே நடந்தேன். சித்தர் சில பாறைகள் மேல் ஏறிக் குதித்தவராய் ஒரு குகை போன்ற பாகத்துக்குள் சென்றார். நல்லவேளையாக வெளிச்சம் இருந்து, சகலத்தையும் எங்களால் பார்க்க முடிந்தது. அதேசமயம்,  இருட்டப் போவதையும் உணர்ந்தேன். இந்த இரவு இந்த குகையில்தான் கழியப் போவதாக எனக்குத் தோன்றியது.

குகைக்குள்ளே நிறைய விளக்குகள் எரிந்தபடி இருந்தன. தட்டையான பாறைகளில் ஆங்காங்கே கையளவு குழிகள் இருக்க, அதற்குள் நிரம்பியிருந்த எண்ணெயில் தடிமனான திரிகள் நின்றபடி தீபத்தை சுடர்விடச் செய்துகொண்டிருந்தன. நான் அப்போதுதான் அந்த சித்தர் ஒரு கோவணம் கூட கட்டியிராத நிர்வாணத்தில் இருப்பதை உணர்ந்தேன். ஜோசப் அவரையே பார்த்தபடி கை கட்டிக்கொண்டு நின்றார். எனக்கு அப்படி நிற்கத் தோன்றவில்லை. அந்த சித்தர் ஈர உடம்போடு ஒரு இடத்தில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு, முதுகை பின்புறம் பாறை மேல் சாய்த்துக் கொண்டார். அப்படியே, ‘யார் நீங்கள்?’ என்பது போலப் பார்த்தார்.

‘சாமி! என் பேர் ஜோசப் சந்திரன். இவர் என் நண்பர்...  பேர் கணபதி சுப்ரமணியன். நாங்கள் தொல்பொருள் இலாகாவுல வேலை பார்க்கிறோம். எனக்கு நிறையவே ஆன்ம விசாரம் உண்டு. அதனாலதான் உங்களைப் போல சித்தர் சாமிகளைப் பாக்க இந்த சதுரகிரி மலைக்கு வந்தேன்’ என்று சித்தரிடம் ஒரு இன்ட்ரோவும் கொடுத்தார். அப்போதும் பதிலுக்கு சித்தரிடம் எந்த உணர்வும் இல்லை. ‘சாமி... மனசு விட்டு உங்ககிட்ட நான் பேச விரும்பறேன். மனசுக்குள்ள நிறைய கேள்விங்க சாமி...’’ - என்று ஜோசப் தொடரவும், போனால் போகிறது என்று ஒரு சிரிப்பு சிரித்தார். பிறகு கை ஜாடை காட்டி உட்காரச் சொன்னார்.  உட்கார்ந்த இடத்திற்கு பக்கத்தில் மலைவாழைப்பழ தார் ஒன்று இருக்க, அதில் மஞ்சளும் பச்சையுமாக பழுத்த பழங்கள்! அதைக் காட்டி சாப்பிடச் சொன்னார். ஜோசப் மறுப்பு கூறாமல் நாலு பழத்தைப் பிய்த்து எனக்குத் தந்துவிட்டு தானும் நாலு பழத்தைப் பறித்து அப்படியே தோலோடு சாப்பிட்டார். அதைப் பார்த்த அந்த நிர்வாண சித்தரிடம் சற்று பலமான சிரிப்பு!” - கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...



அந்த சாயா வாகினிப் பறவையை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை. வர்ஷன் காரைவிட்டு இறங்கிய நிலையில் ரஞ்சித்திடம் கை குலுக்கி முடித்தான். பின்னாலேயே நின்ற ப்ரியாவை பார்த்து ‘ஹாய்’ என்றான் ரஞ்சித். வள்ளுவரும் காரைவிட்டு இறங்கி சோம்பல் முறித்தார். அப்படியே கம்பீரமாய் தெரிந்த மலைக்கோட்டையையும் பார்த்தார்.

‘‘என்னடா... ட்ரிப் நல்லபடியா அமைஞ்சதா?’’
‘‘சூப்பர்... உன்னைத்தான் இப்படி நடுரோட்ல சந்திப்பேன்னு கொஞ்சம்கூட நினைக்கல!’’
‘‘அதாண்டா லைஃப்! இப்ப எனக்கும் ப்ரியாவுக்கும் லைஃப் பத்தின பார்வையே வேற. நிஜமா சொல்றேண்டா! இந்த பூமி, அப்புறம் இந்த இரவு பகல், அதுல நான், நீ எல்லாமே பிரமிப்பா இருக்கு...’’
‘‘நீ பேசறதே புரியல. தலைல அடிகிடி பட்டுச்சா?’’
‘‘நீ இப்படித்தான் கேப்பே ரஞ்சித். ஆனா எங்க அசைன்மென்ட் என்னன்னு உனக்கு தெரிஞ்சா வாயப் பொளந்துடுவே...’’
- வர்ஷனும் ரஞ்சித்தும் அங்கலாய்ப்பாக பேசிக்கொள்வது ப்ரியாவைக் கிள்ளியது.
‘‘வர்ஷ்... மொக்க போடாம பாயின்ட்டுக்கு வா! நம்ம அசைன்மென்ட் பத்தி பேசற நேரமும் இது இல்ல. பேசற இடமும் இது இல்ல...’’ - என்று ப்ரியா காட்டிய கோபம் ரஞ்சித்தை மிகவே சிந்திக்க வைத்தது.
‘‘ரைட்... ரைட்...’’ என்ற வர்ஷனும் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து ரஞ்சித் எதிரே நீட்டினான்.  அந்த ஆண்ட்ராய்டு போனை பார்த்த மாத்திரத்தில் ரஞ்சித்தும், ‘‘இது சீனா செட். ரொம்ப அட்வான்ஸ்டு டெக்னாலஜி செட்டுடா! ஆனா துளி வியர்வை உள்ேள இறங்கினாலும் போதும்... சண்டியாயிடும். ஆமா, இதுல உனக்கு என்ன தெரியணும்?’’ என்றான்.
‘‘எல்லாம்டா...’’
‘‘மெஸேஜ், மெயில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக்னு ஒரு சுரங்கமே இதுக்குள்ள இருக்கும். அதுல முக்காலே மூணு வீசம் தெண்டமோ தெண்டம். பர்ட்டிக்குலரா என்ன வேணும்னு சொன்னா எனக்கும் வேலை சுலபம்...’’
‘‘நீ சொல்றதும் சரிதான். இதுல வாய்ஸ் ஏதாவது ரெக்கார்ட் ஆகியிருக்கான்னு பார். அப்புறம் டெல்லியில் யார் கூடல்லாம் கான்டாக்ட் இருக்குன்னு தெரியணும்...’’
‘‘இப்படி மொட்டையா ெசான்னா எப்படிடா? இது யாரோட செல்போன்... இதைக் கொண்டு நீ எதைக்  கண்டு
பிடிக்க விரும்பறே?’’
- ரஞ்சித் பாயின்ட்டாகக் கேட்க, வர்ஷன் ப்ரியாவைப் பார்த்திட, ‘நான் சொல்றேன்’ என்பது போல முன்வந்து பேசத் தொடங்கினாள் ப்ரியா.
‘‘ரஞ்சித்... தெரிஞ்சோ தெரியாமலோ நான், அப்புறம் வர்ஷன், இதோ இந்த வள்ளுவர் அய்யான்னு நாங்க மூணு பேரும் ஒரு அதிசயமான விஷயத்துல இறங்கி அதுல ரொம்ப தூரம் போயிட்டோம்’’ என்று ஆரம்பித்தவள், இறுதியாக நாவலூர் நாவல் மரத்தடி பிள்ளையாரை தரிசித்து அங்குள்ள பாடல் மூலம் சதுரகிரி நோக்கிப் போய்க் கொண்டிருப்பது வரை சொல்லி முடித்தாள்.
ரஞ்சித்திடம் பயங்கர பிரமிப்பு!
அவன் வந்த கால் டாக்சி டிரைவர் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு காரில் இருந்தபடியே பார்த்தான்.
‘‘என்னப்பா... பிரமிப்பா இருக்கா?’’
‘‘ஆமாம்! எனக்கு ஜோசியத்துல நம்பிக்கையும் ஈடுபாடும் உண்டு ப்ரியா. அதனால நீ சொன்னதைக் கேட்கவும் ஸ்டன்னாயிட்டேன். எனக்கு நம்ம நாடு, முன்னோர்கள் மேல எல்லாம் ஒரு மதிப்பும் உண்டு. நிச்சயமா இந்த காலப் பலகணி விஷயம் ஒரு அசாதாரண உண்மையா பொக்கிஷமாதான் இருக்கணும். இதை டெல்லிகாரன் எந்த நிலைலயும் கொண்டு போக விடக்கூடாது.
யு நோ... யுவான் சுவாங்னு ஒரு சீன யாத்ரீகர். காஞ்சி
புரம், மாமல்லபுரம்னு வந்துட்டுப் போகும்போது நம்ம களரி வித்தை, வர்ம வித்தை, சிலம்பு வித்தை, யோக வித்தை, அப்புறம் பீதாம்பர ஜாலம், மகேந்திர ஜாலம்னு பல சங்கதிகளை மூட்டை கட்டி எடுத்துட்டு போயிட்டாரு. இன்ஃபாக்ட், ‘குரு வழிபாடு’ங்கறது உலகத்துலயே நம்ப இந்தியாவில மட்டும்தான். யுவான் சுவாங்குக்கு அப்புறம் போதி தர்மர் மாதிரி ஆட்கள் நம்ம விஷயங்களை அங்க கொண்டு போகவும், அங்கேயும் குரு வழிபாடு, குரு வணக்கம்லாம் உருவானது. சுருக்கமா சொல்லப் போனா எல்லா விஷயத்துலயும் உலகத்துக்கே மோஸ்ட் சீனியர் நாமதான். அதுலயும் தமிழர்களான நாமதான் மோஸ்ட் மோஸ்ட் மோஸ்ட் சீனியர்ஸ்...’’
- ரஞ்சித் உணர்ச்சிமயமாகி எங்கெங்கோ போய் விட்டான். மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த வள்ளுவர் நெருங்கி வந்தார்.
‘‘தம்பி... உங்க பேச்ச வெச்சே உங்கள என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது. கவனமா உங்க கடமையைச் செய்யுங்க. எங்களுக்கும் நேரமாகிடுச்சு. நாளைக்கு நாங்க சதுரகிரில இருந்தாகணும். பூச நட்சத்திரம் வேற வந்துடுச்சு. இந்த நட்சத்திர காலத்தில திட்டமிட்டு செயல்பட்டா எல்லாம் சுலபமா முடியும். அந்த நட்சத்திரத்தோட கால அளவு இருபத்தி மூணு மணி நேரம், பதினாறு நிமிடங்கள்தான்...’’
அவர் துரிதப்படுத்துவதை ரஞ்சித் புரிந்து கொண்டான்.
‘‘நல்லதுங்கய்யா! நான் எவ்வளவு சீக்கிரமா இந்த ெசல்போனுக்குள்ள இருக்கற விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கறேன். நீங்க உங்க பயணத்தைத் தொடருங்க...’’ என்றான்.
அடுத்த சில நொடிகளில் இருவர் காரும் அவரவர்க்கான திசைகளில் சீற ஆரம்பித்தன.
‘‘அய்யா! மதுரைக்குப் போய் இரவு தங்கிட்டு காலைல கிளம்பலாம். கொஞ்சம் ஓய்வும் ரொம்ப அவசியம்னு நினைக்கறேன்’’ என்ற வர்ஷனை ‘சரி’ என்பது போலப் பார்த்தார் வள்ளுவர். காரும் நான்கு வழிப்பாதையில் மதுரை நோக்கிச் சீறியது.
உள்ளே ப்ரியா, வள்ளுவரிடம் அந்தப் பாடல் குறித்து விவாதிக்க ஆரம்பித்தாள். ‘‘அய்யா... பிள்ளையார் கோயில் பாட்டை வெச்சு நீங்க சதுரகிரிக்குப் போகணும்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’
‘‘அந்தப் பாட்டை வெச்சு மட்டும் இல்லம்மா! அந்தக் கோயில்ல கோபுரத்துல நாலு பக்கமும் சின்னதா சித்தர்கள் சிலாரூபமும் இருந்தது. நாலு பக்கமும் சித்தர்கள்னாலே அது சதுரகிரியைத்தான் குறிக்கும். அங்க போய்ட்டு நாம நம்ம வசம் உள்ள ஏட்டோட மற்ற பக்கங்களைப் பார்த்தா, நமக்கு வழி தானா தெரியும்...’’
‘‘அப்ப, இந்த மாதிரி சிற்பங்கள பார்த்தும் புரிஞ்சிக்கணுமா?’’
‘‘ஆமாம்மா! சிற்பங்களுக்கு பின்னாலயும் ரகசியம் இருக்கு. எழுத்துல எழுதி புரிய வைக்கறது ஒரு விதம். படங்கள் மூலமா உணர்த்துவது ஒரு விதம். சிற்ப பரிபாஷைல உணர்த்துவது இன்னொரு விதம்.’’
‘‘அப்ப இந்த ஏட்டை வெச்சு மட்டும் எதுவும் செய்ய முடியாது இல்லையா?’’
‘‘ஏடு பாதி... கூடு பாதிம்மா...’’
‘‘கூடா?’’
‘‘ஆமாம், இந்த உடம்பு ஒரு கூடுதானே?’’
‘‘உடம்பு ஒரு கூடுதான்... இது எப்படி?’’
‘‘காலப் பலகணியை நெருங்கும்போது உனக்கு யாரும் எதுவும் சொல்லத் தேவையே இல்லாம எல்லாம் புரிஞ்சிடும்மா...’’
வள்ளுவர் சொன்னதை ஆமோதிப்பது போல வெளியே வானில் பெரிதாய் இடி சப்தம். மழை வீச்சலாகப் பொழியத் தொடங்கியது. காரில் எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்த நேரம், மிகச் சரியாக செய்தி நேரமாக இருந்தது. வங்கக் கடலில் புயல் என்கிற தகவலும் தெரிய வந்தது.
‘‘அய்யா! இந்த மழைல நாம அந்தப் பலகணியை நெருங்கிடுவோமா?’’ என்று சற்று தளர்ச்சியோடு கேட்டான் வர்ஷன்.
‘‘தம்பி... எவ்வளவோ தடைகள்! ஆனாலும் நாம போய்க்கிட்டேதான் இருக்கோம். வழியிலயே உன் நண்பனைப் பாக்க முடிஞ்சதும் ஒண்ணும் தற்செயல் இல்ல.
நாம நமக்கே தெரியாம இயக்கப்பட்டுக்கிட்டு இருக்கோம். ஆகையால நாம நிச்சயமா பலகணியை நெருங்கி அதை எடுக்கப் போறது திண்ணம். ஏன் நான் இன்னமும் உயிரோட இருக்கேன்ங்கறதுக்கு விடையும் எனக்கு மலைல
கிடைச்சிடும்மா...’’
- வள்ளுவர் மிகவே உணர்ச்சி வயப்பட்டு பதில் சொல்ல,
அவரது கவனத்தைத் திருப்பியது கணபதி சுப்ரமணியனிடம் இருந்து வந்த அலைபேசி அழைப்பு.
‘‘அய்யா... எல்லாம் நல்லா போய்க்கிட்டு இருக்கா?’’
‘‘போய்க்கிட்டு இருக்குங்க. இரவு மதுரைல தங்கிட்டு காலைல கிளம்பிடுவோம். இலக்கு சதுரகிரி மலைங்க. அங்கதான் எங்கேயோ பலகணி இருக்குதுங்க.’’
‘‘சதுரகிரி மலைக்கா அப்ப போறீங்க?’’
‘‘அதுதான்யா சுவடில வந்த குறிப்புப்படி உள்ள இடம்...’’
‘‘நான் அங்க போயிருக்கேன். ஆனா பாதியில திரும்பும்
படியா அப்போதைய சூழ்நிலை அமைஞ்சிடுச்சு...’’
‘‘அப்ப நீங்க இப்ப எங்ககூட வந்தா எங்களுக்கு உதவியா இருக்குமா?’’
‘‘அது தெரியாது... ஆமா பலகணி உள்ள இடம் துல்லியமா தெரிஞ்சிடுச்சா?’’
‘‘அது எப்படி தெரியும்... ஆனா வழி
மாறாம போய்க்கிட்டு இருக்கோம்!’’
‘‘இங்க கடுமையான மழை வள்ளுவரே! அனேகமா இந்த மழைல சென்னை சர்க்கரை மாதிரி கரைஞ்சுகூட போயிடலாம்... வானிலை ஆராய்ச்சி மையத்துல இருந்து தகவல் வந்தது. வரிசையா ஏழு புயல்கள் இருக்குதாம்... பஞ்சாங்கமும் ஒத்து ஊதிக்கிட்டு இருக்கு. இப்ப பலகணி கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும்...’’
- கணபதி சுப்ரமணியன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த போன் தொடர்பு சட்டென்று கட்டானது. ஓடியபடி இருக்கும் காரின் முன்னே பெரும் இடி ஒன்று விழுவது, மூன்று பேருக்கும் பளிச்செனத் தெரிந்தது.

‘‘என் மனைவி ரொம்ப செலவாளி...’’
‘‘நிஜமாவா சொல்றீங்க..?’’
‘‘ஆமாம்! தினமும் ஊர்வம்பை விலைக்கு வாங்குவாள்னா பாருங்களேன்...’’

"போன் தொடர்பு சட்டென்று கட்டானது. ஓடியபடி இருக்கும் காரின் முன்னே பெரும் இடி ஒன்று விழுவது, மூன்று பேருக்கும் பளிச்செனத் தெரிந்தது."

‘‘மனைவி காணாம போய் ஒரு வாரம் கழிச்சு இன்னிக்குத்தான் உங்க முகத்துல சோகம் தெரியுது...’’
‘‘தெரியாதா பின்னே? இன்னிக்கு என் மனைவி திரும்ப வந்துட்டாளே!’’

‘‘ஊழல் பேர்வழிகளைக் கட்சில சேர்க்க மாட்டேன்னு தலைவர் சொல்லிட்டாரு...’’
‘‘அப்ப தலைவரே கட்சில இருக்க மாட்டாரே..!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

- தொடரும்...