கமல் தந்த சந்தோஷம்... ரஜினி தந்த அட்வைஸ்!



நான் உங்கள் ரசிகன் 11
மனோபாலா

கமல்ஹாசன் வீட்டு காம்பவுண்டுக்குள்ள போன வாரம் நுழையுறேன். அந்த இனிய சந்திப்பை அமைச்சுக் குடுத்தவர் நாசர். கிட்டத்தட்ட பதினாலு வருஷத்துக்கு அப்புறமா நான் கமலை சந்திக்கறேன். என் வீடு தி.நகர்ல இருக்கு. நடந்து போனாலே பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள ஆழ்வார்பேட்டை போயிடலாம். அப்படியிருக்க, ஏன் நான் கமலை பதினாலு வருஷமா பார்க்காம இருந்தேன்? அந்தக் காரணம்... ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!

14 வருஷத்துக்கு முன்னாடி ஃபெப்சிக்கு எதிரா ‘படைப்பாளிகள் சங்கம்’னு ஒரு அமைப்பை உருவாக்கினார் பாரதிராஜா. பாலசந்தர்ல இருந்து இயக்குநர்கள் நிறைய பேரு படைப்பாளிகள் பக்கம் இருந்தோம். கமல் அப்போ ஃபெப்சிக்கு ஆதரவா இருந்தார். இதனால எல்லா இயக்குநர்களும் கமலுக்கு எதிரா திரும்பினாங்க. இந்த எதிர்ப்பைத் தெரிவிக்க எல்லா இயக்குநர்களும் கையெழுத்திட்டு கமலுக்கு ஆளுக்கொரு பூங்கொத்து அனுப்பி வைப்போம்னு இயக்குநரும் நடிகருமான ஒருத்தர் ஐடியா குடுக்கறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன கமல் படத்தோட இசை வெளியீட்டுக்குக் கூட அவர்தான் காம்பியரிங் பண்ணியிருந்தார். அவர் யாருன்னு இன்னும் புரியாதவங்களுக்கு அப்புறமா சொல்றேன். பூங்கொத்து ஐடியாவுக்கு எல்லாரும் ஓகே சொன்னாங்க.

இப்படி கிட்டத்தட்ட 200 பொக்கே அனுப்பி வைக்கிறாங்க. நானும் சந்தானபாரதியும், ‘‘நாங்க கமல் வீட்லயே வளர்ந்தவங்க. அதனால பூங்கொத்துல கையெழுத்துப் போட மாட்டோம்’’னு சொன்னோம். யாரும் கேக்கறதா இல்லை. ஆனா இந்த ஐடியாவைக் குடுத்தவர், பின்னாளில் கமல் மனசுல இடம் பிடிச்சிட்டார். பாரதிராஜா, பாலசந்தர் எல்லாருமே கமலுடன் சமாதானமாகிட்டாங்க. ஆனா, என்னை விட்டுட்டாங்க. நானும் யார் யார்கிட்ட எல்லாமோ சொல்லிப் பார்க்குறேன், கமலை சந்திச்சுப் பேசிடலாம்னு. ஆனா, ஒண்ணும் நடக்கல. அவரோட புறக்கணிப்பு எனக்கு வேதனையாகிடுச்சு.

இப்போ கடைசியா நாசர் மூலம் நல்ல சந்தர்ப்பம் கிடைச்சது. சின்னதொரு பயத்தோடதான் கமல்கிட்ட பேச ஆரம்பிச்சேன். ஆனா, அவர் பழசு எதையும் மனசுல வைக்காம சகஜமா பேசினார். எல்லா விஷயத்தையும் பகிர்ந்துக்கிட்டார். எனக்கு சந்தோஷம் புடிபடல. கிட்டத்தட்ட என் பொறந்த வீட்டுக்குள்ள நுழைஞ்ச சந்தோஷம். பொதுவாகவே என்கிட்ட ஒரு பாலிஸி உண்டு. இந்த இண்டஸ்ட்ரியில யாருமே எனக்கு எதிரியா இருக்கக் கூடாதுனு நினைக்கறவன் நான். மறுபடியும் இப்படி ஒரு பாசமிகு இணைப்பை ஏற்படுத்திக் குடுத்த நாசருக்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லியாகணும்.

சரி, போன வாரம் பேசின விஷயத்துக்கு வருவோம். ‘ஊர்க்காவலன்’ படத்துக்கு அப்புறம் சத்யஜோதி பிலிம்ஸுக்காக நான் இயக்க இருந்த  ‘கிழக்கு வாசல்’ படத்தை ஆர்.வி.உதயகுமார்கிட்ட கொடுத்து ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறாங்க.  இந்தப்  படத்தோட பாடல் கம்போஸிங்கிற்காக இளையராஜாகிட்ட ஆர்.வி.உதயகுமார் போனதும்,  ‘‘இந்தக் கதைக்கு மனோபாலா ஏற்கனவே நல்ல பாடல்கள் வாங்கி வச்சிருக்கார். அதையே  பயன்படுத்தினா சரியா இருக்கும்’’னு ராஜா சொல்லிட்டார். நான் இந்திப் படம் இயக்குறது கன்ஃபார்ம் ஆச்சு.



அப்போ சத்யஜோதி தியாகராஜன் சாரோட அப்பா கோவிந்தராஜ் என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார். ‘‘இந்தியில படம் பண்ணப் போனீங்கன்னா, இங்கே நீங்க உங்க வாழ்க்கையைத் தொலைக்க வேண்டியிருக்கும். தமிழ் மாதிரி ஒரு படத்தை மூணு மாசத்துல முடிக்கறதெல்லாம் அங்க நடக்காது. நாளாகும். அதுக்குள்ள இங்க நம்மளை மறந்துடுவாங்க. ஸ்ரீதரை வைத்து பல இந்திப் படங்கள் தயாரிச்ச அனுபவத்தை  வச்சி சொல்லுறேன்’’னு அவர் அறிவுரை சொன்னார். எனக்கு இதை ஒரு சின்ன சவாலா எடுத்து பண்ண தோணுச்சு. ‘‘அப்பா, நம்ம ‘கிழக்கு வாசல்’ முடியறதுக்குள்ள என்னோட இந்திப் படம் ரிலீஸ் ஆகிடும்’’னு அவர்கிட்டயே சொன்னேன்.

‘என் புருஷன்தான் எனக்குமட்டும்தான்’ படத்தை இந்தியில பண்ணும்போது ‘மேரா பதி சிர்ஃப் மேரா ஹை’னு டைட்டில் வச்சோம். இந்தப் படத்தை அங்கே தயாரிச்சது என்னோட தோழி ஜெயசுதா. ‘சுஹாசினி கேரக்டருக்கு இந்தியில சரியான சாய்ஸ் யாரு?’னு அலசி ஆராய்ஞ்சதுல இந்தி நடிகை ரேகா பொருத்தமா இருந்தாங்க. அவங்க கதையைக் கேட்டு முடிச்சதும், ‘தமிழ்ல ரேகா பண்ணின கேரக்டரை நான் பண்றேன். அதுலதான் ஸ்கோப் நிறைய இருக்கு’ன்னாங்க. ‘சுஹாசினி கேரக்டருக்கு நீங்கதான் சரியான சாய்ஸ்’னு அவங்களை கன்வின்ஸ் பண்ணி சம்மதிக்க வச்சிட்டோம். ஜிதேந்திரா ஹீரோ. ரேகா கமிட் ஆகிட்டாங்க.

இங்கே ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா செய்த கேரக்டர்ல, என் வழக்கமான ஹீரோயினான ராதிகாவை நடிக்க வச்சேன். ‘வெல்கம் டு மும்பை’னு இந்தி ரேகா எனக்கு பொக்கே கொடுத்தாங்க. அதை வாங்கிட்டு என்னோட ஹோட்டலுக்கு வந்தா, ரூம் வாசல்ல இன்னொரு பெரிய பொக்கே. அது ரஜினிகாந்த் அனுப்பினது. ‘வெல்கம் டு மும்பை’னு அவரும் அனுப்பியிருந்தார். மும்பையில ரஜினி எங்க தங்கியிருக்கார்னு கண்டுபிடிச்சு, அவர்கிட்ட பேசினா, ‘வாங்களேன் பேசுவோம்’னார்.

‘‘மனோபாலா, தமிழ்ப்படம் வேற; இந்திப்படம் வேற. இங்கே உங்க ஸ்பீடுல பாதியில்ல... கால் வாசி இருந்தாலே போதும். அதனால இந்திப் படத்தை நீங்க இந்திப்பட மனநிலையோட டைரக்ட் பண்ணுங்க’’னு ஆலோசனை சொன்னார். அதன் பிறகு ஐதராபாத்தில் ஷூட்டிங். அங்கேயே 80 சதவீத படப்பிடிப்பை முடிச்சிட்டேன். ஆனா மிச்சமுள்ள 20 சதவீதத்தை மும்பையில முடிக்க எனக்கு 19 ஷெட்யூல் தேவைப்பட்டுச்சு. என்னோட வொர்க்கிங் ஸ்டைல் ரேகாவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.

ரேகாகிட்ட ஒரு ப்ளஸ் என்னன்னா, ஒரு கேரக்டருக்கு அவங்க செட் ஆகிட்டாங்கன்னா, அந்த கேரக்டர் நெத்தியில வைக்கற பொட்டுல இருந்து, பட்டுச்சேலைக்கு மேட்ச் ஆகற செருப்பு வரை எல்லாத்தையும் அவங்களே தேர்வு பண்ணி, ஸ்பாட்டுக்குக் கொண்டு வந்துடுவாங்க. அவங்க பர்ச்சேஸ் பண்ணின ஒவ்வொரு பொருளுக்குமான பில் கம்பெனிக்கு வந்துடும். அவ்வளவு ஏன், அந்த டிரஸ்ஸை அயர்ன் பண்ணி, அதை பாதுகாப்பா எடுத்துட்டுப் போற வேலையையும் அவங்க ஆள்தான் பண்ணுவாங்க. க்ளைமேக்ஸ் சீன்ல ஒரு பட்டுப்புடவை கட்டியிருப்பாங்க. அந்தப் புடவைக்காக 8 பட்டுப்புடவையை வெட்டி ஒட்டி ஒரே புடவையா ஆக்கியிருந்தாங்க. ‘செலவு வச்சிட்டாங்க’னு சொல்லல. அவ்வளவு தூரம் கேரக்டர்ல ஈடுபாடு காட்டுவாங்க. ஐதராபாத் ஷெட்யூல்ல க்ளைமேக்ஸ் எடுக்கறதுக்கு முன்பே, ரேகா என்னோட நல்ல தோழி ஆகிட்டாங்க. நீள நீளமான இந்தி டயலாக்கை ஒரே டேக்ல ராதிகா சொல்றதைப் பார்த்து ரேகாவும் ஆச்சரியப்பட்டிருக்காங்க.

அன்னிக்கு க்ளைமேக்ஸ் ஷூட். ஹீரோ ஜிதேந்திரா, ரேகா உள்பட 14 ஆர்ட்டிஸ்டுகள் இருக்காங்க. ஷாட் போயிட்டிருக்கும்போது சின்னதா மழைத் தூறல் போட்டுச்சு. ‘‘அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க ரேகா. மழை நின்னதும் உங்க ஷாட்டை எடுத்திடுறேன்’’னு சொன்னேன். ‘‘ஓகே! நோ ப்ராப்ளம். அப்படீன்னா நான் என் கார்லேயே ஐதராபாத்தை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு வர்றேன்’’னு சொல்லிட்டு கிளம்புறாங்க.

அரை மணி நேரம் ஆச்சு. ஒரு மணி நேரமாச்சு... அப்படியே சாயங்காலம் ஆகிடுச்சு. ஆனா, ரேகாவை காணல. அப்பல்லாம் செல்போன் கிடையாதே... டக்குனு போன்ல புடிக்கறதுக்கு! குழம்பிப் போய் நிக்குறேன். இந்தப் பக்கம் திரும்பினா ஜிதேந்திரா உள்பட எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் சீட்டு விளையாடிக்கிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டிருக்காங்க.. ஒரு படைப்பாளியோட மனநிலை எப்படி இருக்கும் பாருங்க! சரி, எதுக்கும் ரேகா தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் பண்ணி கேட்டுடலாம்னு போன் பண்ணினா, அவங்க அசிஸ்டென்ட் போன் எடுத்தான். அவன் சொன்ன பதில் அவ்வளவு ஷாக்கிங்!

"இந்த ஐடியாவைக் குடுத்தவர், பின்னாளில்  கமல் மனசுல இடம் பிடிச்சிட்டார். பாரதிராஜா, பாலசந்தர் எல்லாருமே கமலுடன்  சமாதானமாகிட்டாங்க. ஆனா, என்னை விட்டுட்டாங்க!"
(ரசிப்போம்...)

தொகுப்பு: மை.பாரதிராஜா
படங்கள் உதவி: ஞானம்