விடுப்பு
நாமக்கல் பரமசிவம்
அலுவலகம் புறப்பட்ட கணவன் சாரதியிடம், ‘‘ஒரு மாசம் லீவு போட்டுடுங்க!’’ என்றாள் மனோன்மணி.
‘‘ஒரு மாசம் எதுக்கு?’’
‘‘என்னங்க கேள்வி இது? நம்ம பொண்ணுக்குக் கல்யாணம்... வர்ற புதன்கிழமை நிச்சயதார்த்தம். மாங்கல்யத்துக்குக் கொடுக்கணும், பத்திரிகை அடிக்கணும், அதைக் கொடுத்து முடிக்கவே ரெண்டு வாரம் போல ஆகும். பட்டு எடுக்க காஞ்சிபுரம், மத்த துணிமணிகளுக்குக் கோயமுத்தூர்னு போக வேண்டியிருக்கு. அப்புறம், நாள் விருந்து, கல்யாணம், வரவேற்பு, சம்பந்தி விருந்து எல்லாம் இருக்கு. ஒரு மாச லீவு எதுக்குனு கேட்டுட்டீங்களே!’’ - மூச்சு வாங்கியது மனோன்மணிக்கு. அப்போது வேலைக்காரி கமலம் வந்து நின்றாள்.
‘‘அம்மா, ரெண்டு நாளு லீவு வேணும்ங்க!’’
‘‘எதுக்கு கமலா?’’ என்றாள் மனோன்மணி.
‘‘என் பொண்ணுக்குக் கல்யாணம்னு சொல்லியிருந்தேனேம்மா!’’
‘‘அதுக்கு ரெண்டு நாள் லீவு போதுமா கமலா?’’
‘‘போதும்மா. பக்கத்துல காந்தமலை முருகன் கோயில்ல பொண்ணுக்கு மாப்பிள்ளை மஞ்சள் கயிறு கட்டினா கல்யாணம் முடிஞ்சுது. அடுத்த நாளே குலதெய்வம் கோயிலுக்குப் போய் வந்து சாந்தி முகூர்த்தம் வச்சிட்டா என் கடமை தீர்ந்தது. நீங்க சம்பளத்தோட லீவு போடலாம். நாங்க லீவு போட்டா சம்பளம் வராதுங்களே. ரெண்டு நாள் லீவு போதுங்க!’’ என்று சொல்லி நகர்ந்தாள் கமலா.
|