மத்தவங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்..?



சென்னை குன்றத்தூருக்கு அருகில், கோவூரில் உள்ள அந்த வீட்டின் சூழலே வித்தியாசமாக இருக்கிறது. கால்களை விரித்தபடி கட்டிலில் அமர்ந்திருக்கிறார் அப்பாஸ். வலது கை உயராது. சிரமப்பட்டு உடலை வளைத்தால் இடது கை லேசாக மேலுயரும். தேவையான அத்தனை பொருளும் இடது கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. சிறிய கப் உள்பட. அதில் பாதி நிறைந்திருக்கிறது சிறுநீர். ஒரு நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருக்கிறார் மயில். இடுப்புக்குக் கீழ் இயக்கமில்லை. செல்வகுமார், பிடிமானத்தோடு சில அடிகள் நடக்கிறார். லேசான தடுமாற்றமே ஆளைச் சாய்த்துவிடுகிறது. மூவரும் உறவினர்கள் இல்லை. பால்ய நண்பர்களும் இல்லை. மூவரையும் இணைத்தது  ‘மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி’ எனப்படும் தசைச்சிதைவு நோயும், அதனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும்..!

தசைச்சிதைவு நோய், மரபுக்கூறுகளினால் உருவாகும் ஒரு கொடூரம். ‘டிஸ்ட்ரோஃபின்’ என்ற புரோட்டின் குறைபாட்டால் உருவாகும் இது, அசையும் தசைகளை இறுகவோ, செயலிழக்கவோ செய்துவிடும். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எந்த வயதிலும் இந்த நோயின் தாக்கம் தொடங்கலாம். மெல்லிய கால் தடுமாற்றத்தில் தொடங்கி படிப்படியாகப் படுக்கையில் தள்ளிவிடும். நகரவோ, அசையவோகூட முடியாத அளவுக்கு முடக்கியும் விடும். பிசியோதெரபி போன்ற சிகிச்சைகள் மூலம் கொஞ்சம் வலி குறைக்கலாம். அவ்வளவுதான். 3000 இந்தியர்களில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்.

நோயின் தாக்கம் ஒரு பக்கம், பராமரித்து சோர்ந்து சுடுசொல் பேசும் உறவுகளின் புறக்கணிப்பு ஒரு பக்கம் என இவர்கள் படும் அவஸ்தை கற்பனைக்கு அப்பாற்பட்டது. இப்படியான பாதிப்பு களுக்கு உள்ளான அப்பாஸ், மயில், செல்வகுமார் மூவரும் ஃபேஸ்புக் வழியே நண்பர்களானார்கள். தங்கள் கசப்புகளையும் வலிகளையும் பகிர்ந்து கொண்டவர்கள், ஒரு கட்டத்தில் குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பாமல் ஒருவருக்கொருவர் கை கோர்த்து தனித்து வாழத் திட்டமிட்டார்கள். கூடவே இன்னொரு உன்னதமான நோக்கம்... ‘தசைச்சிதைவு நோய் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்!’



சென்னையைச் சேர்ந்த அப்பாஸும், நெல்லையைச் சேர்ந்த மயிலும், வந்தவாசியைச் சேர்ந்த செல்வகுமாரும் அப்படித்தான் இந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்பாஸுக்கு 31 வயது. 18 வயது வரை இயல்பாகத்தான் இருந்தார். அதன்பிறகு மெல்லிய கால் இடறல்... படிப்படியாக உடல் முடங்கியது. மாடியில் இருந்து கீழே விழுந்ததில் முதுகுத்தண்டும் அடிபட, படுக்கையே நிரந்தரமாகி விட்டது. ‘‘2 அக்கா, 2 அண்ணன், 1 தங்கைன்னு பெரிய குடும்பம். மூத்த அக்கா பாத்திமாவுக்கு இதே பிரச்னை இருந்துச்சு. ஆனா, அது ‘மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி’ன்னு கண்டுபிடிக்கிற அளவுக்கு யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. நல்லா ஓடியாடி விளையாடிய புள்ள திடீர்னு கை, கால் முடங்கி படுக்கையில விழுந்திடுச்சு. 13 வயசுல இறந்தும் போச்சு.

எனக்கு சரியா படிப்பு வரலே. ஆறாவதோட நிறுத்திட்டு சென்னைக்கு வந்து மாமாவோட ஃபேன்சி ஸ்டோர்ல வேலை பாத்தேன். நல்லாத்தான் இருந்தேன். ஒருநாள் மேல் ஷெல்ஃப்ல இருந்த நோட்டை எடுக்க முயற்சி செஞ்சப்போ கை வரலே. முதுகு இறுகின மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் கால் கொஞ்சம் இழுத்துச்சு. எங்க வீட்டுக்குப் பக்கத்தில ஒரு மாற்றுத்திறனாளி இருந்தார். நான் அவரைக் கிண்டல் பண்றதுக்காக இழுத்து இழுத்து நடக்கிறேன்னு வீட்டுல திட்டினாங்களே ஒழிய, என் பிரச்னை புரியலே. அவங்களுக்கு புரிய வச்ச பிறகு மருத்துவமனைக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. அங்க தசையை எடுத்து பரிசோதிச்சுட்டு, ‘இது மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி... குணப்படுத்த முடியாது’ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க.

அண்ணன்களோட சேர்ந்து ஒரு ஸ்டேஷனரி கடை ஆரம்பிச்சேன். வீடு முதல் தளத்துல இருந்தது. தினமும் வீட்டுக்குப் போறது சவாலான வேலை. ‘கீழ்த்தளத்துல வீடு பாரு’ன்னு நான் சொன்னதை யாரும் பெரிசா எடுத்துக்கலே. ஒருநாள் மாடியில இருந்து கீழே விழுந்துட்டேண். பிறகு சரியா எழுந்து நடமாடவே முடியலே. எல்லாத்துக்கும் ஒரு ஆள் தூக்கித்தான் வைக்கணும். நிறைய வைத்தியம் செஞ்சாச்சு. ஏகப்பட்ட செலவும் ஆச்சு. நெல்லையில ‘மயோபதி’ன்னு தசைச்சிதைவு நோய்க்குன்னே ஒரு மருத்துவமனை இருக்கு. அங்கேயும் போய் சிகிச்சை எடுத்தோம். பெரிசா முன்னேற்றமில்லை. நாளாக, நாளாக நிலை மோசமாகிட்டே வந்துச்சு. பாத்ரூம் போறது நரகம் போற மாதிரி இருந்துச்சு. தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். அதுக்குக் கூட கை, கால்கள் ஒத்துழைக்கலே.

எல்லாரும் மனுஷங்கதானே... எத்தனை நாள் சகிச்சுக்க முடியும்? வீட்டில கொஞ்சம் சுடுசொற்கள் வரத் தொடங்கிடுச்சு. ஒரே ஆறுதல் ஃபேஸ்புக்தான். ‘அன்புடன் உங்கள் அப்பாஸ்’னு (Anbudan Ungal Abbas) ஒரு பேஜ் ஓப்பன் பண்ணி இந்த நோயைப் பத்தி எழுதுவேன். குமரகுரு, செல்வகுமார் சார், மயில் சாரெல்லாம் ஃபேஸ்புக் மூலமா நண்பர்கள் ஆனாங்க.  

நாலு பேருக்குமே நிறைய கசப்பான அனுபவங்கள். குடும்பத்தார் தொடக்கத்திலேயே கொஞ்சம் விழிப்புணர்வா இருந்திருந்தா இந்த அளவுக்கு நிலை மோசமாயிருக்காது. கொஞ்சம் தெம்பா இருந்திருப்போம். ‘மத்தவங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்... இனியும் குடும்பத்துக்குச் சுமையேத்தாம, நாமளே இணைஞ்சு ஒரு வீட்டை எடுத்துக்கிட்டு தனியா போயிட்டா என்ன?’னு யோசிச்சோம். சகிப்புத்தன்மை உள்ள ரெண்டு பராமரிப்பாளர்களைப் போட்டா அவங்க உதவி செய்வாங்க. அப்படியே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். காலமும், உடம்பும் ஒத்துழைச்சா, காலப்போக்குல தசைச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டவங்களுக்குன்னே ஒரு இல்லத்தை உருவாக்கிடலாம்னு திட்டமிட்டோம். குடும்பத்துல கொஞ்சம் பணத்தை வாங்கி வீட்டைப் புடிச்சு குடி வந்தாச்சு...’’ என்று சிரமமாக சிரிக்கிறார் அப்பாஸ். மயில், ஒரு முன்னுதாரண மனிதர். கவிதைகள், கட்டுரைகள் எழுதுகிறார். டிப்ளமோ எஞ்சினியரிங் படித்திருக்கிறார். தசைச்சிதைவு நோய் பற்றி ஒரு புத்தகமும் எழுதி வருகிறார்.



‘‘20 வயசு வரைக்கும் நல்லா சைக்கிள் ஓட்டிக்கிட்டிருந்தேன். படிப்படியா முடக்கிடுச்சு. ஆனாலும் எல்லாத்துக்கும் மத்தவங்களை எதிர்பார்க்கக்கூடாதுன்னு கடும் முயற்சி செஞ்சு நானே எழுந்திருக்க பழகிட்டேன். தசைச்சிதைவு நோய் பத்தி பல மூடநம்பிக்கைகள் இருக்கு. ‘குணப்படுத்தவே முடியாது; அப்படியே விட்டுட்டா 35, 40 வயசுல இறந்திடுவாங்க’ன்னும் சொல்வாங்க. எனக்கு 43 வயசாச்சு. நல்லாத்தான் இருக்கேன். குணப்படுத்தவே முடியாதுங்கிறது உண்மையா இருக்கலாம். ஆனா, பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கிறதால வலி குறைக்கலாம். தவிர, சில வசதிகளை செஞ்சு தந்தா, நிலைமை மோசம் ஆகாம தடுக்கலாம். இதையெல்லாம் சமூகத்துக்குக் கொண்டு போய் சேக்கணும்...’’ என்கிறார் மயில்.     

செல்வகுமாருக்கு சினிமாவில் எடிட்டராவது கனவு. சென்னை திரைப்படக் கல்லூரியில் டி.எஃப்.டெக் படித்திருக்கிறார். ஆனால் கனவை நோய் முடக்கிவிட்டது. இவர்களுக்கு இரண்டு பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள். சமையலும், துணி வெளுப்பதும் செல்வியின் வேலை. சித்திரை சேகர் தூக்கி வைக்க, படுக்க வைக்க, டாய்லெட்டில் கொண்டு போய் விட. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இப்போது படிப்படியாக குறைந்து விட, நண்பர்கள் செய்யும் உதவிகளால் அடுப்பு எரிகிறது.

‘‘டாய்லெட் போறதுக்குக் கூட ஒருத்தர் துணை வேண்டியிருக்கு.  அப்படி தூக்கும்போது தவறி விழுந்து உடம்புல நிறைய காயங்கள் இருக்கு. அந்தக் கொடுமைக்காக சாப்பாடு, தண்ணியைக் குறைச்சுட்டோம். ஆனா, அதனால வயிறு இறுகி மேலும் கொடுமையாயிடுச்சு. ஒருநாள், பராமரிப்பாளர்கள் வரலே. தூக்கி படுக்க வைக்க ஆளில்லை. நைட் ரெண்டு மணி வரைக்கும் அப்படியே உக்காந்திருந்தோம். அதுக்குப் பிறகு மாங்காடு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன் பண்ணி எங்க நிலைமையைச் சொன்னோம். எஸ்.ஐயும், ரெண்டு கான்ஸ்டபிளும் வந்து தூக்கிப் படுக்க வச்சாங்க. பசிக்குதுன்னு சொல்ல பயமா இருந்துச்சு. அதனால, பட்டினியாவே தூங்கினோம்’’ என்று புன்னகைக்கிறார் அப்பாஸ். அந்தப் புன்னகைக்குள் வாழ்நாள் துயரம் பொதிந்திருக்கிறது.

நோயின் தாக்கம் ஒரு பக்கம், பராமரித்து சோர்ந்து சுடுசொல் பேசும் உறவுகளின் புறக்கணிப்பு ஒரு பக்கம் என இவர்கள் படும் அவஸ்தை கற்பனைக்கு அப்பாற்பட்டது.  

- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்