இனம்
துடுப்பதி ரகுநாதன்
ரொம்ப காலமாய் போலீஸுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது அந்தக் கொள்ளை கும்பல். வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களைக் கட்டிப் போட்டுத் திருடுவது அவர்களின் வாடிக்கை. ஒரு சனிக்கிழமை இரவு 11 மணிக்கு, பிருந்தாவன் வீதியில் ஒரு வீட்டில் அவர்கள் புகுந்திருப்பதாக போலீஸுக்கு தகவல் வந்தது. அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. பணம், நகை என மூட்டை கட்டிக்கொண்டு வெளியே வந்த கொள்ளையர்கள் ஆறு பேரும் கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்.
இதில் இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஆச்சரியம்... அதே தெருவில் இன்று பெரிய பெரிய பதவியில் இருக்கும் வசதி படைத்த அரசியல்புள்ளிகளின் வீடுகள் தனித்தனியாக இருந்தன. திருடுவதற்கு வசதியாக அமைந்த அந்த இடங்களை எல்லாம் விட்டு விட்டு, நெருக்கம் நெருக்கமாக வீடுகள் இருக்கும் இந்தக் குடியிருப்புப் பகுதியில் திருட வந்தது ஏன்? கும்பல் தலைவனிடம் இதைக் கேட்டார்... ‘‘என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? என்ன இருந்தாலும் அவங்க எங்க இனம் சார்! பணத்துக்காக மக்களை நாங்க ஒரு விதத்தில் ‘அப்ரோச்’ செய்றோம்... அவங்க ஒரு விதத்தில் ‘அப்ரோச்’ செய்யறாங்க. மற்றபடி எல்லாரும் ஒண்ணுதான்!’’ - பளிச்சென்று இருந்தது அந்த பதில்!
|