அரசு ஊழியர்களுக்கும் திறமையை வைத்தே சம்பள உயர்வு!
சம்பள கமிஷன் சர்ச்சை
மக்கள் சாசனம், விதிகள் எல்லாம் ஏட்டளவில்தான். ஆமை வேகத்தில்தான் வேலை நடக்கும். ‘வேலை பார்த்தால் என்ன, பார்க்காவிட்டால் என்ன..? மாதமானால் சம்பளம், வருடமானால் இன்க்ரிமென்ட் தானாக வந்துவிடும்’ என்ற மனோபாவம் பல ஊழியர்களுக்கு. இந்த மனோபாவத்தைத்தான் ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் காரணமாக சுட்டிக் காட்டியிருக்கிறது மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பளக் கமிஷன். அதற்குத் தீர்வாக முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைதான், பணித்திறன் ஊதியம்.
இனி ஏனோதானோ வேலையெல்லாம் ஆகாது. திறமையாக வேலை செய்ய வேண்டும். உரிய நேரத்தில் உரிய முறையில் வேலைகளை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் ‘இன்க்ரிமென்ட்’ கட். தனியார் நிறுவனங்களில் உள்ளதைப் போல, ஊழியர்களின் பணித்திறன் மதிப்பிடப்படும். திறனுடைய ஊழியர்களுக்கு மட்டுமே சம்பள உயர்வு. போனஸ் கூட எல்லா துறைக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒரு துறையில் எவ்வளவு ‘உற்பத்தி’ இருக்கிறதோ அதற்குத் தகுந்த அளவே போனஸ்.
மத்திய அரசில் சுமார் 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். சுமார் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற்றி அமைக்கப்படும். அதற்கென, நிபுணர்கள் அடங்கிய ஒரு கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷன், விலைவாசி, வளர்ச்சிக்கேற்றவாறு சம்பள உயர்வு, இன்க்ரிமென்ட், ஓய்வூதியம் சார்ந்த பரிந்துரைகளை அளிப்பது வழக்கம். 6வது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகள் 2006ம் ஆண்டு ஜனவரியில் அமல்படுத்தப்பட்டன. கடந்த 2014 பிப்ரவரியில், நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 7வது சம்பளக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராய், பொருளாதார நிபுணர்கள் ரதின் ராய், மீனா அகர்வால் ஆகியோர் இடம்பெற்றனர். இந்த கமிஷனின் 900 பக்க அறிக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.
பழைய சம்பள கமிஷன்களைப் போல் இல்லாமல், காலத்திற்கேற்றவாறு ஏராளமான சீர்திருத்தங்களை முன்மொழிந்திருக்கிறது இந்த கமிஷன். பெரும்பாலானவை தனியார் நிறுவனங்களில் இருக்கும் நடைமுறைகள். அதேபோல ‘பணித்திறன் ஊதியம்’ வழங்குவது ஆக்கபூர்வமான நடவடிக்கையா..? அது அரசு அலுவலகங்களை மேம்படுத்துமா? ‘‘நிச்சயம் மேம்படுத்தும்...’’ என்கிறார் மனிதவளத்துறை நிபுணரும், நேஷனல் ஹெச்.ஆர்.டி. நெட்வொர்க் (NHRD) அமைப்பின் சென்னை மண்டலத் தலைவருமான சுஜித்.
‘‘அரசு அலுவலகங்கள் என்றாலே மக்களுக்கு ஒரு சோர்வு ஏற்படுகிறது. அந்த நிலையை இந்தத் திட்டம் போக்கும். 100 பேர் வேலை செய்யும் ஒரு அலுவலகத்தில் 10 பேர் மட்டும் ஆர்வத்தோடு தங்கள் டார்கெட்டையும் கடந்து வேலை செய்கிறார்கள்; 80 பேர் ஏனோ தானோவென்று இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஊதிய உயர்வு உள்பட பணிப்பலன்கள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்குமானால், தீவிரமாகவும் உண்மையாகவும் உழைப்பவர்கள் முட்டாள் ஆகிவிடுவார்கள். தீவிரமாக உழைக்கும் 10 பேருக்கு அதிக ஊதியம் கொடுத்து உற்சாகப்படுத்தினால் மற்றவர்களும் அவர்களைப் போல உழைப்பார்கள். தனியார் நிறுவனங்கள் லாபகரமாகவும், சிறப்பாகவும் இயங்குவதற்குக் காரணம், இந்த பணித்திறன் ஊதியம்தான்.
ஆனால் இதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. தனியார் நிறுவனங்களில், யார் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதை மேலாளர் கண்காணித்து அவர்களுக்கான பலன்களைத் தீர்மானிப்பார். ஒருவேளை அதில் உடன்பாடு இல்லையென்றால் ஊழியர்கள் அதற்கு மேல் இருக்கும் போர்டில் அப்பீல் செய்யலாம். அந்த போர்டு மேலாளருடைய கருத்தைப் பரிசீலிக்கும். ஊழியரின் பணித்திறனுக்குத் தக்கவாறு மேலாளர் ஊதிய உயர்வு தீர்மானிக்காமல் இருந்தால், போர்டே தீர்மானித்து வழங்கும். ஒருவேளை மேலாளர் தீர்மானித்தது சரியாக இருந்தால் அப்பீலைத் தள்ளுபடி செய்யும். இதற்குள் விரோதமோ, அரசியலோ இருக்காது. எல்லாமே வெளிப்படையாக நடக்கும். இந்த மாதிரியான நடைமுறை அரசு அலுவலகங்களில் சாத்தியமா என்பதைப் பார்க்க வேண்டும். பணித்திறன் ஊதியம் என்ற நடைமுறையைக் கொண்டு வருவதற்குள் அதற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
எந்த அடிப்படையில் பணித்திறனை தீர்மானிப்பது என்பதிலும் தெளிவான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக, 8 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக இருந்தால், 5 சதவீதத்தை பொதுவான ஊதிய உயர்வாகவும், 3 சதவீதத்தை பணித்திறன் அடிப்படையிலும் வழங்கலாம். இதில் இன்னொரு சங்கடமும் இருக்கிறது. தனியார் நிறுவனத்தில், ஊதிய உயர்வு போதுமானதாக இல்லாவிட்டால், வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்குச் சென்று விடலாம். ஆனால், அரசு ஊழியர்கள் அப்படிச் செல்ல முடியாது. எனவே எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக, தனியார் நிறுவனங்களில் தரப்படுவதைப் போல அரசு ஊழியர்களுக்கும் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்க வேண்டும்’’ என்கிறார் சுஜித்.
இதுபற்றி மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் துரைபாண்டியனிடம் கேட்டோம். ‘‘ஒரு போஸ்ட்மேன் ஒரு நாளைக்கு 120 கடிதங்கள் கொடுத்தாக வேண்டும் என்று விதி. அதேநேரம், அஞ்சல் துறையில் தனியாரை இறக்கிவிட்டார்கள். வீதிக்கு வீதி கூரியர் நிறுவனங்கள் வந்து விட்டன. அஞ்சல் அலுவலகத்துக்கு தினமும் 120 கடிதங்கள் வருவதேயில்லை. பிறகு எப்படி போஸ்ட்மேன் தன் பணித்திறனை நிரூபிப்பது..? தனியார் வங்கிகள் தாராளமாக அனுமதிக்கப்பட்டு விட்டன. பிறகு பொதுத்துறை வங்கிகளில் பணித்திறனை எப்படி நிரூபிக்க முடியும்..? தனியார் நிறுவனங்களோடு போட்டியிடும் அளவுக்கு எந்தத் துறையிலும் உள்கட்டமைப்புகள், வசதிகள் இல்லை. குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து விட்டு கூவச் சொல்லுவது போல இருக்கிறது சம்பளக் கமிஷன் பரிந்துரை.
உற்பத்திக்குத் தகுந்த போனஸ் என்கிறார்கள். அடிப்படையே புரியாத பரிந்துரை இது. போனஸ் என்பது அரசு போனால் போகிறதென்று இனாமாக கொடுக்கிற பிச்சைக்காசு அல்ல. ஒரு வகையில் அதுவும் ஊதியம்தான். ‘கொடுபடா ஊதியம்’ என்பார்கள். ஒரு வருடம் என்பது 52 வாரங்களை உள்ளடக்கியது. அரசு 12 மாதங்களுக்கு ஊதியம் தருகிறது. 12 மாதங்கள் என்பது 48 வாரங்களை மட்டுமே உள்ளடக்கியது. ஆக, 4 வாரங்களுக்கு ஊதியம் தரப்படுவதில்லை. அந்த 4 வாரங்களுக்கான (1 மாதம்) சம்பளம்தான் போனஸாகத் தரப்படுகிறது. போனஸ் என்பது சலுகைக்குள் அடங்காது. சம்பளத்தின் ஒரு அங்கம். ஒரு ஆண்டுக்கு 15 லட்சம் கோடி ரூபாயை வரி வருவாயாக ஈட்டித் தருவது மத்திய அரசு ஊழியர்கள்தான். அந்தக் காலத்தில் ஆர்.கே.சண்முகம் செட்டியார் 230 கோடிக்கு பட்ஜெட் போட்டார். இன்று அருண் ஜேட்லி 17 லட்சத்து 75 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறார்.
இதற்கெல்லாம் பின்புலமாக இருப்பது அரசு ஊழியர்களின் உழைப்புதான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 1 கோடியே 40 லட்சம் கோடி ரூபாய். இதில் .66% தான் ஊழியர்களுக்கு சம்பளமாக தரப்படுகிறது. அதிலும் ஊழியர்களை வந்தடைவது வெறும் .56% தான். தேசப்பற்றாளர்களும், பொருளாதார வல்லுனர்களும் சொல்வது போல நாட்டின் மொத்த வருமானத்தையும் ஊழியர்களுக்கு கொட்டிக் கொடுக்கவில்லை. மத்திய அரசில் மட்டும் 7 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதையும் சேர்த்து பணியிலிருக்கும் ஊழியர்கள்தான் சுமக்கிறார்கள். 7வது சம்பளக் கமிஷனின் பல பரிந்துரைகள் 1977ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணானது. அவை ஊழியர்களை உளவியல் சிக்கலுக்கும் வாழ்வியல் சிக்கலுக்குமே உள்ளாக்கும். இதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தவிருக்கிறோம்’’ என்கிறார் துரைபாண்டியன்.
‘‘அரசு அலுவலகங்கள் என்றாலே மக்களுக்கு ஒரு சோர்வு ஏற்படுகிறது. அந்த நிலையை இந்தத் திட்டம் போக்கும்.’’
‘‘மத்திய அரசில் மட்டும் 7 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதையும் சேர்த்து பணியிலிருக்கும் ஊழியர்கள்தான் சுமக்கிறார்கள்.’’
- வெ.நீலகண்டன்
|