குட்டிச்சுவர் சிந்தனைகள்
வெல்கம் டூ ___ டிவி. இன்னைக்கு தமிழ்நாட்டின் தலையாய பிரச்னையான சென்னை வெள்ளத்தைப் பற்றித்தான் பேசப் போேறாம். இன்றைய சிறப்பு விருந்தினர்கள் ஜோசியர் காசிவிசு, மாநகராட்சி ஊழியர் மாணிக்பாட்சா, வேளச்சேரி வேலாயுதம், கூஜக கட்சியைச் சேர்ந்த எச்.கூஜா மற்றும் இயற்கை ஆர்வலர் இயக்குனர் பொங்கல்பச்சான்.
நிகழ்ச்சியாளர்: மொதல்ல நம்ம கேள்வி ஜோசியர் காசிகிட்ட... சொல்லுங்க காசி சார், இப்படிப்பட்ட ஒரு வெள்ளம் சென்னைக்கு வர்றதுக்குக் காரணம் என்ன?
எச்.கூஜா: இதை ஏன் ஜோசியர்கிட்ட கேட்கறீங்க? நான் சொல்றேன்... இதெல்லாம் பாகிஸ்தானின் திட்டமிட்ட சதி. போன காங்கிரஸ் அரசு இதை சரியா கையாளாம விட்டுடுச்சு. முன்னாள் பிரதமர் நேரு...
நிகழ்ச்சியாளர்: மிஸ்டர் கூஜா, கொஞ்சம் பேசாம இருங்க. நேயர்களே, இதற்கிடையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் பலரும் தேங்கி நிற்கும் வெள்ள நீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி மக்கள் பணியாற்றுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மிஸ்டர் காசி, நீங்க சொல்லுங்க, இப்படிப்பட்ட ஒரு வெள்ளத்துக்குக் காரணம் என்ன?
ஜோசியர்: திண்ணையில உட்கார்ந்து சென்னையோட ஜாதகத்த பார்த்தப்ப, எண்ணெயில ஒட்டாத வெண்ணெய் மாதிரி எந்த கட்டமும் ஒண்ணுக்கொண்ணு ஒட்டிக்கவே இல்லை. அய்யா, சென்னை 48ல இருக்கிற கேது பகவான் சென்னை மாநகரத்த முறைச்சு பார்த்தா, சென்னை 28ல இருக்கிற ராகு பகவான் சென்னை சிட்டிய விரைச்சு பார்க்கிறாரு. சென்னை 45ல இருக்கிற சனி பகவான் சென்னைய முகம் சுழிச்சு பார்த்தா, ஒட்டுமொத்த சென்னையையும் வருண பகவான் வழிக்க பார்க்கிறாரு. செவ்வாய் தோஷம், சனி தோஷம், ஜலதோஷம் மாதிரி மொத்த சென்னைக்கும் மழைதோஷம் பிடிச்சிருக்கு. இதுக்கு பரிகாரம் என்னன்னா...
வேலாயுதம்: என்னங்க, ஊரே தண்ணில மூழ்கிப் போயி கிடந்தது. கார் ஓடுன தெருவுல காரே மூழ்குற அளவுல நீர் ஓடுறதை பார்க்கிறப்ப, கண்ல தாரை தாரையா கண்ணீர் ஓடுது. இப்ப போயி ஜோசியம், ஜாதகம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?
நிகழ்ச்சியாளர்: மிஸ்டர் வேலாயுதம், கொஞ்சம் அமைதியா இருங்க. உங்க வாய்ப்பு வர்றப்ப பேசுங்க... நேயர்களே, இந்த நிலையில் அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகள் நன்றாக நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியா சிட்னி கிரிக்கெட் கிரவுண்டில் இருந்து சூப்பர் சக்கர்கள் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு தெருவாக தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. மிஸ்டர் பொங்கல்பச்சான், நீங்க சொல்லுங்க, இந்த வெள்ளத்தை நீங்க எப்படிப் பார்க்கறீங்க?
பொங்கல்பச்சான்: என்ன சார் நடக்குது நம்ம நாட்டுல, இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். என்ன சார் நடக்குது நாட்டுல? சோறு போடுறதுக்கு முன்னாடி உப்பை அள்ளித் தின்கிற மாதிரி, ரோடு போடுறதுக்கு முன்னாடி வீட்டைக் கட்டினா இப்படித்தான். ஏரிக்குள்ள போயி வீட்டை கட்டிட்டு, இப்ப ஏரித்தண்ணி வீட்டுக்குள்ள வந்துடுச்சுன்னு சொன்னா என்ன சார் நியாயம்? வண்டலூர் ஜூவுல இருக்கிற பாம்பு கூட நம்ம வீட்டுக்கு வந்து நலம் விசாரிச்சுட்டு போகுது, எம்.எல்.ஏ - எம்.பிக்கள் யாரும் வரல. எப்படி சார் இந்த மனைக்கெல்லாம் அப்ரூவல் தராங்க? எப்படி சார் இந்த ஏரியாவுக்கு எல்லாம் கரன்ட், தண்ணி தராங்க? என்ன சார் நடக்குது நாட்டுல?
மாணிக்பாட்சா: சும்மா எங்களையே திட்டாதீங்க சார். ஒவ்வொரு வீடும் கட்டுறப்ப மழை நீர் சேகரிப்பு தொட்டி வைக்க சொன்னோம், யாரும் வைக்கல. அதான் இயற்கை மொத்த சென்னையவே மழை நீர் சேகரிப்பு தொட்டியா மாத்தி விட்டுடுச்சு. குப்பைய சிட்டில வச்சிருக்கிற தொட்டில கொட்டாம போனதால, மொத்த சிட்டியுமே இப்ப குப்பைத் தொட்டியா கிடக்கு. தப்பு மக்கள் மேலயும் இருக்கு சார்!
எச்.கூஜா: இதுக்கு எல்லா மக்களும் காரணமில்ல. சார், பூமி நிலமாதா, லட்சுமி குலமாதா, மாடு கோமாதா சார். நம்ம நாட்டுல மாட்டுக்கறி...
நிகழ்ச்சியாளர்: மிஸ்டர் கூஜா, நீங்க சம்பந்தமே இல்லாம பேசறீங்க. மழைய பத்தி பேசச் சொன்னா, மாட்டைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. நேயர்களே, எங்களுக்கு வந்த செய்திகளின்படி, சென்னை மாநகராட்சி எங்கும் முதல்வர் படம் போட்ட பக்கெட்டுகள், உள்ளேயிருக்கும் தண்ணீரை மோந்து வெளியே ஊத்த வீட்டுக்கு வீடு தரப்படுகின்றன. ஜோசியர் சார், நீங்க பேசுங்க...
ஜோசியர்: ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி அப்பாடக்கர் என்கிற ஞானி எழுதிய புத்தகத்தை அலமாரில இருந்து எடுத்து பார்த்துக்கிட்டு இருந்தேன், அதுல, ‘நீரின்றி அமையாது உலகு, நீரில போக வேணும் படகு, இல்லாட்டி நீ நீச்சல் பழகு’ன்னு போட்டு இருந்துச்சு. ‘பூமாதேவி சிரிச்சா பூகம்பம் வரும், அதுவே பூமாதேவி அழுதா மழை வெள்ளம் வரும். சென்னைக்கு தண்ணில கண்டம், இதை அறியாதவன் முண்டம்’னு வேற போட்டிருக்கு, இதுக்கு பரிகாரம் என்னன்னா...
நிகழ்ச்சியாளர்: ஒரு நிமிஷம் மிஸ்டர் காசி, சென்னை மீனம்பாக்கம் போயிட்டு வந்த நம்ம செய்தியாளர் லைவ்ல இருக்கார். சொல்லுங்க, அங்க வெள்ளம் வடிஞ்சிடுச்சா?
செய்தியாளர்: சார், இதுவரை நாம ஏரோப்ளேன்தான் பார்த்திருக்கோம். முதன்முறையா இப்பதான் நம்ம மக்கள் நீரோப்ளேன் பார்க்கிறாங்க. மீனம்பாக்கம் அதிகாரிகள், அந்தந்த நாட்டு ஏர்வேஸ்க்கு போன் பண்ணி, ‘எல்லா ஏரோப்ளேனும் வாட்டர் சர்வீஸ் ஆயிட்டு இருக்கு’ன்னு சொல்லி சமாளிச்சுக்கிட்டு இருக்காங்க.
நிகழ்ச்சியாளர்: நன்றி, சொல்லுங்க மிஸ்டர் காசி!
ஜோசியர்: சென்னைக்கு வாஸ்து சரியில்ல. கிழக்க இருக்கிற வங்கக்கடல தூக்கி, தெற்க காஞ்சிபுரம் மாவட்டத்துக்குக் கீழ வச்சுட்டா, காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதுவும் கண்டிப்பா வராது. அப்படி செய்ய முடியாட்டியும் இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு.
மாணிக்பாட்சா: கூவத்தை கிளீன் பண்ண எத்தனை கோடி ஆகும்னு கணக்கு போட்டுக்கிட்டு இருந்தோம். ஆனா இயற்கைய பாருங்க, எப்படியும் அது மக்கள் பணம் தானேன்னு அதுவே மொத்தமா கிளீன் பண்ணிட்டு போயிடுச்சு. இது மட்டுமில்லாம...
நிகழ்ச்சியாளர்: கொஞ்சம் இருங்க மாணிக்பாட்சா. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி, ஆளுங்கட்சியினர் தங்கள்...
மாணிக்பாட்சா: யோவ், இருய்யா, எங்கள பேச கூட்டி வந்துட்டு, எப்ப பார்த்தாலும் அவங்கள பற்றியே பேசிக்கிட்டு இருக்க! இப்ப என்ன சொல்லப்போற, வீட்டுக்கு வீடு விலையில்லா அரிக்கேன் லைட்டு கொடுத்தாங்கன்னுதானே. இதுக்கு எதுக்குய்யா எங்கள கூப்பிட்டே? உருப்படியான உதவியா பண்ண சொல்றத விட்டுட்டு, உதவாக்கரை உதவிய தூக்கி புடிச்சுக்கிட்டு இருக்கீங்க...
எச்.கூஜா: இதுக்குத்தான் நாங்க அடிக்கடி சொல்றோம், இந்திய மட்டும் தேசிய மொழியாக்கிட்டா, மத்திய அரசிடம் உதவி கேட்க ஈசியா இருக்கும்...
நிகழ்ச்சியாளர்: இப்போதைய நிலவரப்படி, அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சென்னை மாநகரம் எங்கும் வெள்ளம் வடிந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ராட்சச மின்விசிறி மூலம், ஈரமான பகுதிகள் உலர வைக்கப்பட்டு வருகின்றன. இப்படி விரைவாக நிவாரணப் பணிகளை மேற்கொண்ட...
கேமராமேன்: சார், கொஞ்சம் காலை தூக்கி சேர் மேல வச்சுக்கிட்டு பேசுங்க, ஸ்டுடியோக்குள்ள தண்ணி வந்திடுச்சு!
ஜோசியர்: இந்த ஸ்டுடியோவுக்கும் வாஸ்து சரியில்ல, இதுக்கு ஒரு பரிகாரம் இருக்கு, அது என்னான்னா...
|