இந்திய ராக்கெட்டின் சரித்திரம்
ஆகாயம் கனவு அப்துல் கலாம் 9 சி.சரவணகார்த்திகேயன்
ஆரம்ப தினங்கள்
ஒருபுறம் இந்தியாவின் ஆரம்ப கட்ட மிஸைல் முயற்சிகள் மெல்லமாய் நகர்ந்து கொண்டிருக்க, மறுபுறம் சவுண்டிங் ராக்கெட் முன்னேற்றங்கள் வேகமெடுத்தன. 1965ல் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் (SSTC) தும்பாவில் அமைக்கப்பட்டதும், பணிகள் அனைத்தும் பரபரத்தன. சுயமாய் சவுண்டிங் ராக்கெட்கள் உருவாக்கி வெற்றிகரமாய் ஏவுவதுதான் இதன் நோக்கம். சாராபாய் அமெரிக்காவிலிருந்த சில இந்திய இளைஞர்களை இதற்குப் பணியமர்த்தினார். ஏ.ஈ.முத்துநாயகம், நாசாவில் பணியாற்றியவர். எஸ்.சி.குப்தா, முதல்முறை கணிப்பொறியைக் கொண்டு தானியங்கி செயல்முறைக் கட்டுப்பாடு செய்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர். எம்.கே.முகர்ஜி, பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். வசந்த் கோவரிக்கர், இங்கிலாந்திலிருந்து திரும்பிய ரசாயனப் பொறியாளர். வைஜே ராவ், டி.எஸ்.ராணே, எம்.சி.மாத்தூர் ஆகியோர் இதுபோல் வந்து இணைந்த மற்றவர்கள்.
வாஷிங்டனில் இருந்த இந்தியத் தூதரகத்தில் ‘விண்வெளி ஆராய்ச்சியில் வேலைவாய்ப்பு’ என்று போட்ட விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தவர்கள் இவர்கள். விக்ரம் சாராபாயே இவர்களை நேர்முகம் செய்தார். (இன்றைய தேதியில் இதை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா? வெளிநாடுகளை விடுங்கள். இங்கே ஐ.ஐ.டி.யில் படித்துப் பட்டம் பெறும் எத்தனை பேர் ஆர்வத்துடன் இந்திய விண்வெளி ஆய்விலும், பாதுகாப்புத் துறை ஆராய்ச்சியிலும் சேர்கிறார்கள்!) இந்தியாவிலிருந்தும் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆர்.எம்.வாசகம், எம்.ஆர்.குரூப், எம்.சி.உத்தம், ஜி.மாதவன் நாயர் இவர்களில் முக்கியமானவர்கள். பலர் இந்திய அணுசக்தித் திட்டத்திலிருந்து வந்தனர். இப்படி வெளிநாடுகளிலும் வெளியூர்களிலும் இருந்து வந்து சேர்ந்தவர்களுக்கு தும்பாவில் புழங்குவது சிரமமாய் இருந்தது. அருகேயிருந்த பெரிய ஊர் திருவனந்தபுரம். ஆனால் அதுவே அப்போது முளைத்துக் கொண்டிருந்த சிறு நகரம்தான். எனவே உணவு, இருப்பிடம், போக்குவரத்து என எல்லாமே சிக்கல் மிக்கதாய் இருந்தது.
குடும்பஸ்தர்கள் வீடு எடுத்துக் கொண்டு விட, மற்றவர்கள் திருவனந்தபுரம் ரயில் நிலையம் அருகே ஒரு லாட்ஜில் தங்கினர். இந்தியாவின் மிக உயர்ந்த, மிக நவீனமான, மிக முக்கியமான ஒரு விஞ்ஞான ஆராய்ச்சித் திட்டத்துக்கு உலகின் பல முனையிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் இத்தகைய துர்சூழலில் ஜீவித்திருக்க வேண்டி இருந்தது என்பது இன்று எல்லோருக்கும் ஆச்சரியமாகப் படலாம். ஆனால் அன்று அதுவே நிதர்சனம். சொந்த வாழ்க்கைத் தேவைகளுக்கு மட்டுமல்ல; ராக்கெட் வேலைகளுக்குமே கூட அப்படித்தான் இருந்தது. அப்போது தும்பாவில் கட்டடங்கள் ஏதும் தயாராகி இருக்கவில்லை. தேவாலயக் கட்டடத்திலேயேதான் எல்லாவற்றையும் சமாளித்தனர். ஒரே ஒரு பச்சை நிற வேன் போக்குவரத்துக்கு இருந்தது. எல்லாவற்றுக்கும் அதைப் பயன்படுத்த முடியவில்லை. அதனால் உதிரிப் பாகங்களை ஓரிடத்திலிருந்து மற்ற இடத்துக்கு சைக்கிளில் எடுத்துச் சென்றனர். ராக்கெட்களைக் கூட சைக்கிளில் வைத்து எடுத்துப் போவது சகஜமாய் இருந்தது!
இத்தனை எதிர்மறைகளையும் தாண்டி விஞ்ஞானிகள் எல்லோரும் ஆர்வம் காட்டக் காரணம், ‘நீங்கள் செய்து கொண்டிருப்பது மகத்தான ஒரு தேச காரியம்’ என அவர்கள் மனதில் விக்ரம் சாராபாய் பதிய வைத்ததுதான்! அதன் பயன் மொத்த நாட்டு மக்களுக்குமானது என அவர்கள் நம்பினர். தலைமை விஞ்ஞானி முதல் எடுபிடி வேலைகள் செய்பவர் வரை அவர்கள் செய்வது மிக முக்கியமான பங்களிப்பு என்ற எண்ணத்தை சாராபாய் ஏற்படுத்தி இருந்தார். காட்சிக்கெளியனாய் கடுஞ்சொல்லன் அல்லனாய் அவர் இருந்தார். யாரும் அவரை அணுகிப் பேசுவது எளிதானதாய் இருந்தது. எல்லோருக்கும் மரியாதை அளித்தார். எந்த ஒரு விஷயத்தையும் சிறிதாய்த் துவங்கி, பின்னர் விரிவுபடுத்த வேண்டும் என்பது அவரது கருத்தாய் இருந்தது. சிறு வெற்றி கிட்டினாலும் ‘‘ஆப்பின் கூர்விளிம்பு இது’’ என்பாராம்; தொடர்ந்து உழைத்தால் அதனை விரிவாக்கி ஆப்பின் அகலமான மறுபுறத்தை அடையலாம் என்ற பொருளில்.
SSTC துவங்கிய ஓராண்டில் ஹோமி பாபா இறந்து விட, அணுசக்தித் துறையையும் விக்ரம் சாராபாய் கவனிக்க வேண்டியதாயிற்று. புதிய பணிச்சுமைகளையும் தாண்டி சாராபாய் தொடர்ந்து தும்பா வந்து போனார். எதிலும் அவர் சமரசம் செய்யவில்லை. விக்ரம் சாராபாய் தும்பா வருகிறார் என்றாலே தனி உற்சாகம் தொற்றிக் கொள்ளும். உத்தரவிடுதலாக அல்லாமல் கருத்துப் பரிமாற்றமாகவே அவரது அணுகுமுறை அமைந்தது. தள்ளிச் செல்லவோ இழுத்துச் செல்லவோ இல்லை; வழிநடத்தினார். ஆனால் அவர் மனதில் இருக்கும் தெளிவான இலக்கை சம்பந்தப்பட்டவர்களுக்கு வெற்றிகரமாகக் கடத்தி ஏற்றுக் கொள்ள வைத்து விடுவார். முடிவுகள் எடுப்பது மட்டுமல்ல; அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படி பார்த்துக் கொள்வதும் தன் வேலை என நம்பினார். ‘‘சாராபாய் அடுத்தடுத்து எடுத்த பல முடிவுகள் பலருக்கு வாழ்க்கை லட்சியமாக மாறின’’ எனக் குறிப்பிடுகிறார் அப்துல் கலாம்.
அதிருப்தியை அவர் கையாண்ட விதமும் அலாதியானது. அதை மறைப்பதில்லை; அதைப் பெரிதுபடுத்தி குற்றம் சுமத்துவதுமில்லை. தோல்விகள் நேர்ந்தாலும் அதில் அடைந்த சிறுவெற்றிகளை மையப்படுத்திப் பேசுவார். அதனால் தும்பாவில் இருந்தவர்களுக்கு அவரது ஒவ்வொரு வருகையின்போதும் அவரிடம் ஏதேனும் புதிதாகச் செய்து காட்டி அவரது கருத்தறிய வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதற்காக இரவு பகலாகப் பணியாற்றத் தயாராய் இருந்தனர். அது அவரது ஆகிருதி. சாராபாய் ஒவ்வொருவருக்கும் முன்வைத்தவை சவால்கள். அதை எதிர்கொள்வதன் மூலம் அதை ஏற்பவரின் திறமை வளப்பட்டது. அது சம்பந்தப்பட்டவரின் திறமைக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதை எளிமைப்படுத்தும் முறைகளைக் காட்டினார்.
அவர் பணியமர்த்திய பலருக்கும் ராக்கெட் இயலில் நேரடி முன் அனுபவம் ஏதும் இருக்கவில்லை. அவர்கள் அதைக் கற்றுக்கொள்ள உள்நாட்டு சவுண்டிங் ராக்கெட் திட்டம் உதவிகரமாக இருந்தது. ஆரம்பத்தில் இதில் இந்தியா கவனம் குவிக்க முக்கிய காரணம், அதன் எளிமையான வன்பொருளும் குறைவான தயாரிப்புச் செலவுமே. ஹோமி பாபா இவ்விஷயம் பற்றிப் பேசுகையில் ‘‘இந்தியாவின் உடனடி விண்வெளி ஆய்வு லட்சியங்கள் மிதமானவை. நாம் மனிதனையோ யானைகளையோ பூமியைச் சுற்றி வர வைக்கத் திட்டமிடவில்லை’’ என்கிறார். (அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டி போட்டு விண்வெளிக்கு மிருகங்களையும் மனிதர்களையும் அனுப்பி வைத்துக் கொண்டிருந்த காலகட்டம் அது!)
இந்தியா Nike - Apache சவுண்டிங் ராக்கெட் பயன்படுத்திச் செய்த சோடியம் ஆவி போன்ற எளிய பரிசோதனைகளுக்கு தொலைப்பதிவு (Telemetry) போன்ற வசதிகள்கூட அவசியமில்லை. ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சவுண்டிங் ராக்கெட்களை ஏவ முடியும். மாணவர்களுக்கு ராக்கெட் இயலைக் கற்பிக்கவும் இது சல்லிசான முறை. இன்றும் விஞ்ஞானிகள் மத்தியில் சவுண்டிங் ராக்கெட்கள் பிரபலமாக இருக்கின்றன. பொறியாளர்கள் தம் ஆக்கங்களின் முதலுருவைப் (Prototype) பரிசோதித்துப் பார்க்க இதைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிறைகள் யாவும் முக்கியமான காரணிகள். இந்திய விண்வெளி ஆய்வின் வளர்ச்சிக்கு சவுண்டிங் ராக்கெட்களை முன்வைத்து மூன்று விதமான அணுகுமுறைகளை சாராபாய் திட்டமிட்டார். தும்பா ராக்கெட் ஏவுதளத்திலிருந்து தொடர்ந்து அந்நிய நாட்டு ராக்கெட்களை ஏவுவது முதலாவது. Nike - Apache, M-100 என ஏற்கனவே குறிப்பிட்டவை போக 1960களின் பிற்பகுதியில் Nike - Tomahawk, ARCAS (அமெரிக்கா), Petrel, Skua (இங்கிலாந்து), Centaure Dragon (பிரான்ஸ்) ஆகிய பல்தேச சவுண்டிங் ராக்கெட்கள் தும்பாவின் TERLS ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டன. இவை விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் ராக்கெட் வடிவமைப்பிலும் ஏவுதலிலும் நல்ல கள அனுபவத்தைக் கொடுத்தன.
ஒருகட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் தாங்களே முன்வந்து தும்பாவில் பரிசோதனைகளை நடத்தின. ‘அமைதியான விண்வெளிப் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளம் தும்பா TERLS’ என ஐ.நா சபை அங்கீகரித்துப் பாராட்டியது. இரண்டாவது வழிமுறை, பல துறைகளைச் சேர்ந்த பொறியியல் குழுக்களை 100% உள்நாட்டு ராக்கெட்களை வடிவமைப்பதிலும் உருவாக்குவதிலும் ஊக்குவிப்பது. இப்பணியில் அக்குழுக்கள் தனித்தனியாக இயங்கின. அவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவியது எனப் பொதுவாய்ச் சொல்லப்பட்டாலும் அது சில அனாவசிய கோபதாபங்களையும் விதைத்தது. விஞ்ஞானிகளுக்குள் விவாதங்கள் முதல் விதண்டாவாதங்கள் வரை நடந்தேறின. ஆனால் ஒட்டுமொத்தமாய் எடுத்துப் பார்க்கையில் இது நல்ல முன்னேற்றத்தையே அளித்தது. முக்கியக் காரணம், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் சாராபாயிடமே இருந்தது. அனைத்தையும் அவர் விட்டுப் பிடித்து சமாளித்தார். எவர் கருத்தும் அனாவசியமாய் நசுக்கப்படாமல் பார்த்துக் கொண்டார். அப்துல் கலாம் போன்ற முக்கியமான விஞ்ஞானிகள் இதன் வழி உருவாகி வந்தவர்கள்தான்.
சாராபாயின் மூன்றாவது திட்டம், இவ்விரு முறைகளுக்கும் இடைப்பட்டது. முழுக்க வெளிநாட்டுச் சரக்காகவும் அல்லாமல், முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பாகவும் அன்றி இரண்டுமான ஒன்று அது. ஒரு வெளிநாட்டு சவுண்டிங் ராக்கெட்டை அதிகாரபூர்வ ஒப்பந்தத்தின் மூலம் அவர்களின் வழிகாட்டுதலில் இந்தியாவிலேயே தயாரித்து ஏவுவது. ‘விஷயம் தெரிந்தவர்களிடமிருந்து முறையாகக் கற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்துவது’ என்ற சூட்சமம் அது. செலுத்துபொருள் உற்பத்தியகம் என்ற விஷயம் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும், அவற்றைப் பாதுகாப்பாய்த் தயாரிக்கும் பல்வேறு கட்டங்களைக் கையாள்வது எப்படி, புதுவகையான செலுத்து பொருள் கலவைகள் போன்றவற்றை இந்திய விஞ்ஞானிகள் கற்க இது உதவியது. பிற்பாடு தும்பாவில் ஏவுகணை செலுத்துபொருள் உற்பத்தியகம் (Rocket Propellant Plant - RPP), ஏவுகணை கட்டுமான வசதியகம் (Rocket Fabrication Facility - RPF) ஆகியவை உருவாக இந்த வழிமுறையே பிரதான காரணமாய் அமைந்தது. எதிலிருந்து கற்பது? நீண்ட பரிசீலனைக்குப் பின் தேர்வானது, பிரான்ஸின் Centaure ராக்கெட்!
"சிரமங்களைத் தாண்டி விஞ்ஞானிகள் எல்லோரும் ஆர்வம் காட்டக் காரணம், ‘நீங்கள் செய்து கொண்டிருப்பது மகத்தான ஒரு தேச காரியம்’ என அவர்கள் மனதில் விக்ரம் சாராபாய் பதிய வைத்ததுதான்!"
‘‘இந்தியாவின் விண்வெளி ஆய்வு லட்சியங்கள் மிதமானவை. நாம் மனிதனையோ யானைகளையோ பூமியைச் சுற்றி வர வைக்கத் திட்டமிடவில்லை!’’
(சீறிப் பாயும்...)
|