நியூஸ் வே



கரூர் அருகே இருக்கும் ஆச்சி மங்கலம் அரசுப் பள்ளி மாணவர்கள் மண் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சுவர் அமைத்திருக்கிறார்கள். இந்த புதிய முயற்சி அவர்களுக்கு மெக்ஸிகோவில் நடைபெறவிருக்கும் அறிவியல் மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறது. நாளைய கலாம்கள்!



டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் கவர்னர் நஜீப்புக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். கெஜ்ரிவாலின் எல்லா ஃபைலையும் நிராகரிப்பதே வேலையாக இருக்கிறார் கவர்னர். டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக ஸ்வாதி மாலிவாலை நியமித்ததையும் ‘இது முறையான நியமனம் இல்லை’ என முதலில் நிராகரித்தார் கவர்னர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு பதவியேற்றிருக்கிறார் ஸ்வாதி. ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஒருவரின் மனைவியான ஸ்வாதி, தனது எஞ்சினியரிங் வேலையை ராஜினாமா
செய்துவிட்டு இதை முழுநேரப்பணியாகச் செய்யப்போகிறார்.



தலைமைச் செயலகத்தில் வாஸ்து சரியில்லை எனச் சொல்லி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த ஒரு மாதமாக தன் அலுவலகம் வருவதில்லை. வீட்டிலிருக்கும் அலுவலகத்தையே பயன்படுத்துகிறார். வாஸ்து பிரச்னையை சரி செய்வதற்காக சில மரங்கள் வெட்டப்படுகின்றன. சாலை ஒன்று அகலமாகிறது.

48 படங்கள் பண்ணி விட்டார் த்ரிஷா. ‘தூங்காவனம்’ அல்லது ‘அரண்மனை 2’ இவை இரண்டில் எது பிந்துகிறதோ, அது 50வது படம். ‘பாகுபலி’ மாதிரியான படங்களில் சாகச வீராங்கனையாக நடிப்பது த்ரிஷாவின் சமீபத்திய ஆசை!

‘த்ரிஷ்யம்’ ரீமேக் ஆன எல்லா மொழிகளிலும் ஹிட். அதன் இந்தி ரீமேக்கில் நடித்துள்ள ஸ்ரேயா, இனி பாலிவுட்டில் தொடர்ந்து பிஸியாகிவிடுவோம் என நம்புகிறார்.

கைவசம் 4 படங்கள் வைத்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. ‘‘ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான ரோல் பண்ணியிருக்கேன். எல்லாமே எனக்கு பேர் வாங்கிக்கொடுக் கும்’’
என்கிறார்.

தங்கத்தைவிட விலை உயர்ந்த பிளாட்டினம் ஓரிடத்தில் குவிந்து கிடப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். எங்கு தெரியுமா? நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள குன்னமலையில்!

‘ஆசிய நோபல்’ என்றழைக்கப்படும் ராமன் மகசேசே விருது பெற்றிருக்கிறார் சஞ்சீவ் சதுர்வேதி. வனத்துறை அதிகாரியான இவர், ஊழலுக்கு எதிராக நெஞ்சு நிமிர்த்தி போராடுபவர். இதனால் கடந்த 5 ஆண்டுகளில் 12 முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டவர். ஹரியானாவில் நில மாஃபியாவை எதிர்த்த இந்த அதிகாரி மீது நான்கு முறை பொய் வழக்குகள் போடப்பட்டன. ஜனாதிபதி அலுவலகம் தலையிட்டு வழக்குகளை ரத்து செய்தது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் விஜிலென்ஸ் அதிகாரியாக செயல்பட்டு பல ஊழல்களை அம்பலப்படுத்த முயன்றபோது மோடி அரசு இவரைத் தூக்கியடித்தது. அந்தக் காயம் ஆறாமல் இருந்த சதுர்வேதிக்கு இந்த விருது ஒரு அங்கீகாரம்.

‘மாயா’ படத்தின் விளம்பரப் பணிகளுக்கு வருவதாக நயன்தாரா ஒப்புக்கொண்டிருந்தார். இப்போது வர மறுக்கிறாராம். படக்குழுவினர் விக்னேஷ் சிவன் ரெகமெண்டேஷனை நாடியிருக்கிறார்கள். அவர் காமராஜர் மாதிரி, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ எனச் சொல்லியிருக்கிறார்.

மகாராணியாக தேவியை மனதில் வைத்தே, ‘புலி’ பட ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்திருக்கிறார் சிம்புதேவன். ஆனால், ரொம்பவே தயக்கத்திற்குப் பின்தான் கதை கேட்டிருக்கிறார் தேவி. அதன் பிறகே, நடிக்க ஆர்வமாகியிருக்கிறார்.

மனீஷா கொய்ராலாவுக்கு இந்தியில் படங்கள் எதுவும் இல்லை. ஆனால், தமிழில் இருக்கிறது. அர்ஜுன், ஷாம் நடிக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்துக்காக இந்த வயதில் ஷாமுடன் பாங்காக்கில் டூயட் ஆடியிருக்கிறார் மனீஷா.

ஜெயம் ரவி படம் முடித்த கையோடு, நாலைந்து கிலோ எடை கூட்டியிருக்கும் அஞ்சலியிடம், நடிகர் சங்கத் தேர்தல் குறித்து கருத்து கேட்டால், ‘‘நடிகர் சங்கம் பத்தி வர்ற நியூஸ்களை உன்னிப்பா கவனிச்சிட்டிருக்கேன். நல்லது செய்கிற அணிக்குத்தான் என் ஆதரவு!’’ என சமாளிபிகேஷன் ஆகிறார் அஞ்சலி.

மிகச் சரியாகப் பிறந்த நாளில் தூக்கில் போட்டிருக்கிறார்கள் யாகூப் மேமனை. மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் போராடிய நிலையில், கடைசி நிமிட விசாரணைகளில் உச்சநீதிமன்றம் பல வரலாறுகளைப் படைத்திருக்கிறது. நீதியரசர் தீபக் மிஸ்‌ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் இதற்காக அதிகாலையில் கோர்ட் ஹாலைத் திறந்து 3.18 முதல் 4.50 வரை விசாரித்தது. ‘மரண தண்டனைக்கு தடை விதிக்க முடியாது’ என தீர்ப்பு சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய் குளித்து ரெடியாகி, காலை பத்தரை மணிக்கு வழக்கமான வழக்கை விசாரிக்க வந்து விட்டார் தீபக் மிஸ்‌ரா.