அதிரடி சரவெடி!
‘கமலை வைத்து படம் எடுக்காததே வெற்றி’ என்றும், ‘என் படங்களில் கதைதான் உயிர்’ என்றும் அடுத்தடுத்து சரவெடி வெடித்த இயக்குநர் மிஷ்கினின் அதிரடி பேட்டி அருமை! - காந்தி லெனின், திருச்சி.
தங்கம் விலை இனி பெரிதாக ஏறாது; இறங்கினால் நிறையவே இறங்கும் என்று பெண்ணைப் பெற்றவர்கள் வயிற்றில் பால் வார்த்த உங்களுக்கு நன்றி! - மல்லிகா அன்பழகன், சென்னை.
ஏற்கனவே ‘காளி’ படத்திலும், ‘முள்ளும் மலரும்’ படத்தில் ‘காளி’ என்ற வேடத்திலும் அசத்திய சூப்பர் ஸ்டார், அடுத்ததாகவும் ‘காளி’யாகக் களமிறங்குவது கலக்கல்! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
‘பூப்புனித நீராட்டு விழா’வை மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்திய புவனேஸ்வரி - மோகராஜ் தம்பதியர் தேடிப் பிடித்து பாராட்டப்பட வேண்டியவர்கள்! - மயிலை.கோபி, சென்னை.
‘பாகுபலி’ மூலம், சினிமாவிற்கு புது மொழி தந்த மதன் கார்க்கி பாராட்டுக்குரியவர். ‘தாய் எட்டடி... குட்டி பதினாறடி’ எனும் முதுமொழியை நிரூபித்திருக்கிறார் கார்க்கி! - பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
நாஞ்சில் நாடனின் ஏக்கமும் ஆதங்கமும் நியாயமானவை. கரகாட்டமும் ஒயிலாட்டமும் பார்த்து, பம்பை, உடுக்கு, பறை கேட்டு மகிழ்ந்தவருக்கே தெரியும் அவற்றின் சிறப்பு, இழப்பு! - டி.வி.ரங்கராஜ், தேனி.
பூக்கள் தவிர கடுக்காய் வைத்தும், ஸ்ரீஅரவிந்த அன்னையைப் பிரார்த்திக்கலாம் என்பது இதுவரை தெரியாத செய்தி. அதைத் தெரிய வைத்த ‘மகான்கள்’ தொடருக்கு நன்றி! - வரலட்சுமி முத்துசாமி,
நடிகைகளின் தொப்புள்களில் பம்பரம் விட்டார்கள்... ஏன், ஆம்லெட் கூட போட்டார்கள். ஆனால், கேத்தரின் தெரசாவின் தொப்புளில் ‘நியூஸ் வே’ என தலைப்பு போட்டு சரித்திரம் படைத்து விட்டீரே ஐயா! - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
‘இனி காசு உள்ளவர்களுக்கு மட்டுமே கரன்ட் கிடைக்கும்’ கட்டுரையைப் படித்த யாருமே ‘ஷாக்’ ஆகப் போவது உறுதி! - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
டாஸ்மாக்கை தவிர்த்தும் வருமானத்தைப் பெருக்க தமிழக அரசுக்கு நன்கு தெரியும்! மதுவி்ல் கிடைக்கும் மறைமுக வருமானத்தை இழக்க யாரும் விரும்பவில்லை என்பதே நிதர்சனம்! - மனோகர், மேட்டுப்பாளையம்.
‘பிரிக்ஸ் நாடுகள்’ கூட்டமைப்பு துவங்கியுள்ள ‘நியூ டெவலப்மென்ட் பேங்க்’ (இது இந்தியாவின் உலக வங்கி) குறித்த தகவல்கள் அனைத்தையும் எளிமையாக முழுமையாகத் தெளிவுபடுத்தி விட்டீர்கள், நன்றி! - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
|