கலாமை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?



*கலாம் ஒரு விஞ்ஞானியே கிடையாது.
*அவருக்கும் அணு ஆராய்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. பொக்ரானில் வெடித்து இந்தியா அணுகுண்டு சோதனை செய்து பார்த்ததும் வெற்றி இல்லை. என்றாலும் பொக்ரான் அணுகுண்டுக்காக கலாமை கொண்டாடுகிறார்கள்.
*அவர் முறைப்படி ஆராய்ச்சி செய்து பிஹெச்.டி பட்டம் வாங்கியதில்லை. ஆனாலும் டாக்டர் பட்டத்தை பெருமையோடு தனது பெயரில் இணைத்துக்கொள்கிறார்.
*பழைய ரஷ்ய ஏவுகணைகளைக் கழற்றிப் பார்த்து, அதைப் போலவே ரிவர்ஸ் எஞ்சினியரிங் முறையில் ஏவுகணைகள் உருவாக்கியவரை ‘ஏவுகணை மனிதர்’ என புகழ்கிறார்கள்.
*அவரது பல ஆராய்ச்சிகள் தோல்வியில் முடிந்தவைதான்.
*சுமாரான சில வேலைகளைச் செய்துவிட்டு, அதில் தேசபக்தி சாயம் பூசி பெரிய வெற்றிகளாக நம்மிடம் காட்ட முயன்றவர்.
*ஹீரோக்களுக்கு ஏங்கும் ஒரு தேசத்தை, தன்னம்பிக்கை புத்தகங்களாலும் எழுச்சியூட்டும் பேச்சுகளாலும் அவர் மயக்கிவிட்டார்.

   

- இதெல்லாம் ஏதோ பாகிஸ்தானிலிருந்தோ, சீனாவிலிருந்தோ வரும் விமர்சனங்கள் அல்ல. நம் ஊரிலேயே இப்படிப் பேசும் விமர்சகர்கள் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் தாண்டி அப்துல் கலாமை நாம் ஏன் கொண்டாடுகிறோம்?

குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நாளிலிருந்து மாணவர்களுடனே தனது நாட்களைக் கழித்த கலாமுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் வெறும் மாணவர்கள் மட்டுமில்லை; படித்தறியாத கூலித் தொழிலாளிகள் முதல் ஐ.டி. நிறுவன நிர்வாகிகள் வரை எல்லோருமே இந்தக் கூட்டத்தில் இருந்தனர். கலாம் ஒரு விஞ்ஞானி என அவரைக் கொண்டாடுவதாக இருந்தால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் உட்பட தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வரை பல ஆயிரம் பேரை நாம் கொண்டாட வேண்டும். ஏனெனில், அவர்கள் அத்தனை பேரும் விஞ்ஞானிகள் எனவே அழைக்கப்படுகிறார்கள். அணு ஆராய்ச்சியாளர் எனில், நேரடியாகவும் நிழலாகவும் அணு ஆராய்ச்சியில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களை நாம் கொண்டாட வேண்டும். டாக்டர் பட்டம் வாங்கியவர்களைத்தான் கொண்டாடுவது என்றால் லட்சக்கணக்கான முனைவர்கள் இங்கு இருக்கிறார்கள். தன்னம்பிக்கை எழுத்தாளர் கொண்டாடப்படுவார் எனில், ஷிவ் கேரா போன்றவர்கள் தேர்தலில் கேவலமாகத் தோற்றிருக்க முடியாது. எனில், கலாம் ஏன் கொண்டாடப்படுகிறார்?

இங்கே விமர்சனங்கள் பலவும் ‘நான் எவ்வளவு பெரிய திறமைசாலி பார்த்தாயா?’ எனக் காட்டிக்கொள்வதற்கும், ‘என் பேனா எவ்வளவு ஆழமாகக் குத்திக் காயப்படுத்தியது தெரியுமா?’ என குரூர திருப்தி அடைவதற்காகவுமே செய்யப்படுகின்றன. இந்த மாதிரி விமர்சகர்கள் சொல்வது போல கலாம் தன்னை ‘டாக்டர் கலாம்’ என ஒருமுறை கூட அழைத்துக்கொண்டதில்லை, உலகின் பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய 30 டாக்டர் பட்டங்களைப் பெற்ற பிறகும்!

தன் தோல்விகள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளத் தயங்கியதில்லை. ஆனால் அவர் ஒரு நல்ல தலைவனாக இருந்தார். அந்த தலைமைப் பண்பு, பல ஜீனியஸ்களை காந்தம் மாதிரி ஈர்த்தது. இந்தியாவின் முதல் எஸ்.எல்.வி ராக்கெட் தொடங்கி, அக்னி ஏவுகணை வரை பல விஷயங்களை அவர் சாதிக்கக் காரணமாக இருந்தது இந்த தலைமைப்பண்புதான். எளிய குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து, சராசரி நிலையிலிருந்து உச்சம் வந்தபிறகும் தன் வேர்களை மறந்ததில்லை அவர். அதனால் ‘ஏவுகணை தொழில்நுட்பம் கூட எளிய மக்களுக்கு உதவ வேண்டும்’ என்ற தாகம் கொண்டிருந்தார். டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு, இந்தியாவின் ராணுவத் தேவைகளுக்காக பல ஆராய்ச்சிகள் செய்கிறது. இன்றுவரை இந்த அமைப்பு உருப்படியாக எதையும் செய்ததில்லை என சர்ச்சைகள் உண்டு. இங்கு கலாம் பொறுப்பில் இருந்தபோது, இங்கு உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களை மற்ற விஷயங்களுக்கும் பயன்படுத்த கதவுகளைத் திறந்துவிட்டார்.

இப்படி ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் நரேந்திரநாத்துடன் இணைந்து கலாம் உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு, ‘போலியோ நோய் தாக்கியவர்கள் அணியும் காலிபர்’. போலியோ தாக்கியவர்கள் நடப்பதற்காக அணியும் இந்த காலிபரை அதற்குமுன்பு லெதரிலும் உலோகங்களிலும் உருவாக்கினர். நான்கு கிலோ எடை இருக்கும். அணிந்து நடப்பது பெரும் வேதனை. விலையும் 4 ஆயிரம் ரூபாய். ஏவுகணை தயாரிப்பில் உதவும், எடை குறைவான பாலிபுரோபிலீன் கண்ணாடிக் கலவையில் இதைச் செய்ய கலாம் காரணமாக இருந்தார். வெறும் 400 கிராம் எடையில், 500 ரூபாயில் செய்ய முடிந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதை அணிந்து நிம்மதி அடைந்திருக்கிறார்கள். தனது மிக உன்னதமான கண்டுபிடிப்பு என கலாம் சொல்வது இதைத்தான். ஏவுகணைகளையோ, அணுகுண்டையோ அல்ல!

இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால், ஸ்டென்ட் வைத்து அடைப்பை நீக்குவது லேட்டஸ்ட் சிகிச்சை. இதற்கான ஸ்டென்ட் முன்பு வெளிநாட்டிலிருந்து வரும். விலையும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல். சோமராஜு என்ற இதயநோய் நிபுணருடன் கலாம் இணைந்து, கடந்த 94ம் ஆண்டு இந்தியாவிலேயே ஸ்டென்ட் உருவாக்கினார். கலாம் - ராஜு ஸ்டென்ட் என அழைக்கப்படும் இது, வெறும் 10 ஆயிரம் ரூபாயில் கிடைத்தது. இது வந்ததும், மார்க்கெட்டில் அப்போது இருந்த ஸ்டென்ட்களின் விலை பாதியாகக் குறைந்தது. கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு, ஸ்டென்ட் என்ன விலை என்பது ரகசியமாக இருக்கும்வரைதான் அது நல்ல பிசினஸ். அதனால் பெருமுயற்சி எடுத்து இது தொடர்பான மேல் ஆராய்ச்சிகளைத் தடுத்தன அவை.

நகர்ப்புறங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமங்களில் கிடைத்தால், அவர்கள் ஏன் நகரங்களை நாடிவரப் போகிறார்கள். இதற்காக ‘புரா’ என ஒரு திட்டத்தை உருவாக்கினார் அவர். அவரது கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் அரசுகள் அமையவில்லை என்பதற்காக அவரைக் குறை சொல்ல முடியாது!  இரண்டு தலைமுறைக்கு முன்பு ‘எப்படியாவது படித்து ஒரு அரசாங்க அதிகாரி ஆக வேண்டும்’ என்பது இந்திய இளைஞர்களின் கனவாக இருந்தது. கடந்த தலைமுறைக்கு, ‘எப்படியாவது படித்து, இங்கிருந்து தப்பித்து வெளிநாடு போய்விட வேண்டும்’ என்பது கனவாக இருந்தது.

இந்த தலைமுறை இளைஞர்கள் இந்தியா பற்றிய நம்பிக்கையோடு வளர்கிறார்கள். சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி பல கோடிகளில் வளரும் ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்களும்... வெளிநாட்டில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வாய்ப்புகளை விட்டுவிட்டு வந்து, சூரியசக்தி மின்சாரத்தால் ஒரு குக்கிராமத்தை வெளிச்சமாக்கும் இளைஞர்களும்... கலாம் விதைத்த கனவின் விளைச்சல்கள். அதனால்தான் அவர் கொண்டாடப்படுகிறார்!

"தனது மிக உன்னதமான கண்டுபிடிப்பு என கலாம் சொல்வது போலியோ நோய் தாக்கியவர்கள் அணியும் காலிபரைத்தான். ஏவுகணைகளையோ, அணுகுண்டையோ அல்ல!"

- அகஸ்டஸ்