காதல் என்பது வலி, வேதனை, சந்தோஷம்!



டைரக்டர் கீதாஞ்சலி செல்வராகவன்

‘‘இந்தக் காதல் இருக்கே, அது எதிர்பார்த்தும் வராது... எதிர்பார்த்த சமயத்திலும் வராது... எதிர்பார்க்கிற ஆளோடும் வராது. இதெல்லாம் அந்தக் காதலுக்குக்கே வெளிச்சம்!’’ - இரு தினங்களுக்கு முன், காலையில் தேநீர்க் குவளையை உள்ளங்கைகளில் உருட்டியபடி இயக்குநர் கீதாஞ்சலி செல்வராகவன் பேசிய வார்த்தைகள் இவை. அவரின் அறிமுகப் படமான ‘மாலை நேரத்து மயக்கம்’ பற்றி தொடர்ந்து உரையாடல்...
 


‘‘செல்வராகவன் ஸ்கிரிப்ட். அவரின் பாணியை பின்பற்றுவீர்களா?’’

‘‘இந்த ஸ்கிரிப்ட் செல்வாவே எப்பொழுதோ செய்திருக்க வேண்டியது. அடுத்தடுத்து வேறு படங்களில் அவர் தீவிரமாகிட்டதால் அப்படியே இருந்தது. எடுத்துப் பார்த்தா, இன்னிக்கும் அந்த ஸ்கிரிப்ட் சரியா இருந்தது. செல்வாவே ‘இந்தப் படத்தை நீ எடு. உன்னால் முடியும். இவ்வளவு திறமையை வச்சிக்கிட்டு முடங்கி விடாதே’ன்னு உற்சாகப்படுத்தி அனுப்பினார். ஷூட்டிங் ஆரம்பித்து இரண்டு நாள் வரைக்கும் ஒன்றுமே புரியலை. நாம் சரியாக செல்வாவின் ஸ்டைலை  ஃபாலோ பண்ணுகிறோமா என கொஞ்சம் சந்தேகமாகவும் இருந்தது. அப்பவும் செல்வா உதவிக்கு வந்தார். ‘என் ஸ்கிரிப்ட்தான்... ஆனால், அதை என்னை மாதிரியே செய்யணும்னு அவசியமில்லை. ஜாடை இருக்கலாம். என்னை மாதிரி செய்யிறதுக்கு நீ எதுக்கு!’ன்னு எனக்கு நிறைய உணர்த்தினார். அவ்வளவுதான். அப்புறம் எனக்கு எவ்வளவோ நிகழ்ந்தது. அதன்பின் எந்தக் குழப்பங்களும் இல்லை. 14 நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு அதைப் போட்டுப் பார்த்து செல்வா சொன்னது, ‘வெரிகுட்’. எனக்கு ரொம்பவும் சந்தோஷம். எங்கள் எடிட்டர் கோலா பாஸ்கரின் மகன் ஹீரோ. எங்க கேமராமேன் ராம்ஜியின் உதவியாளர் ஸ்ரீதர் கேமராவைக் கையாள, கோலாவின் உதவியாளர் ரூகேஷ் எடிட்டராகியிருக்க, இளைஞன் அமிர்த்ராவ் இசையை மீட்ட... ஆக, கிளம்பிவிட்டது இளமைப் பட்டாளம்!’’



‘‘செல்வாவின் ஸ்கிரிப்ட் ரொம்பவும் உணர்வுபூர்வமாக இருக்கும். எப்படிக் கையாண்டீர்கள்?’’

‘‘வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கொண்டு போகலாம். ஆனால், அத்தனை பேரும் அன்புக்காகவும் காதலுக்காகவும் காத்திருப்பதுதான் நீதி. அப்படியொரு அருமையான காதலை, அந்தக் காதலின் வலிமையை, அறியாமையை, மீறலை, பரிதவிப்பைப் பேசுகிற படம்தான் இது. அன்பை, காதலை உணர்வுபூர்வமாகக் கையாளணும்.
பிரியம், காதல் எல்லாத்தையும் செஸ் விளையாட்டு மாதிரி ஆக்கிட்டா, காய் நகர்த்தல்லயே நம்ம காலம் முடிஞ்சிடும். உறவுகளை உணர்வோம். காதலைப் பகிர்வோம். அது எப்படின்னு பேசப் போகிற படம்தான் இது. உறவுச் சிக்கல்களை இவ்வளவு சிறப்பாக முன் வைக்கப் போகிற படமாகக் கூட இருக்கலாம். கண்ணியத்தோட நுணுக்கமான சிக்கல்களை அணுகியிருக்கோம். வரைமுறையை மீறாத அழகுணர்ச்சிதான் இந்தப் படத்தின் ஸ்பெஷல். வேறு திசையில் பயணப்படணும்ங்கிற முன் முயற்சி. என்னுடைய குரு செல்வாவுக்கான பரிசளிப்பு இந்தப் படம்.’’

‘‘எல்லாம் புதுமுகங்கள்...’’

‘‘பாலகிருஷ்ணாவும், வாமிகாவும் புதுமுகங்களாக இல்லை. தங்களை அப்படியே ஒப்படைத்து விட்டார்கள். அவர்களை செதுக்கிக்கொள்வது நமது திறமை. எத்தகைய சிறந்த நடிப்பை எதிர்பார்த்தாலும் அதற்கு கள்ளம் இல்லாத ஒத்துழைப்பு. இந்த சினிமாவிற்கு தங்களின் முக்கிய பங்களிப்பைப் பற்றி இருவருமே கவலை கொண்டிருக்கிறார்கள். பாலகிருஷ்ணா, கோலா பாஸ்கரின் மகன்தான். மிகச்சிறந்த நடிப்பு இயல்பை உடையவர். வாமிகா தன் மேல் வைத்திருக்கிற பொறுப்பை உணர்ந்தவர். ஒருவர் மேல் மற்றவர்க்கு இருக்கும் அன்பு, அக்கறையை நடிப்பில் சிறப்பாகப் பகிர்ந்திருக்கிறார்கள். பர்ஃபார்மென்ஸ் பார்த்தால் இன்னும் அவர்களின் வயதைக் கூட்டிச் சொல்ல வேண்டியிருக்கும். இப்ப கிட்டத்தட்ட என் படம் முடிந்துவிட்டது. பார்த்தால் என் தேர்வுகள் எல்லாம் சரிதான்னு தோணுது. டெடிகேட்டட் உழைப்பு, எமோஷனல் நடிப்பு... வாமிகாவையும், பாலகிருஷ்ணாவையும் தமிழ் சினிமா ஞாபகம் வச்சிக்க வாய்ப்பு இருக்கு!’’

‘‘குடும்பம், குழந்தைனு செட்டில் ஆனவர், திடீர்னு சினிமா டைரக்‌ஷனில் இறங்கிட்டீங்களே..?’’

‘‘கல்யாணத்திற்கு முன்னாடி அவர்கிட்டதானே அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணினேன்? அவர் எண்ணம் சினிமாவா உருமாறுகிற - கூடு விட்டு கூடு பாய்கிற வித்தையை - பக்கத்தில் இருந்து பார்த்திருக்கேன். எடிட்டிங்கில் ‘பட்’னு முடிவெடுக்கிற வேகம், காட்சி திருப்தி தருகிற வரைக்கும் நடிகர், நடிகையை அடுத்தடுத்த ஷாட்களின் உள்ளே நுழைக்கிற பக்குவம்... எல்லாத்தையும் பார்த்திருக்கிறேன். குழந்தைகளை என் அப்பா, அம்மா... அவரோட குடும்பம் எல்லாரும் கவனிச்சுக்கறாங்க. அதனால நான் சினிமா உள்ளே நுழைஞ்சிட்டேன். பெண்களுக்கு குடும்பம், கணவர் மீறியும் கவனம் செலுத்த வேண்டிய நல்ல விஷயங்கள் இருக்கு. இப்போ அடுத்த ஸ்கிரிப்ட் ரெடியாகிட்டே இருக்கு. இன்னொரு பக்கம் அவர் சிம்புவோட பண்ற ‘கான்’ ஷூட்டிங் போய்க்கிட்டே இருக்கு. ஷூட்டிங் முடிஞ்சு வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வேகமா பறந்து வந்து ஒட்டிக்குவாங்க. அப்புறம் நாங்க வேற உலகத்திற்குள்ளே போயிடுவோம்!’’

‘‘தனுஷ் என்ன சொன்னார்?’’

‘‘வெரிகுட் கீதா... படத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன். உங்கமேல எனக்கு எக்கச்சக்க நம்பிக்கை இருக்கு. சந்தோஷமா செய்ங்க. என்ன உதவி வேணும்னாலும் கேளுங்கன்னு சொன்னார். சினிமாவில் என்னோட ஈடுபாடு அவருக்குத் தெரியும்!’’

‘‘மியூசிக்கில் அறிமுகம் அமிர்த்ராவ் எப்படி?’’

‘‘மெலடியிலும் குத்துப்பாட்டிலும் தனித்தனியா தெரிகிறார். ஐந்து பாடல்களில் வெரைட்டி காட்டுகிறார். காதல்தான் சினிமாவில் ஒரு அங்கமாக இருக்கு. அருமையான காதல் நம்ம வாழ்க்கையில் வந்தால்தான் தெரியும். எது சந்தோஷம் தருமோ, அதுவே துக்கமும் தரும். உலகத்திலேயே அருமையான விஷயம், அன்பு. ஆனால், அந்த அன்பு தருகிற வலி ரொம்ப வேதனை. வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் நாங்க எடுத்துட்டு வரலை. நாம் கேட்டுக் கேட்டு உணர்ந்த விஷயம்தான் ‘மாலை நேரத்து மயக்கம்’. என் நண்பரும், கணவருமான செல்வா மற்றும் எங்கள் குடும்பத்தினரும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கும்போது இந்தப் படம் செய்றேன். அதுவே எனக்கு மனநிறைவு!’’

- நா.கதிர்வேலன்