ஹீரோ... வில்லன்... இல்லாட்டி கல்யாணம்!



விஜயகணேஷ் விசும்பல்

‘இம்சை அரசனி’ல் நின்று கொண்டே தூங்கும் காவலாளியான இவரது மூக்கில் வடிவேலு தனது மீசையை விட்டு உசுப்புவார்.  ‘எல்லாம் அவன் செயலி’ல் ‘‘அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்தியது போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் கபாலம்’’ என காட்டப்படுவது இவர் தலைதான். வடிவேலுவோடு தொடர்ந்து 8 ஆண்டுகள் திரைப் பயணம்.. அவரோடு மட்டும் 60 படங்களில்  நடித்திருப்பவர் விஜயகணேஷ். திரையுலகில் 300 படங்களைக் கடந்து வெள்ளிவிழா காணும் நடிகர் இவரென்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்!



கே.கே.நகர் ஐயப்பன் கோவில் அருகே ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார் விஜய கணேஷ். நம் உருவை ‘அண்ணே...’ என்றழைக்க ஒரு தனித்துவ மனம் வேண்டும். ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பின்னும் அது தன்னிச்சையாய் வந்து ஒட்டுகிறது விஜய கணேஷிடம்.‘‘ஒரிஜினல் பேரு கணேசன். சினிமாவுக்காக ஸ்டைலா மாத்திக்கிட்டேன். சொந்த ஊர் அறந்தாங்கி பக்கம் மணமேல்குடி கிராமம். எங்க அப்பா கிராமியப் பாடகர். வீட்டுக்கு நான் மூத்த புள்ள. கூடப் பிறந்தவங்க 5 தம்பிங்க... 2 தங்கச்சிங்க. சின்ன வயசிலேயே சினிமா ஆசை... படிப்பு ஏறல. ஊர்ல நடக்கிற ‘ரதி மன்மதன்’ நாடகத்துலல்லாம் வேஷம் கட்டியிருக்கேன்.



இப்போதான் என் மண்டை மைதானமா இருக்கு. அப்போ எனக்கு கர்லிங் ஹேர். ஹீரோ மாதிரி சிக்குன்னு இருப்பேன். ‘ஒருதலை ராகம்’ வந்த டைம் வேறயா! ‘சினிமாவில ட்ரை பண்ணு’ன்னு என் நண்பர் ராஜேந்திரன்னு ஒருத்தர் அட்வைஸ் பண்ணினார். அது டி.ராஜேந்தர் சாரே சொன்ன மாதிரி இருந்தது எனக்கு!’’ - ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு பழைய போட்டோ ஒன்றைக் காட்டுகிறார். கேன்வாஸ் ஷூ, ஜீன்ஸ் - டீ ஷர்ட் சகிதம் கராத்தே ஸ்டெப்பில் முறைத்து நிற்கிறார் அதில்!  ‘‘ஊர்ல யார்கிட்டயும் சொல்லிக்கல. சென்னைக்குப் போனா கஷ்டப்படணும். அது தெரியும். சின்ன வயசில இருந்து கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவன்தானே... நாம பாக்காததான்னு துணிச்சல்ல ஓடி வந்துட்டேன். இங்க எங்க ஊர்க்காரர் ஒருத்தர் சின்னதா ஒரு ஓட்டல் வச்சிருந்தார். ‘மொதல்ல இருக்க இடமும் சாப்பாடும் கிடைக்கிற மாதிரி ஒரு வாழ்க்கையைத் தேடிக்கோ’ன்னு சொல்லி பிளாட்பாரக் கடை ஒண்ணுல என்னை சேர்த்துவிட்டார். வேலை செய்யிற நேரம் போக கிடைக்கிற இடைவெளியில மேடை நாடகம் நடிக்கப் போனேன்.



‘வெளிச்சம்’... அதான் சினிமாவில் முதன்முதலா நான் தலைகாட்டின படம். அதுக்கு அப்புறம் ‘இணைந்த கைகள்’ படத்தில் நாசரோட கையாளா வருவேன். அந்தப் படத்துக்கு அப்புறம் எங்க ஊர்ல எனக்கு சினிமாக்காரன்னு நல்ல மதிப்பு. கர்லிங் முடி ஹீரோ கனவை உசுப்பிக்கிட்டே இருந்ததால, ஹீரோவா நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல வில்லனாகவும் முயற்சி பண்ணினேன். எதுவுமே நடக்கல!
 
சினிமாவில் எப்போ வேணா சாதிக்கலாம். ஆனா, வயசு போச்சுனா யாரும் பொண்ணு தர மாட்டாங்க. கர்லிங் ஹேர் கொட்டுறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுப்புடணும்னு 1995ல அந்த முக்கியமான முடிவை எடுத்தேன். சொந்தத்துல பொண்ணு. மேரேஜ் முடிச்ச மறு வருஷமே சினிமா இண்டஸ்ட்ரியில ஸ்டிரைக். பொழப்பு இல்ல. மறுபடியும் நாடகம் பக்கம் போனேன். ஒய்.ஜி.மகேந்திரன் சாரோட நாடகத்துல நடிக்கக் கேட்டு போனப்போ, ‘உன் முகம் காமெடி முகம். மீசையை எடுத்திடு. காமெடிக்கு நல்லா செட் ஆகும்’னு அவர் சொல்ல, மீசையை எடுத்துட்டேன். அவர் சொன்ன மாதிரியே அதுக்கப்புறம் சினிமாவில் நிறைய வாய்ப்புகள். கவுண்டமணி- செந்தில் அண்ணன்களோடு நிறைய படங்கள் வந்துபோயிருக்கேன். பிடிச்சுப் போச்சுன்னா, கவுண்டமணி சாரே நிறைய படங்களுக்கு நம்மளை சிபாரிசு பண்ணுவார். நல்ல மனுஷன்.

சுசீந்திரன் சாரோட சித்தப்பா ராஜசேகர் இயக்கின ‘புத்தம் புது பூவே’ பட ஷூட்டிங்கில் வடிவேலு சாரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்க சிங்கமுத்து அண்ணே, போண்டாமணி அண்ணே எல்லாரும் வடிவேலு சார்கிட்ட என்னைப் பத்திச் சொல்ல, ‘ஆபீஸ்ல வந்து பாரு’ன்னு சொன்னார். அஜித் சாரோட ‘ராஜா’ படத்துலதான் முதன்முதலா வடிவேலு சாரோட சேர்ந்து நடிச்சேன். அதுக்கப்புறம் அவரோட படங்கள் எல்லாத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுப்பார். என்னை முதன்முதலா விமானத்தில் அழைச்சுட்டுப் போனவர் வடிவேலு சார்தான். விவேக் சார், கஞ்சா கருப்புன்னு எல்லாரோடவும் படங்கள் பண்ணியிருக்கேன். வி.சேகர் சார், ஹரி சார் எல்லாம் அவங்க கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி எனக்கு சான்ஸ் கொடுத்துடுவாங்க. இப்போ பத்து படங்கள்ல நடிக்கிறேன். நிறைய விளம்பரப் படங்கள்லயும் நடிக்கக் கூப்பிடுறாங்க.

மனைவி பேரு ராஜேஸ்வரி. ரெண்டு பசங்க. பெரியவன் விஜயகுமார், டிப்ளமோ படிக்கிறான். சின்னவன் ராஜ்குமார், பி.காம் படிக்கிறான். ஷூட்டிங் இல்லேன்னா வருமானம் பாதிக்கக் கூடாதுனு சொந்தமா ‘வி.ஆர் கலைக்குழு’ன்னு ஆரம்பிச்சு, உள்நாடு, வெளிநாடுகள்ல நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள் நடத்திட்டு வர்றேன். இலங்கை போயிருந்தப்போ அங்கே வசிக்கற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிலரை சந்திச்சேன். அவங்க என்னோட சொந்த பந்தங்கள்னு தெரிந்து சந்தோஷப்பட்டேன்.

வடிவேலு சார் பழைய மாதிரி படங்கள் பண்ணாததால, எனக்கு பொழப்பு கொஞ்சம் டல்தான். ஆனா, அவரோட வேலை செஞ்ச அனுபவங்களை வச்சு, ஒரு காமெடி சப்ஜெக்ட் ரெடி பண்ணியிருக்கேன். இப்போ சினிமா மாறிப் போச்சு. எதுவுமே சட்டு சட்டுன்னு சலிச்சிடுது மக்களுக்கு. ஆனா, நல்ல விஷயமா இருந்தா போதும்... அதைக் கொடுக்குறது யார்னு கூடப் பார்க்காம அங்கீகரிக்கிறாங்க. ஒரு முழு நீள காமெடி படம் இயக்கப் போறேன்னு நான் சொல்றேன்னா அது அந்த தைரியத்துலதான்!’’

 ‘உன் முகம் காமெடி முகம். மீசையை எடுத்திடு. காமெடிக்கு நல்லா செட் ஆகும்’னு ஒய்.ஜி.மகேந்திரன் சார் சொல்ல, மீசையை எடுத்துட்டேன்!

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சி.எஸ்