அழியாத கோலங்கள்
இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் சொன்ன விஷயம்தான் கமல் பற்றி எழுதும்போது நினைவுக்கு வருகிறது... ஒருவன் மற்றவர்கள் ஒப்புக்கொள்ள முடியாத அளவு வெற்றியை நோக்கிப் பயணம் செய்யும்போது, ‘எங்கேயாவது கால் இடறுகிறதா?’ என்று தேடுவார்களாம். மற்ற உலகப் புகழ் நடிகர்களெல்லாம் செய்த அதே காரியத்தை அவர்கள் போல் மறைக்காமல் ‘ஆம், செய்தேன்! அது என் சொந்த சமாசாரம். நான் செய்யும் படங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!’ என்று கமல், இப்படித் தேடும் பட உலக வக்கீல்களுடன் எதிர்வாதம் செய்து கெட்ட பெயர் வாங்குவார்.
கமலை மணந்துகொண்டு வாழ முயற்சித்த பெண்கள் எல்லோருக்கும் நானொரு தடைக்கல் போல் தோன்றியிருக்கிறேன். ஒரு பெண்மணிக்கு கமல் மேல் காதல். என் நண்பரான ஒரு டாக்டரிடம் அவருக்கு நட்பு. ஒரு நாள் அந்த டாக்டர் நண்பர் என்னிடம், ‘‘அந்தப் பெண்ணை என்னப்பா கொடுமைப்படுத்தினாய்? ‘அண்ணன் மண்டையைப் போட்டாத்தான் தம்பி எனக்குக் கிடைப்பான்’ என்கிறாளே!’’ எனச் சொன்னார்.
உடனே நான் ஒரு காதல் துரோகி என்று கணக்கிட்டு விடாதீர்கள்! ஒரு பெண் ஆணின் மீது கொள்ளும் காதலுக்கு நிறைய கணக்குகளும் மதிப்பீடுகளும் தேவைப்படுகின்றன. அவன் நடை, உடை, பாவனை... மீசையின் அழகு... உயரம், தசைநார்களின் அமைப்பு... அவன் உடன்பிறப்புகள், தாய் - தந்தையர்... சமூகத்தில் அவனுக்கு உள்ள பெருமை... அவன் மாதா மாதம் வாங்கும் சம்பளம்... இப்படி எல்லாவற்றையும் எடை போட்டு மொத்த மதிப்பீடு செய்து முடிவு செய்யப்படுவதற்கு ‘காதல்’ என பெயர் வைக்கிறார்கள் பல பெண்கள்.
ஆனா ஒரு பெண் மீது ஆண் கொள்ளும் காதலில் மேலே சொல்லப்பட்ட மதிப்பீடுகள் இல்லை. பழைய கதைகளையும் காவியங்களையும் பார்த்தால்... அழகுக்கு ஒரு மனைவி... அறிவுக்கு ஒரு மனைவி... வாரிசுகள் தொடர ஒருத்தி... என்று உதாரண புருஷர்கள் பலரும் பெண்களை ஒரு கன்ஸ்யூமர் ப்ராடக்ட் ஆக்கியிருக்கிறார்கள். தசரதருக்கு 60 ஆயிரம் மனைவிகளாம்... தினம் ஒரு மனைவியைத் திருமணம் செய்ததே பரசுராமன் கோடரியிலிருந்து தப்புவதற்கு! அதே போன்ற ஒரு தற்காப்பு முறைதான் தர்மேந்திராவும் இங்கே சில நடிகர்களும் இரண்டாம் மனைவியை இஸ்லாமிய முறையில் திருமணம் செய்துகொண்டது. இருதார மணத்தடை சட்டத்தின் கீழ் சிறை செல்லாமல் இருக்க இது உதவியது!
நான் இப்படி எழுதுவதை ஒப்புக்கொள்ளாத ஒரே ஒரு நபர்... ஒரு முனைவர் அளவு படிப்பறிவு பெற்ற திருமதி சாருஹாசன். இன்றும் நான் சிந்திக்க மட்டும் செய்கிறேனே ஒழிய, அவர்தான் தமிழில் சொல்லி ஆங்கில மொழிபெயர்ப்பு இட்டும், ஆங்கிலத்தில் கேட்டு தமிழ் மொழிபெயர்ப்பும் பெற்று, வாய்க்கு வந்ததை எழுதுகிறார். கட்டுரையில் நான் பெயரைத் தட்டிக்கொண்டு போவது எனக்கே ஒரு திருட்டுத் தொழில் போலத் தோன்றுகிறது.
பல வருடங்களுக்கு முன்... திருமண வாழ்க்கை அலுத்துப் போன கமல் - வாணி கணபதி ஜோடிக்கு நாங்கள் நம்ம ஊர் ஃபேமிலி கோர்ட் செய்வது போல் ஒரு சமாதான லோக்பால் நடத்தினோம். எங்கள் பேச்சுவார்த்தைக்கு ‘கட்டைப் பஞ்சாயத்து’ என்று பெயர் கொடுப்பது கொஞ்சம் ஓவராக இருக்கும். ஒரு ‘மொட்டைப் பஞ்சாயத்து’ நடத்தினோம் என சொல்லலாம். குறுக்கு விசாரணை செய்ய முடியாத அளவுக்கு வாக்கு மூலங்கள் கோடை மழை போல் பொழிந்தன. ‘‘என் வீடு, என்னுடைய நாய், என்னுடைய தோட்டம், என்னுடைய டி.வி, என்னுடைய கேமரா என்று சொல்லிக்கொண்டே போகிறாளே... காலை முதல் மாலை வரை நடித்து, உடல் நொடித்து வருபவன் நான். என்னுடையது என்று ஒன்றுமே கிடையாதா?’’ - இது கணவன். ‘‘நேற்று மாலை இவர் இரண்டு மணி நேரம் நடிகை சரிகா அறையில் இருந்திருக்கிறார். ஆன் தட் ஒன் கிரவுண்ட், ஐ கேன் டைவர்ஸ் யூ!” - இது மனைவி.
மூத்த தம்பதிகளாகிய நாங்கள், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் பற்றி உணர்ச்சிகரமான விளக்கங்கள் கொடுத்து... திரிசங்கு சொர்க்கத்தில் நடக்கும் விவாகரத்து வழக்குகளை இன்னுமொரு விஸ்வாமித்திரர் உதவியுடன் மறைத்து... ஒருவேளை சாப்பாட்டை லஞ்சமாகக் கொடுத்து ‘இருவரையும் சமாதானப்படுத்தி இணைத்துவிட்டதாக’ நம்பி அனுப்பி வைத்தோம். தம்பி கமலுக்கு நான் சீமைச்சாராயம் அருந்துவது பிடிக்காததால், அவர்கள் போன பிறகு என் ரவுண்டுகளை ஆரம்பித்தேன். அன்று என் மூத்த மகள் - எம்.டி முடித்து மருத்துவராக இருப்பவர் - தனது வேலையிலிருந்து திரும்பவில்லை. மணி இரவு பத்தாகி விட்டது. ஒரு குடும்பத் தலைவனின் பொறுப்புடன் கேட்டேன்... “ஒய் மை டாட்டர் இஸ் நாட் பேக் ஃப்ரம் ஹாஸ்பிடல்?’’
உடனடி பதில்... ‘‘மிஸ்டர், அன்லெஸ் ஐ டெல் யூ, ஷி கான்ட் பி யுவர் டாட்டர்..!’’ ‘‘தட் வாஸ் குட் ஒன்!’’ என்று சொல்லிவிட்டு அடுத்த ரவுண்டை ஆரம்பித்தேன். அதற்கு ஒரு எதிர்வினை... “மிஸ்டர், யூ ஆர் கோயிங் ஆன் ஃபோர்த் ரவுண்ட்... ஆன் தட் ஒன் கிரவுண்ட், ஐ கேன் டைவர்ஸ் யூ!” நான் எழுந்து தலை வணங்கி, ‘‘மேடம்! ஐ ஒர்ஷிப் தி கிரவுண்ட் ஆன் விச் யூ டைவர்ஸ் மீ...’’ ‘‘குட் ஒன்! வாங்க சாப்பிடலாம்...’’ என்றார். முடித்தோம்!
"பல வருடங்களுக்கு முன்... திருமண வாழ்க்கை அலுத்துப் போன கமல் - வாணி கணபதி ஜோடிக்கு நாங்கள் நம்ம ஊர் ஃபேமிலி கோர்ட் செய்வது போல் ஒரு சமாதான லோக்பால் நடத்தினோம்." (நீளும்...)
|